பாரதி இலக்கிய சங்கம் – சொல் புதிது மீதான விமரிசனம் பற்றிய தொகுப்பு

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

திலகபாமா சிவகாசி


பாரதி இலக்கிய சங்கத்தின் மாதாந்திர கூட்டம்ஏப்ரல் மாதம் 20 தேதி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன்னதாக சொல் புதிதுவின் ஜெராக்ஸ் படிகள் எடுத்து இலக்கிய ஆர்வலர்களான முத்து பாரதி, இலக்கிய ராஜா பால்ராஜ் ஆகியோருக்கு கொடுக்கப் பட்டிருந்தது. அவர்கள் அதன் மீதான விமரிசனங்களை நிகழ்வில் முன் வைத்தனர்.

நிழ்ச்சியின் தொடக்கத்தில் சு. சமுத்திரம் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது. ஓவியர் கல்யாண சுந்தரம் அவர்களது இசைப்பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. விமரிசனங்களுக்கு எடுத்துக் கொண்ட கதைகள் வாசிக்கப்பட்டு ஏனையோரும் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வகை செய்யப் பட்டது. அ. முத்துலிங்கம் அவர்களது நேர்காணலும், அருண்மொழி நங்கை அவரது கட்டுரையும், இசைவு சிறுகதையும் எல்லாராலும் பாராட்டப் பட்டது.” நாச்சார் மட விவகாரம்”, “ உறுத்தலின் நிழல் “ இந்த இரு சிறுகதைகளும் கடும் விமரிசனத்திற்குள்ளாகின. பேராசிரியர் பொ. நா. கமலா, பேராசிரியர். சிவநேசன், லஷ்மி கனகசபாபதி யம்மாள் திலகபாமா ஆகியோர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டனர்.

முத்து பாரதி அவர்கள் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு

நாச்சார் மட விவகாரம்:- நாய் சாமியார் மட விவகாரங்கள் என்பது தான் நாளடைவில் நாச்சார் என அழைக்கப் படுகிறது. ஏதோ ஒரு சாமியார்களின் மடத்தின் செயல்களை சொல்ல வந்தவர் அந்த மடம் நாய்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக உருவகப் படுத்துகிறார்.” நெனச்சுப் பார்த்தா எல்லாம் விபரீதமா படுது” இது இந்த கதையில் வரும் ஒரு வரி. இப்படித்தான் இந்த கதையின் கருவும் உள்ளது. அரசியல் அங்கதம் தான் கதையின் கரு. அதுவே ஒரு புரியாத நிலைக்கு வாசகனை இழுத்து செல்கிறது.

இசைவு:- ஒரு நல்ல சிறுகதைக்கான கரு.யதார்த்தமான நடை. யதார்த்தம் மீறிய முடிவானாலும் வாசகனை நிச்சயம் ஒரு படி மேலே உயர்த்தும். மத்திய தர வாழ்க்கையில் ஆயிரம் நோக்கங்கள் இருந்தாலும்மகனை அப்பாவைப் போல் மில் தொழிலாளியாக வேலைக்கு அனுப்பாமல் அவனிடல் உள்ள இசைத் திறமைக்கு இசைவாக விதவை அம்மாவின் மெளனம் ஆயிரம் அர்த்தம் உள்ளது. மனிதனின் மெல்லிய உணர்வை மெல்லிசையாக ஆசிரியர் மீட்டியுள்ளார்.

சொல் புதிது மீதான திலகபாமாவின் விமரிசனம்

அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு சிற்றிதழ் நடத்துவதென்பது, எவ்வளவு சிரமமான பணியென்பதும், அதையும் தொடர்ந்து நடத்துவது என்பதும் மிக சிக்கலான பணியென்பதையும் அறிந்திருக்கின்றோம்.

அவ்வளவு சிக்கலுக்கிடையிலும் ஒரு பத்திரிக்கை பெறும் பத்திரிக்கைகளுக்கு இணையாக வந்து கொண்டிருப்பதை பாரதி இலக்கிய சங்கத்தின் சார்பில் வரவேற்போம். அதே சமயம் பத்திரிக்கை மீதான விமரிசனங்களை பதிவு செய்ய வேண்டியதும் நல்ல ஒரு வாசகனின் தார்மீக கடமையாகிறது

“நீங்கள் அதன் மேல் தான் நிற்கிறீர்கள்”

அ. முத்துலிங்கம் -நேர்காணல்

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் அவர்களது நேர்காணல் ,இலக்கிய அரசியலுக்குள் சிக்கி, இன்று ஒரு கூடாரத்துக்குள் அடைக்கப்பட்டு வாழும் , இலக்கிய வாதிகளுக்கிடையில், மிக இயல்பான, படைப்பாளி என்கிற எந்த வித தோரணமுமில்லாத , உண்மையை நோக்கிய தேடலுடைய ஒரு மனிதனின் நேர்மையான உரையாடலாக அமைந்திருப்பது பெரும் நிம்மதியை தருகிறது. முத்துலிங்கம் அவரது நேர்காணலில் இன்றைய படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டிய பல விசயங்களை பகிர்ந்துகொண்டிருகிறார்.

முக்கியமாக , புராணங்கள் , மரபு இலக்கியம் , எளிமை எழுத்து, சிக்கலான எழுத்து, படைப்புகளில் இருக்கக் கூடிய அறம், இவை பற்றிிய இவரது கருத்துக்கள், பல இளம் படைப்பாளிகளுக்கு வழி காட்டியாகவும், இன்றைக்கு அதி நவீன இலக்கிய வாதிகள் என்று சொல்லிக் கொள்வோரிடையே பேசப்பட வேண்டிய முக்கிய விசயமாகவும் இருக்கிறது.

எல்லாருக்குள்ளும் தேடல் இருக்க , எழுத்து மூலம் தன் தேடலைச் சொல்லவோ செய்யவோ முயலும் போது அவன் படைப்பாளியாக, எழுத்தாளனாக பார்க்கப் படுகிறான்.மற்ற எல்லாரையும் விட படைப்பாளிக்கு உண்மை பற்றிய பிரக்ஞை இருத்தல் வேண்டும். “வாசகனின் சிந்தனையை ஓர் உண்மையின் பக்கம் திருப்ப வேண்டும் “என்கிற முத்துலிங்கத்தின் கூற்றின் மேல் அழுத்தமான நம்பிக்கை உண்டு எனக்கு. அந்த மாதிரியான எந்த விதமான இலட்சியங்களும் தேவையில்லை படைப்பாளிக்கு . தன் உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்கிற ரீதியில் , என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம், வெளிப்படுத்துவதால் விளைகின்ற பயன்தான் என்ன ? என்கிற பிரக்ஞை இன்றி படைப்புகள் வெளிவருகின்றன.

அப்படியான பிரக்ஞைகள் இருப்பது தவறு என்கிற ரீதியிலும், பிரக்ஞை உள்ள படைப்பாளிகளின் பக்கம் இவர்கள் சுட்டு விரல் நீட்டுவதும் சகிக்க முடியாததாயிருக்கிறது. அப்படியான முத்துலிங்கம் அவர்களின் கூற்றுக்கு எதிரான படைப்புகள் சொல் புதிதுவிலும் உள்ளது அடுத்து உத்திகள். முத்துலிங்கம் சொல்கிறார். தன் படைப்பின் பொருளே அதன் உத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்று. இதுதான் இயல்பான எழுத்து .யதார்த்தமான சிந்தனை. இங்கு உத்திகளை தெர்ந்தெடுத்துக் கொண்டு அதற்காக படைப்புகள் ஆக்கப் படுகின்றன. அதனால் அது தன் யதார்த்த நிலையையும் இழந்து வாசகனை நெருங்கும் தகுதியையும் இழந்து விடுகின்றன

இதே விசயங்களை அருண்மொழி நங்கை தன் கட்டுரையிலும் மிக அழகாக பேசியிருக்கிறார். இந்த கட்டுரையும் , முத்துலிங்கம் அவரது நேர்காணலுமே இந்த சொல் புதிதுக்கு முத்தாய்ப்பான விசயங்கள்.

ஆனால் இதற்கு நேர்மாறான சிறுகதைகள் “ உறுத்தலின் நிழல், நாச்சார் மட விவகாரம்” இந்த இரண்டும் சாமானியருக்கு அதிகம் சாத்தியப்படாத பரிச்சியமில்லாத நிகழ்வுகள். கதையிலிருந்து வாசகரை அந்நியப்படுத்துகிறது. யதார்த்தவாதம் , மாயாவாதம் , கற்பனா வாதம் இப்படியான இஸங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் படைப்பு தான் பேசிய விசயங்கள் வாசகனை எங்கே நகர்த்தி கொண்டு போகப் போகிறது என்பதை மறந்து விடுகின்றது. சுகமளிக்கக் கூடிய கற்பனா வாதங்கள் ஒரு வகை. அதையும் தாண்டி மனிதனை ஒரு உண்மையை தேடவைப்பவை இன்னொரு வகை. நமது இதிகாசங்களும் கூட ஒரு வகையில் கற்பனா வாதங்கள் நிறைந்திருந்த போதும் உண்மையை தேட வைப்பவை. ஆனால் இந்த இரண்டிலும் சிக்காத தனி மனித உள் வக்கிரங்களை வெளிப்படுத்தும் படைப்புகள் இவை உறுத்தலின் நிழல் சிறுகதையில் வரும் விநோதமான கற்பனைகள்,ந்ிஜங்களுக்கு , உண்மைகளூக்கு, உணர்வுகளுக்கு எந்த விதத்திலும் வலு சேர்க்காத வை.

நமக்குள் வெறுப்பை விளைவிக்க கூடிய எழுத்துக்கள் கதையின் ஆரம்ப பாராவில் அழகான சித்தரிப்புகளோடு ,நுட்பங்களோடு ஆரம்பமாகின்ற கதை, பின் தன் பாதையைத் தவற விட்டு விடுகின்றது.அல்லது நமது எதிர்பார்ப்புகளை சிதறடித்து விடுகிறது மனப்பிறழ்வான நிலையில் ஒருவனை நிர்வாணமாய் பார்க்கும் போது கூட அந்த நிலையில் இருப்பவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ,ஆண் , பெண் பால் பேதங்களை தாண்டி வாழ்வை தொலைத்த ஒரு மனிதத்திற்கான பரிவும் ஏன் நேர்ந்தது என்கிற ஏக்கமும் வெளிப்படுமே அன்றி, வேறு எண்ணங்கள் எழுவதில்லை, என்பது வே நிஜம். அப்படியிருக்க இந்த கதையில் பேசப்படும் உணர்வுகளூம் சரி உண்மைகளாக சித்தரிக்க படுபவைகளும் சரி, நிஜங்களுக்கு விரோதமானவையக நம் முன்னே காட்சி தருகின்றன.

ஜென் உரையாடல்களும், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன ஒட்டு மொத்தமாக, உணர்வு நிலையிலிருந்து அறிவு நிலைக்கு எடுத்து செல்வதற்காக இந்த புத்தகம் என்று முன்னுரை அளிக்கப் பட்டிருக்கிறது.அந்த அளவில், நாச்சார் மட விவகாரங்கள், உறுத்தலின் நிழல் போன்ற படைப்புகள் தவிர்க்கப் பட்டால் புத்தகத்தின் முன்னுரையில் சொல்லப் பட்ட விசயங்கள் சாத்தியமாகலாம்.

தொகுப்பு

திலகபாமா

பாரதி இலக்கிய சங்கம்

15/1 ஆறுமுகம் சாலை

சிவகாசி

mahend-2k@eth.net

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி