பாவண்ணன்
நண்பருடைய மகளுக்குத் திருமணம் நடந்தது. விருந்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பை இன்னொரு நண்பரிடம் கொடுத்திருந்தார் அவர். ஆள்வைத்துச் சமைப்பதா அல்லது மண்டபத்துக் காரர்களிடமே எல்லா ஏற்பாடுகளையும் செய்யச்சொல்லி விட்டுவிடுவதா என்பதில் நீண்ட நேர விவாதம் நடந்தது. முடிவுக்கே வராமல் ஆளாளுக்கு ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். திருமணத்துக்கென்று சமைத்துக்கொடுக்கும் ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும் நம் தேவைகளை அவர்களிடம் சொன்னால் கச்சிதமாகக் கொண்டு வந்து குறிப்பிட்ட நேரத்துக்கு இறக்கி விடுவார்கள் என்றும் சொன்னேன். உடனே இந்தத் திட்டம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில் விருந்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு என்னுடையதாகி விட்டது.
இதுபோன்ற விருந்து ஏற்பாடுகளைப் பலமுறை அலுவலகக் காரணங்களுக்காகச் செய்ததில் ஒப்பந்தக்காரர்கள் சிலரைத் தனிப்பட்ட முறையில் அறிவேன். அதனால் திருமணவிருந்தின் பொறுப்பை ஏற்பதில் எந்தச் சிரமமும் இல்லை. அதனால் விருந்தில் என்னென்ன இடம்பெறவேண்டும் என்று பட்டியலிடத் தொடங்கினேன். அவர்கள் ஒவ்வொரு பண்டத்தின் பெயரைச் சொல்லச்சொல்ல எழுதி முடித்தேன். மாலையில் நானும் நண்பருமாகச் சென்று ஒப்பந்தக்காரரைப் பார்த்துப் பேசி முன்பணம் கொடுத்துவிட்டுத் திரும்பினேன். ஆனாலும் நண்பருக்குக் கலக்கம் போகவில்லை. சரியாக நடக்குமா, ஏதாவது தவறிவிடுமா என்றெல்லாம் தடுமாறிக்கொண்டிருந்தார். சொன்ன பண்டங்களைச் சரியாகச் செய்வது, தன் இடத்திலிருந்து மண்டபத்துக்குக் கொண்டுவருவது, விநியோகிப்பது, திரும்பக்கொண்டு செல்வது வரையில் எல்லா வேலைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லி அவர்களை அமைதிப்படுத்தினேன். ஏறத்தாழ ஐந்நுாறு பேரை அவர்கள் எதிர்பார் த்தார்கள்.
திருமணம் நல்லபடி நடந்தது. விருந்துக்கான உணவுவகைகளும் உரிய நேரத்தில் வந்து இறங்கின. முதல் பந்தியை முடித்துவிட்டு வெளியெ வந்தவர்கள் விருந்தின் தரத்தைப் பாராட்டிச் சொன்னபிறகுதான் நண்பருடைய முகம் மலர்ந்தது. விருந்து மண்டபத்திலிருந்து விலகி வேறு வேலைகளைக் கவனிக்கச் சென்றார். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. ஐந்நூறு பேர்கள் என்ற அவர்கள் போட்டிருந்த கணக்கில் ஏதோ பிசகு ஏற்பட்டுவிட்டது. நாலாவது பந்தி நடந்துகொண்டிருக்கும்போதே ஒப்பந்தக்காரர் என்னை நெருங்கிவந்து காதருகே சொன்ன அளவைக்காட்டிலும் ஆள்கணக்கு அதிகரித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அறுநூறு பேர்களை நெருங்கியபடி இருந்தது எண்ணிக்கை. நண்பரை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அதுவரை பல ஆண்டுகளுக்குப்பிறகு சந்திக்க நேர்ந்த நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்துப் பேசியதில் உருவான பரவசத்தில் மிதந்தபடி இருந்தவர் அப்படி ஒரு நெருக்கடி நேரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பதற்றத்தில் அவர் முகம் வியர்த்தது. ஒப்பந்தக்காரர் அறுநூறு என்றாலும் பரவாயில்லை, அதற்கும் மேல் போய்விட்டால்தான் சிக்கல் என்று சமிக்ஞை கொடுத்துவிட்டுச் சென்றார்.
நேரம் இரவு ஒன்பதரையைத் தாண்டியது. அதிர்ஷ்டவசமாக ஒப்பந்தக்காரர் சொன்ன எண்ணிக்கையின் எல்லையைத் தாண்டாமல் விருந்து முடிந்தது. பாத்திரங்கள் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. அப்போது திடுமென புதிய பிரச்சனை தோன்றியது. மதியத்திலிருந்து திருமண வரவேற்புக்கான பல வேலைகளில் ஈடுபட்டிருந்த முப்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவில்லை என்கிற விஷயம் எல்லாருக்கும் சங்கடமளித்தது. துருவி விசாரித்ததில் ஒப்பந்தக்காரர் தம்முடன் அழைத்து வந்த பணியாட்கள் பதினேழு பேர்களும் கூட உண்ணவில்லை என்கிற விஷயம் அம்பலமானது. நண்பர் உண்மையிலேயே பதறிப்போனார். தம் வீட்டு விசேஷத்துக்கு வந்தவர்களும் தமக்காக வேலை செய்தவர்களும் பசியாறிவிட்டுச் செல்ல வழியில்லை என்கிற சங்கதியால் மனமொடிந்து போனார் அவர். யாரும் உண்ணாமல் வெளியே செல்வதில் அவருக்கு விருப்பமில்லை. நானும் அவரும் இறுதியாகச் சாப்பிடலாம் என்று பசியைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தோம். ஆனால் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பசி போன திசையே தெரியவில்லை.
உடனடியாக ஐம்பது சாப்பாடு தேவை. நேரம் பத்தைத் தொட்டுக்கொண் டிருந்தது. ஏதாவது செய்யவேண்டுமே என்று ஒப்பந்தக்காரரிடம் மன்றாடினேன். அவர் எல்லாருக்கும் பணமாகக் கொடுத்துவிடலாமா என்று யோசனையை முன்வைத்தார். நண்பர் விருந்தாகத்தான் தரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். சமைப்பதென்றால் எப்படியும் இன்னும் ஒருமணிநேரமாவது கடந்துபோகும் என்றார். கையிலிருந்த செல்தொலைபேசியில் தமக்குத் தெரிந்த இடங்களுக்கெல்லாம் மாற்றிமாற்றிப் பேசினார். பதற்றத்துடன் நாங்கள் அவர் வாயையே பார்த்தபடி நின்றிருந்தோம். ஓர் எண்ணிலிருந்து சாதகமான தகவல் வந்தது. வண்டியில் வந்து சேர்வதற்குள் ஐம்பது சாப்பாடு தயாராக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் விலைதான் ஒன்றரை மடங்கு. நண்பர் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம் என்றார். உடனே வரவழையுங்கள் என்றார். ஒப்பந்தக்காரரின் வண்டி உடனே வெளியேறியது. அரைமணிநேரத்தில் உணவுப் பாத்திரங்களுடன் திரும்பி வந்தது.
எல்லாரும் சாப்பிட்டு முடித்தார்கள். அனைவருக்கும் தாம்பூலம் வழங்கினார் நண்பர். அப்போதுதான் அவர் முகம் மலர்ந்தது. ஒப்பந்தக்காரரின் கணக்கையும் உடனே முடித்து வைத்தார். எல்லாரும் நன்றி சொன்னபடி வெளியேறினார்கள். அதற்குப் பிறகுதான் நண்பரும் அவர் மனைவியும் நானும் மற்ற நண்பர்களும் சாப்பிட்டோம். அவர்கள் சாப்பிடாமல் சென்றிருந்தால் தன்னால் ஒருவாய் உணவைக்கூட உட்கொண்டிருக்க முடியாது என்றும் அக்குற்ற உணர்வு காலமெல்லாம் மனத்தில் தங்கி அரித்துக்கொண்டே இருக்கும் என்றும் சொன்னார்.
நண்பரின் மனவிரிவை நினைத்துப் பெருமையுற்றேன். அவர் எண்ணங்கள் மகத்தானவை. அவரை நினைக்கும் போதெல்லாம் மற்றவர்கள் சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன, தம் வயிற்றை நிறைத்துக்கொள்வதில் குறியாக நடப்பவர்களைப்பற்றி ஜே.வி.நாதன் எழுதிய கதையொன்றும் தவறாமல் நினைவில் படரும்.
தாமரைப்பாளையச் சக்கிலி வளவுகளிலிருந்தும் அக்கம்பக்கத்துச் சேரிகளிலிருந்தும் நண்டும் குஞ்சுகளுமாகக் குடும்பங்கள் மலைக் கன்னியாத்தா கோயிலை நோக்கி நடக்கும் காட்சியிலிருந்து தொடங்குகிறது கதை. மலையிலிருக்கும் கன்னியாத்தா கோயிலுக்குச் செல்லும் பாதையை ஊர்முறைச் சக்கிலியர்கள் ஒரு வாரமாக எங்கேயும் வேறு வேலைகளுக்குப் போகாமல் பாடுபட்டுச் சுத்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அடிவாரத்தில் ஊர்க்காரர்களின் கார்களும் வண்டிகளும் நிற்பதற்குத் தோதாக சீர்ப்படுத்திப் பந்தல் கட்டிவைத்திருக்கிறார்கள். கன்னியாத்தா கோயிலில் பிள்ளைத் தவபூசை நடக்கவிருப்பதை ஒட்டி இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன. திருவிழா அன்று குலம் விளங்கப் பிள்ளைகளைக் கொடுத்த குலதெய்வத்துக்கு நன்றிக்கடனாக ஆடுகளை வெட்டி ஏழை எளியவர்களுக்குக் கறியுஞ் சோறுமாக அன்னதானம் செய்வார்கள். பாதை வெட்டிச் சுத்தப்படுத்தியவர்கள் என்கிற உரிமையிலும் ஊர்ப்பங்குக்குக் குறைவிருக்காது என்கிற நம்பிக்கையிலும் அபூர்வமாகக் கிட்டுகிற கறிச்சோற்றை ருசி பார்க்கும் ஆவலிலும் சக்கிலிக் குடும்பங்கள் பரபரப்புடன் மலையில் ஏறுகிறார்கள்.
பிரசவம் எந்தச் சமயத்திலும் நேரலாம் என்கிற நிலையில் இருக்கிற வயிற்றுப் பிள்ளைக்காரி குஞ்சாள் தம் பிள்ளைகளோடும் பாத்திரங்களோடும் ஆயாசத்துடன் மலையேறுகிறாள். தடுத்துப் பார்க்கிற மற்ற பெண்களிடம் தன் பெரிய பெண்ணுக்கு அந்த அளவு திறமை போதாது என்றும் நெரிசலாக இருக்கும் கூட்டத்தில் ஊர்முறைக்கார மாதாரிச்சி என்ற சொன்னால்தான் கூடுதலாகக் கறியும் சோறும் கிடைக்குமென்றும் இல்லாவிடில் எலும்புத் துண்டுகளைப்போட்டு ஏமாற்றிவிடுவார்கள் என்றும் சொல்கிறாள் குஞ்சாள்.
மிகவும் சிரமப்பட்டு மலைஉச்சியை அடைந்த களைப்பில் ஒரு பாறையின் ஓரமாகச் சாய்ந்து உட்கார்கிறாள். அங்கிருந்தபடியே கொப்பரைகளில் கொதித்துக்கொண்டிருக்கும் தண்ணீரில் களைந்த அரிசியைப்போட்டு அகப்பையால் துழாவுவதையும் மறுபக்கத்தில் ஆடுகளையும் கோழிகளையும் யார்யாரோ பிடித்துக்கொண்டு நிற்பதையும் ஏக்கமாகப் பார்க்கிறாள். அந்த நேரம் பசி தாளமால் அவளுடைய நாலாவது பெண்குழந்தை வந்து அழுகிறது. இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் என்று சொன்னதைக் கேட்காமல் தொடர்ந்து அடம்பிடித்ததால் அடிக்கிறாள். அடி தாளாமல் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு தப்பட்டை அடித்துக்கொண்டிருந்த அவள் கணவன் முத்தன் ஓடோடி வந்து அழும் குழந்தையை அமைதிப்படுத்திவிட்டுச் செல்கிறான். அதைத்தொடர்ந்து ஆடுவெட்டும் வைபவம் நடக்கிறது. தலையைத் தறித்த முண்டத்தின் துடிப்பையும் அதிலிருந்து ஊற்றுப்போல பீறிட்டுக் கிளம்பிய குருதியையும் பார்த்ததில் குஞ்சாளுக்கு மயக்கம் வருவதைப்போல இருக்கிறது. மொத்தம் இருபது ஆடுகள் பலியிடப்படுகின்றன. நாசுகர்களும் ஏகாலிகளும் சாணார்களும் எல்லா ஆடுகளையும் மரக்கிளைகளில் பின்னங்கால்களைக் கட்டித் தொங்கவிட்டுத் தோலுரிக்கத் தொடங்குகிறார்கள். பிள்ளைத்தவ பூசைக்கு விரதமிருக்கும் பெண்களை முன்னால் வரச்சொல்லி கோழிகள் இருபத்தேழையும் மும்மூன்றாகப் பிடித்து அவர்கள் தலையயை ஒன்பது சுற்றில் திருஷ்டி கழித்த பூசாரி கோழிகளைத் தம் உதவியாளனிடம் கொடுக்கிறார். முறைப்படி அக்கோழிகள் தமக்கே சொந்தமாக வேண்டும் என்று வாதிட்டுத் தோற்கிறான் முத்தன்.
கடைசியில் விருந்து தயாராகிறது. குஞ்சாளின் பசி மயக்கம் உச்சத்துக்குச் செல்கிறது. முதலில் மேல்சாதிக்காரர்களுக்கான பந்தி தொடங்குகிறது. அடுத்தடுத்து நான்கு பந்திகள் அவர்களுக்கே நடக்கின்றன. பிறகுதான் சாணான், சக்கிலி, பறையர், பள்ளு, நாசுகர், ஏகாலிக் கும்பலுக்குச் சோறு போடத் தொடங்குகிறார்கள். கூட்டம் நெருக்கியடித் து முன்னேறுவதைப் பார்த்தபிறகு வரிசையில் வரச்சொல்கிறார்கள். பத்துப் பதினைந்து பண்ணையாட்கள் அதிகாரம் செய்து வரிசையைச் சீர்செய்கிறார்கள். கும்பலில் முன்னேற முடியாத குஞ்சாள் வரிசையில் பின்னால் நிற்கிறாள். வயிற்றுச் சுமையுடன் பசிக்களைப்பும் சேர்ந்துகொள்ள முன்பக்கம் நிறுத்தப்பட்டுள்ள கறிப்பாத்திரங்களின்மீது பார்வையைப் பதித்தபடி நகர்கிறாள். கறி சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டதை ஞாபகப்படுத்திக்கொள்ளும் தனக்கு எப்படியும் ஈரல் துண்டுகளும் கொழுப்பும் கிடைக்காமல் போகாது என்னும் நம்பிக்கையுடன் கறிவாசம் பிடித்தபடி நடக்கிறாள்.
குஞ்சாளின் முறை வந்ததும் பானையிலும் போசியிலும் சோற்றைப் போடுகிறான் பண்ணைக்காரன். குழம்பு ஊற்றுகிறவன் அகப்பையை தவலையில் விட்டுத் துழாவியபோது ஆவல் தாங்காத குஞ்சாள் ஈரல் துண்டுகள் இருந்தால் போடுமாறு கேட்கிறாள். ஏஈரலா.. ஆகா, அதுக்கென்ன, போட்டுட்டா போச்சிஏ என்று பேசிச் சிரித்துக் கண்சிமிட்டியதைக் குஞ்சாளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அப்பாவித்தனமாக வெற்றுப் பாத்திரத்தை அவன்முன் நீட்டுகிறாள். அவன் ஒரேயடியாகச் சிரித்தபடி எலும்புத் துண்டுகளை எடுத்துப்போட்டுக் குழம்பு ஊற்றுகிறாள். ‘கறி ?..கொழுப்பு ? ‘ என்று ஏக்கத்துடன் கேட்கிறாள் குஞ்சாள். அவள் நிலையைக் கண்டு மனம் இரங்கிய பண்ணைக்காரன் அவள் காதுக்கு மட்டும் கேட்கிற மாதிரி குனிந்து ‘கறி, ஈரலு, கொளம்பு எல்லாம் எசமாங்கமாருங்களுக்கு போட்டாச்சி. மீதிப் பேருக்கெல்லாம் எலும்புத் துண்டுங்களைப் போட்டு ரசம் வெச்சு வெளாசச் சொல்லி எசமாங்மாரு உத்தரவு ‘ என்கிறான். அதைக் கேட்டதும் அவள் தலை சுற்றுகிறது. மயக்கத்தில் கீழே சரிகிறாள். அவள் விழுந்ததைக் கண்டதும் அவளுடைய குழந்தைகள் சுற்றி நின்றி அழுகிறார்கள். ‘என்ன ஆச்சு ? ‘ என்று சிலர் இவளைச் சூழ வருவதையும் யாரோ ஒருவன் ‘வவுத்துப் புள்ளயோட மலை ஏறி வந்து ஏந்தச் சோத்த வாங்கித் தின்னாட்டித்தான் என்ன ? ‘ என்று சொல்கிறான். எல்லாருக்கும் கிடைக்கிற சோறு மயக்கத்தில் கிடப்பதால் குஞ்சாளுக்கு இல்லாமல் போகிறது.
ஒரு கிராமத்தில் ஒவ்வொரு சாதிக்கும் இருக்கும் வேலைகள், பங்குகள், மதிப்புகள் என்பவைபோன்ற தகவல்கள் இக்கதையில் துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. மேல்சாதிக்காரர்களின் புறக்கணிப்பும் பாராமுகமும் நுட்பமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. மேல்சாதிக்காரர்கள் நேரிடையாகக் கதையில் எங்கும் தலைகாட்டவில்லை. ஆனால் மறைமுகமாகவே விருந்தை இயக்குகிறார்கள். யாருக்கு எப்படிப் பரிமாறப்படவேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். தமக்காக முட்காடாக இருந்த இடத்தைச் சீர்ப்படுத்தியவர்கள், பாதையைச் செப்பனிட்டவர்கள் பந்தல் கட்டியவர்கள், தாரை தப்பட்டை அடித்தவர்கள் வயிறார உண்ணவேண்டுமே என்கிற அக்கறை அவர்களுக்கு இல்லை. அவர்கள் உண்ணாததைப்பற்றித் துளியும் குற்ற உணர்வுமில்லை. அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையுமே மேல்சாதிக்காரர்களின் குணங்களாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதில் தவறில்லை.
மேல்சாதிக்காரர்கள் விருந்துண்ணும்போது காக்கைகள் தாழ்வாகப் பறந்துவந்து கத்திக்கரைகிற குறிப்பும் அவர்கள் விரட்டியடிக்கும் குறிப்பும் கதையில் முக்கியமாக இடம்வகிக்கின்றன. காக்கையை விரட்டியடிப்பதைப் போலவே மேல்சாதிக்காரர்கள் தாழ்ந்த சாதிக்காரர்களுக்குக் கறிக்குழம்பை மறுக்க்ிறார்கள். காக்கைகளை விரட்டிவிட்டு உண்ணுகிற மாதிரி தாழ்ந்த சாதிக்காரர்களுக்கும் ஏதோ காரணம் சொல்லி அனுப்பிவிட அவர்களால் முடிகிறது. குஞ்சாள் மயங்கி விழுந்ததும் ‘வவுத்துப் புள்ளயோட மலை ஏறி வந்து ஏந்தச் சோத்த வாங்கித் தின்னாட்டித்தான் என்ன ? ‘ என்று குரலெழுப்புவது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லாமல் முடிகிறது கதை. இது மேல்சாதிக்காரனுடைய குரலா, தாழ்ந்த சாதிக்காரனுடைய குரலா என்கிற குழப்பத்தின் பின்னால் எந்தச் சாதிக்காரனாக இருந்தாலும் பெண்களைப்பற்றிய பார்வையும் விமர்சனமும் ஒன்றாகத்தான் இருக்கிறது என்கிற தெளிவான உண்மை ஒளிந்திருப்பதைக் கண்டறிய முடியும்போது கதையின் களம் மேலும் விரிவாகிறது. தப்பட்டை அடித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் அழுகிற குழந்தையைத் தொலைவிலிருந்து பார்த்ததும் ஓடோடி வந்து ஆறுதல் சொல்கிற கணவனான முத்தன் தன் மனைவி கீழே விழுந்ததைக் கண்டானா இல்லையா என்கிற கேள்வியும் கண்டிருந்தால் அவன் எதிர்வினை என்னவாக இருக்கும் என்கிற பதிலையும் நாமே சித்தரித்துக்கொள்ளும் திசையில் வெகுதொலைவு பயணப்படமுடியும். கோழிகளைப் பூசாரியின் ஆள்கள் கொண்டுசெல்வதைச் சின்ன முணுமுணுப்போடு பார்த்துக்கொண்டிருந்தவன் அவன் என்கிற குறிப்பும் முக்கியமானது. அத்தகையவன் தமக்குக் கிடைக்கவேண்டிய கறித்துண்டுகளையெல்லாம் மேல்சாதிக்காரர்களே சாப்பிடுகிறார்கள் என்கிற விஷயத்தை அறிந்தாலும் பசிமயக்கத்தில் மனைவி சரிந்துவிழுந்ததை அறிந்தாலும் பெரிசாக எதையும் செய்துவிடமாட்டான் என்று உணர்த்தவந்த குறிப்பே அது.
*
ஜெயகாந்தனுடைய பார்வையாலும் படைப்புகளாலும் பாதிக்கப்பட்டு படைப்பாளிகளாக மலர்ந்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர் ஜே.வி.நாதன். தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களுடைய அவலங்களையும் வாழ்க்கை நிலைகளையும் உணர்வு மாற்றங்களையும் தம் படைப்புகளில் அதிக அளவில் பதிவு செய்தவர். ஒருவகையில் தலித் இலக்கிய வகையின் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவராக இவரைக் குறிப்பிடலாம். எழுபதுகளில் வெளிவந்த ‘தேன்மழை ‘ என்னும் மாணவர் இதழ் பல முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகளைத் தாங்கிவந்தது. ‘விருந்து ‘ என்னும் இக்கதை 1973 ஆம் ஆண்டில் தேன்மழை இதழில் வெளிவந்தது. இலக்கியச் சிந்தனை அமைப்பால் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
paavannan@hotmail.com
- மணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்
- வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)
- விண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822
- சூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்
- ஷார்ல் பொதலேர் (Charles Baudelaire) – 1821 -1867
- ஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா
- அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)
- மாறுதலின் இக்காலகட்டத்தில்…….
- கடவுள் எழுக!
- நெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)
- ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு
- பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)
- பெரிய கருப்பு
- வார்த்தை விளையாட்டு
- கலை வெளிப்பாடு
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]
- என்னுயிர் நீதானே !
- இணையக் காவடிச் சிந்து
- அழிவா எம் காதலுக்கா
- மண்ணில் தான்
- மனசெல்லாம் நிம்மதி
- மறுவீடு…
- தாத்தா
- இணையத்துக்கு இல்லை இணை !
- குறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)
- சிஸ்டர்
- அம்மாவின் அந்தரங்கம்
- நிற்பதுவே… நடப்பதுவே.. பறப்பதுவே….
- சொல்லத்தான் நினைக்கிறேன்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி
- விடியும்! நாவல் – (17)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு
- கடிதங்கள்
- அறக்கட்டளைகள்-விருதுகள்-நோபல் பரிசு
- அரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்
- யூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்
- கனடாவில் நாகம்மா -2
- வாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,
- லாந்தல் விளக்கு
- அடைப்புகளூக்கு அப்பால்….
- குமரி உலா 6
- இரவு.
- வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)
- நாகூர் ரூமி கவிதைகள்
- நிராகரிப்பில்…
- ஒரு நட்பின் முறிவு
- எண்கள்! எண்கள்!
- அவைகள்