பாவண்ணன்
ரத்த தானம் வழங்குவதற்காக ஒரு மருத்துவமனைக்கு நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். இரண்டு மணிநேர இடைவெளியில் ரத்தம் எடுப்பது முடிந்துவிட்டது. படுக்கையை விட்டெழுந்ததும் மருத்துவர் எங்களுக்கு மாம்பழச்சாறு வரவழைத்துக் கொடுத்தார். பின்னர் அறைக்கு வெளியே கூடத்தில் அரைமணிநேரம் அமர்ந்திருக்கும்படியும் அதற்கப்புறம் வீட்டுக்குச் செல்லும்படியும் கேட்டுக்கொண்டார். நாங்கள் கூடத்துக்கு வந்து இருக்கைகளில் அமர்ந்துகொண்டோம்.
கூடம் முழுக்கப் பெரிய பெரிய ஓவியங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. எல்லாமே மருத்துவம் தொடர்பானவை. மயக்கமருந்து கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வலியால் துடிக்கும் நோயாளியைப் பலபேர் கூடி அமைதிப்படுத்த மருத்துவர் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருப்பபை¢போல ஒரு படம். ரத்தக்கொதிப்பு அதிகமான நோயாளியின் உடலிலிருந்து ரத்தம் எடுப்பதைப்போல மற்றொரு படம். இதயத்துடிப்பின் எண்ணிக்கையை அறிய ஊதுகுழல் போன்ற நீளமான குழலை நெஞ்சில் வைத்து மருத்துவர் கணக்கிடுவதைப்போல இன்னுமொரு படம். இப்படி ஏகப்பட்ட படங்கள். எல்லாமே மருத்துவம் வளர்ந்த கதையைச் சொல்பவை.
அறிவுத்துறைகள் ஒவ்வொன்றிலும் முதல்காலகட்டத்தின் கண்டறிதல்களுடன் அடுத்தகால கட்டத்தின் கண்டறிதல்கள் முரண்கொள்கின்றன. ஆனால், இத்தகு முரண்கள் நல்வினை பயக்கும் முரண்கள். இந்த முரண்கள் வழியாகவே துறைஞானம் விரிவடைகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தந்த காலகட்டம் சார்ந்த மேதைகளும் திறமைசாலிகளும் இருந்திருக்கக் கூடும். துறைஞானம் விரிவடையும் சந்தர்ப்பத்தில் இந்த மேதைமைக்கும் திறமைக்கும் இடமில்லாமல் போகலாம். ஆனால் அந்த முதல்தலைமுறையினரின் உழைப்பென்னும் எரு இல்லாமல் அடுத்த தலைமுறை மேதைமை உருவாகியிருக்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது. பழையனவற்றைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாது. புதியனவற்றின் வருகையைத் தொடர்ந்து தடுத்துக்கொண்டே இருக்கவும் முடியாது. குட்டிவாழை உருப்பெற்றதும் தாய்வாழை தலைசாய்ப்பதைப்போல புதியன உருவானதும் பழையனவற்றைக் காலம் மறைத்துக்கொள்கிறது. இந்த கொடுக்கல்-வாங்கல்தான் ச்முக வளர்ச்சியின் அடையாளம்.
ஆன்டிபையாடிக் என்கிற ஒரு விஷயத்தின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து நாட்டுமருத்துவம் சந்தித்த சரிவை நாம் எல்லாரும் அறிவோம். மரபான மருத்துவமுறையும் புதிய ஆங்கிலக்கல்வி மருத்துவமுறையும் முரண்பட்டு மோதி முயங்கி ஒன்றின் சாரத்தை மற்றொன்று ஏற்று முன்னகர்ந்த விந்தையை தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் என்னும் நாவல் பதிவுசெய்திருக்கிறது. மரபான இசையும் நவீன இசையும் முரண்பட்டு ஒன்றிடமிருந்து மற்றொன்று சாரத்தை உள்வாங்கிக்கொண்டதையும் இலக்கிய உலகம் பதிவு செய்திருக்கிறது. இத்தகு எல்லாத் தருணங்களிலும் பழைமை முறைகளின் விற்பன்னர்கள் காலத்தின் முன் சோர்வடைதல் தவிர்க்கவியலாதது. இந்தக் ருரத்தைத் தாங்கியபடிதான் முன்னகர வேண்டியிருக்கிறது.
சக்கரத்தின் கண்டுபிடிப்பு மனித நாகரித்தின் முக்கியமான ஒரு அம்சம். காலம்காலமாகத் தலையிலும் முதுகிலும் சுமந்த சுமைகள் ஒரே நொடியில் இல்லாமல் போயின. சக்கரங்கள் பூட்டிய வண்டிகள் வேலையை எளிதாக்கின. தானே இழுப்பதற்கு மாறாக மாடுகளைப் பூட்டிய இழுத்த போது மேலும் எளிமை கொள்ள வைத்தன. மரச்சக்கரங்களுக்குப் பதிலாக காற்றடைத்த ரப்பர் சக்கரங்கள் உருவானபிறகு எல்லா வேலைகளும் எளிதாயின. ரப்பர் சக்கரங்களை மிதித்து இயக்குவதற்கு மாறாக எரிபொருளால் இயக்கத் தொடங்கியபோது மேலும் மேலும் அந்த வேலைகள் எளிதாயின. எளிமையும் வசதியும் கூடக்கூட ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கென்றே உழைப்பை முன்வைத்து வேர்வை சிந்திய மக்கள் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட வேண்டிய சூழல் உருவானதைத் தடுக்க இயன்றதில்லை. துக்ககரமான முறைகளில் இவர்கள் விளிம்பிலிருந்து உதிர்ந்து போய்விடுகிறார்கள். அல்லது வேறொரு சூழலுக்குத் தம்மைப் புதுசாக வடிவமைத்துக்கொள்கிறார்கள்.
உதிர்தலும் உருமாற்றமும் காலம்காலமாகத் தவிர்க்கமுடியாமல் மீண்டும் மீண்டும் வரலாற்றின் பக்கங்களில் அரங்கேறியபடியே உள்ளன. பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகத்தில் இயற்கையாக நடக்கக் கூடிய செயல்களே என்கிற எண்ணம் சங்ககாலத்திலேயே பதிவாகியிருக்கிறது. பிரசவ வலி இயல்பானது என்பதால் அந்த வலியின் வேதனை குறைந்துவிடப் போவதில்லை. வலி உருவாகிற தருணம் உயிரையே உருக்கும்படிதான் உள்ளது. உருமாற்றத்தின் வலியும் உயிரையே உருக்கவல்லது. உருமாற்றத்தின் வேதனைச்சாட்சிகள் இலக்கியத்தின் பக்கங்கள்தோறும் நிறைந்திருக்கின்றன.
அ.செ.முருகானந்தம் முன்னிறுத்தும் சாட்சியான வண்டிக்காரன் கதை மனத்தில் ஆழமாகப் பதிந்துபோனதற்கான காரணம் அப்பாவித்தனம் நிறைந்த அவன் உரையாடல்களே.
அக்கதையில் இடம்பெறும் வண்டியோட்டியின் பெயர் கார்த்திகேசு. நாயனக்காரரான வடிவேலுவின் வீட்டைச் சேர்ந்த இளைஞனை வீட்டிலிருந்து கொழும்பு ரயிலடிக்கு அழைத்துச் செல்ல வண்டியை அதட்டி ஓட்டிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலிருந்து கதை தொடங்குகிறது. வண்டியில்பயணம் செய்யும் இளைஞனின் விவரிப்பாக கதை நகர்கிறது. பயண அலுப்பு நீங்க கார்த்தகேசுவுடன் பேசத் தொடங்குகிறான் இளைஞன். மாடுகளை அடித்து ஓட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் நிதானமாகச் சென்றாலேயே போதுமென்று சொல்வதிலிருந்து தொடங்குகிறது அவன் உரையாடல். ‘இந்த மாடுகளின் வேகமெல்லாம் ஒரு வேகமா, அந்தக் காலத்தில் என் வண்டியில் பூட்டியிருந்த மாடுகளின் வேகத்தைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது ‘ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறான். அந்தப்பெருமை அவன் மனத்தில் மிதக்கத் தொடங்கியதும் அப்பெருமைக்குத் துணையாகவிருந்த இளைஞனுடைய பெரியப்பாவான நாயனக்காரரின் ஞாபகமும் அவர் துணைவியாரின் ஞாபகமும் வந்து விடுகிறது. அவர்கள் வீட்டில் பதினைந்து ஆண்டுக்காலமாக வண்டி ஓட்டிய சந்தோஷத்தைப்பற்றியும் பசிவேளைக்கு அந்த அம்மா பிசைந்துபோட்ட சோற்று உருண்டைகளைப் பற்றியும் வாய்விட்டுச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு ஆனந்தத்தை அனுபவித்த நாட்களைச் சொன்னபிறகு அந்த ஆனந்தத்துககு முற்றுப்புள்ளி விழுந்த சந்தர்ப்பத்தின் கசப்பும் ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது. வேதனையுடன் அதையும் சொல்கிறான். ஒரு மலையாளத்தான் அந்த ஊருக்குள் ஓட்டிவந்த காரின் மோகத்தால் அவனது மாட்டுவண்டி புறக்கணிக்கப்பட்டதைப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஒருவிதமான அநீதி இழைக்கப்பட்டவனைப்போல மனம்துடித்து அந்தச் சம்பவத்தைச் சொல்கிறான். பதினைந்து ஆண்டுகளாக நாயனக்காரரையும் அவர் சகாக்களையும் சுமந்துகொண்டு காற்றிலும் மழையிலும் கச்சேரிகளுக்காக ஓருராகத் திரிந்தவன் அவன். அவரே ஒருநாள் அவனைக் கூப்பிட்டு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தவில்காரருக்கு மாட்டுவண்டிப்பயணம் பழக்கமில்லாததால் வண்டியை வேண்டாம் என்ற நாசுக்காகத் திருப்பியனுப்பிய கணம் ஒரு வடுவாக அவன் நெஞ்சில் ஆழப்பதிந்துவிட்டதைச் சொல்கிறான். நாயனக்காரரைப் போலவே ஊருக்குள் ஒவ்வொருவருக்கும் மெல்லமெல்ல கால ஓட்டத்தில் மாட்டுவண்டி என்பது தேவைப்படாத விஷயமாகப் போய்விட்டதையும் உடலின் ஒரு உறுப்பையே மிகச்சாதாரணமாக வெட்டியெறிந்து வீசுவதைப்போல அந்த ஊர். மாட்டுவண்டிகளை முற்றிலுமாகப் புறக்கணித்ததையும் வலியுடன் எடுத்துரைக்கிறான். நிலைமையப் புரிந்துகொண்டு மண்வெட்டியைத் துாக்கிக்கொண்டு வயல்வேலைகளுக்குப் போகத்தொடங்கியதால் உயிர்பிழைக்க முடிந்ததையும் பெருமூச்சோடு சொல்லி முடிக்கிறான்.
திடாரென நாட்டுக்குள் சண்டை தொடங்க, பெட்ரோல் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டதால் கார்களின் ஓட்டம் எல்லா இடங்களிலும் தடைப்பட்டு விடுகிறது. பதினைந்து ஆண்டுகளாக ஊர்க்காரர்களுக்கு வராத மாட்டுவண்டிகளின் ஞாபகம் அந்தப் பெட்ரோல் கட்டுப்பாட்டால் வருகிறது. நாயனக்காரர் அவனை அழைத்து அன்போடு அந்த ஆண்டுக்கச்சேரிக்கு அவன்தான் வண்டியோட்டி வரவேண்டும் என்று தொடக்கத்திலேயே சொல்லி வைத்தாக வேண்டிய அளவுக்கு நிலைமை மாறிவிடுகிறது. வயலுக்கு எரு இழுத்த மாடுகளும் வண்டிகளும் சலங்கைச் சத்தத்துடன் மறுபடியும் பெரிய சாலைகளில் ஓடத் தொடங்குகின்றன.
வண்டியுடன் வாழ்ந்த பழைய நாட்களின் இனிமையை அசைபோட்டபடி மீண்டும் வண்டி ஓட்டுவதில் கார்த்திகேசுவுக்கு மகிழ்ச்சியே என்றாலும் எதார்த்தம் புரியாதவனல்ல அவன் என்பதை இறுதிப்பகுதி உரையாடல் உணர்த்திவிடுகிறது. இளைஞனிடம் இவ்வளவு நேரமும் பழைய நினைவுகளைப் பகிர்ந்தபடி வந்தவன் நிதானமான குரலில் ‘சண்டை இருக்குதோ இல்லையோ, பெட்ரோல் வரத்து பிரச்சனை எதுவுமில்லாத நிலை உருவாகி, பழையபடி கார்கள் ஓடத்தொடங்கிவிடும்போது வண்டிக்காரர்கள் பாடு பழையநிலைமைக்கே போகவேண்டும் என்பது மெய்தானே ? ‘ என்று ஒரு சந்தேகத்தைக் கேட்பதுபோலக் கேட்கிறான். இதைக் கேட்கும்போது அவனுடைய குரல் சோர்வடைந்து காணப்பட்டது என்கிற குறிப்போடு கதை முடிகிறது
*
ஈழத்தமிழ்ப்படைப்பிலக்கியத்தில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் அ.செ.முருகானந்தன். அழகு செல்வ முருகானந்தன் என்பது முழுப்பெயர். நாற்பதுகளில் அவர் தொடங்கிய மறுமலர்ச்சி என்னும் இதழ் ஈழப்படைப்பாளிகளுக்கு ஒரு நல்ல தளமாக விளங்கியது. நாவல், சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு என எல்லாத் துறைகளிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். எழுதத்தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரே தன் முதல் சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டது ஆச்சரியமான விஷயம். 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘புகையில் தெரிந்த முகம் ‘ என்னும் அத்தொகுதி இவரது படைப்பாற்றலுக்கு ஒரு சான்று. ‘பழையதும் புதியதும் ‘ என்னும் இச்சிறுகதை 1945 ஆம் ஆண்டில் மறுமலர்ச்சி இதழில் இடம்பெற்றது.
- வரம்
- உதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)
- நவீன எழுத்தாளனின் தலைவிதி
- இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை
- அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்
- அறிவியல் துளிகள்-24
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- இந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]
- ‘மே-தை மாதம் ‘
- செந்தமிழ்ப் பாட்டன்
- ‘கவிதையும் கழுதையும் ‘
- நானும்…. நீயும்
- தொடக்கம்
- படுகை
- வேண்டும், வேண்டும்…
- மழை
- அர்ஜெண்டினா ஆகிவிடுமா இந்தியா ?
- இந்தியா- சீனா நட்பு மலர்கள்
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- வாழ்க புவனேஸ்வரி!! ஒழிக விஜயகாந்த் !!!
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1
- எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
- ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு
- தற்காப்புக்காக
- போதை