பாவண்ணன்
( ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை-15, விலை3ரு85)
மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட டாக்டர். அம்பேத்கரின் நுால்களுக்குத் தொகுப்பாசிரியராகப் பணியாற்றியவர் வசந்த் மூன். முதல் பதினெட்டுத் தொகுதிகள் இவரது மேற்பார்வையின் கீழே வெளிவந்தன. 1932 ஆம் ஆண்டில் பிறந்து இளமை முதலே செயல்வீரராக உழைத்து அம்பேத்கரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் குன்றாத ஆர்வமுடையவராக விளங்கி 2002 ஆம் ஆண்டில் இந்த மண்ணைவிட்டு மறைந்த வசந்த் மூனுடைய சுயசரிதை நுாலை வாசிக்கும் வாய்ப்பு விடியல் பதிப்பகத்தின் மூலம் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
29 பகுதிகளாக அமைந்துள்ள இச்சுயசரிதையில் ஆர்வத்துடிப்பு மிகுந்த ஓர் இளைஞனுடைய எழுச்சியையும் விடாமுயற்சியையும் காணமுடிகிறது. தான் பிறந்த குடியிருப்பையும் சுற்றுப்புறக்குறிப்புகளையும் விவரிக்கிற முதல் பகுதியுடன் தொடங்குகிற சுயசரிதை வாழ்நாளில் நடைபெற்ற பல விஷயங்களையெல்லாம் வாசகர்களின் முன்வைத்துவிட்டு இறுதிப்பகுதியை அடையும்போது மறுபடியும் மனமெங்கும் விரிந்திருக்கிற அக்குடியிருப்பின் நினைவுகளுடனேயே முற்றுப்பெறுகிறது.
பிறந்த இடம் என்பது பெளதிகமான ஓர் இருப்பு மட்டுமல்ல, வாழ்வின் உணர்வுகளுடன் பின்னிப்பிணைந்த ஓர் இடம். மறக்கமுடியாத அளவுக்கு மனத்தில் அழுத்தமான இடம்பிடித்த அக்குடியிருப்பைப் பற்றிய தகவல்களைப் படிக்கும்போது நம் மனத்திலும் அவை அழுத்தமான இடத்தைப்பிடித்துக்கொள்கின்றன. குடியிருப்பில் நிலவிவந்த குஸ்திப்பிரியம், மணிராம் பயில்வான், அவரை அடக்குவதற்காகத் தயாராகும் சிவராம், குஸ்தியைச் சொல்லித்தரும் உஸ்தாத் தாஜிபா, முழு ஆற்றலுடன் தயாராகும் முன்பேயே சிவராமை வலுக்கட்டாயமாக வம்புக்கிழுத்துக் குஸ்தி போடும் மணிராம் பயில்வானுடைய தந்திரம், அவருடைய தோல்வி, வெற்றிக்களிப்பில் மிதக்கும் சிவராமுடன் உறவாடிப் பகையைத் தவிர்த்துக் குடியிருப்பில் அமைதியை நிலைநாட்டும் பக்குவம் எல்லாமே உயிர்ச்சித்திரங்களாகத் தீட்டிக்காட்டப்படுகின்றன. நிரந்தரப் பகையாளியாக வரித்துக்கொள்ளப்படத்தக்க ஒருவருடன் சாராயம் அருந்தி விருந்துண்டு நட்புப்பாராட்டும் அளவுக்கு ஒருவருடைய மனத்தில் உருவாகும் மாற்றம் என்பது சகஜமானதல்ல. இதுதான் மானுட வாழ்வின் மிகப்பெரிய புதிர். எந்தத் தர்க்கக்கணக்குக்கும் உட்படாத விசித்திரப்புதிர்.
இத்தகு புதிர்களுடன் நடமாடும் வேறு சில பாத்திரங்களும் இச்சுயசரிதையில் உண்டு. முக்கியமாகச் சொல்லப்பட வேண்டியவர் மூனுடைய தந்தை. அவரைப்பற்றிய தகவல்களைப் படிக்கும்போதே கோபமும் வெறுப்பும் படியத்தொடங்குகின்றன. அவரை நினைக்கத் தொடங்கும் முதல் கணத்திலேயே அவரது குடிப்பழக்கம்தான் நினைவுக்கு வருகிறது என்று மூன் குறிக்கும் அளவுக்கு மதுவுடன் உறவுகொண்டவர். இரு மனைவிகளைக் கொண்டவர். போதையில் மனைவியை அடித்துத் துன்புறுத்துபவர். பிரிந்துசென்ற மனைவியைப்பற்றியோ குழந்தைகளைப் பற்றியோ ஆண்டுக்கணக்கில் கவலையற்று இருப்பவர். ஒரு கட்டத்தில் மார்பில் பால்கட்டிக்கொண்ட இளந்தாயின் அவஸ்தையை மந்திரம் சொல்லியும் சீப்பின் பற்களால் வருடியும் பக்குவத்துடன் நீக்குபவர். அது என்ன மந்திரம் என்று கேட்கிற மகனிடம் எந்த மந்திரமும் இல்லையடா மகனே, துன்பத்தில் அலைபாய்கிற மனத்துக்கு நிம்மதியளிக்கக் கண்மூடிச் சொல்லப்படும் வெற்றுச்சொற்கள் அவை என்று கரிசனத்துடன் விளக்கமும் தருபவர். வெறுக்கத்தக்க எல்லா அம்சங்களும் குடிகொண்ட மனத்தில் இந்தப் பக்குவத்துக்கும் கரிசனத்துக்கும் இடமிருப்பதை மிகப்பெரிய புதிர் என்றே சொல்ல வேண்டும்.
வசந்த்மூன் தம் நண்பர்களுடன் அம்பேத்கரை முதன்முதல் நேருக்கு நோராகச் சந்திக்கும் காட்சியொன்று சுயசரிதையில் இடம்பெறுகிறது. பெளத்தம் பற்றிய பேச்சு வரும்போது, ‘உங்கள் குடியிருப்பில் பெளத்தத்தைப் போதிப்பது யார் ? ‘ என்று கேட்கிறார் அம்பேத்கர். ‘டாக்டர்.நியோகி ‘ என்று பதில் சொன்னதும் ‘அவர் ஒரு பார்ப்பனர் என்பதை மறந்துவிட வேண்டாம் ‘ என்று சொல்கிறார் அம்பேத்கர். தொடர்ந்து ‘முதலில் பெளத்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பார்ப்பனர்கள்தாம். பின்னால் பெளத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைச் சிதைத்தவர்களும் பார்ப்பனர்கள்தாம். இதை மறந்துவிடக்கூடாது ‘ என்று மேலும் வலியுறுத்திச்சொல்கிறார். இப்படி ஒரு முடிவுக்கு வர அவரவருக்கும் தம் வாழ்க்கை சார்ந்தும் வரலாற்றைச் சார்ந்தும் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றைக் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. அனைத்தையும் தாண்டி அர்ப்பணிப்புணர்வோடு குடியிருப்புக்கு வந்து ஒன்றைச்சொல்லித் தரும் ஒருவர் நம்பிக்கை, அவநம்பிக்கைத் தராசில் எடைபார்க்கப்படவேண்டிய ஒருவராக கணிக்கப்படும் சூழல் மிகப்பெரிய புதிராகத் தோன்றுகிறது.
சுயசரிதையில் குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரம் மூனுடைய தாயார் பூர்ணாபாய். பிடிக்காத கணவனைவிட்டு வெளியேறித் தந்தையின் ஆதரவுடன் வாழத்தொடங்குகிற அவருக்குத் தந்தையின் மரணத்தையொட்டித் துன்பங்கள் தொடங்கிவிடுகின்றன. பிணத்துக்கு உரிமை கொண்டாடி வருகிற தந்தையின் முதல்மனைவியின் மகன் சொத்துகளுக்கெல்லாம் சொந்தக்காரனாகி திண்ணையோரமாக ஒதுக்கிவிடுகிறான். வீட்டு வேலைகள் செய்து பிள்ளைகளை வளர்க்கும் விதம் மனத்தை உருக்கும்படி சித்திரத்துக்காட்டப்படுகின்றன. பல ஆண்டுகள் வீட்டு வேலைகள் வழியாகவே காலத்தை ஓட்டுகிற அவருக்கு யாரோ ஒருவர் பரிந்துரையால் பஞ்சாலையில் வேலை கிடைக்கிறது. அந்த நிரந்தரச் சம்பளம் கிட்டுகிற வரை குடும்பத்தில் நேரும் சிரமங்கள் ஏராளம். கணவனுடைய மரணச்செய்தியை மகன் வழியாகவே கேட்டு நெற்றிக் குங்குமத்தைத் தானாகவே அழித்துக்கொண்டு வளையலையும் உடைத்தெறிந்துவிட்டுக் குளித்துவிட்டு வேலைக்குக் கிளம்பிவிடுகிறார். படித்தப் பட்டம்பெற்று மகன் நல்லவேலையில் சேர்ந்தபிறகும் உடன்செல்ல மறுத்து வேலையிலேயே தொடர்கிறார். எதிர்பாராத விதமாக பஞ்சாலையில் வேலைநிறுத்தமும் அதையொட்டி வேலையிழப்பும் நிகழ, மகனுடன் சென்று வாழத் தொடங்குகிறார். பிள்ளைகளின் வாழ்வுக்காவும் வெற்றிக்காவும் தன்னையே கரைத்துக்கொள்கிற தியாகத்தாயின் படிமமாகப் பூர்ணாபாயின் வாழ்க்கை விளங்குகிறது.
தம் செயல்பாடுகளையும் வேகத்தையும் முன்வைக்கிற மூன் தன் சுயசரிதையில் தன் பலவீனங்களையும் மறைக்காமல் முன்வைக்கிறார். பசிக்கு வாழைப்பழத்தைத் திருடித் தின்றுவிட்டு வந்திருக்கிற மகன், திருட்டுப்பட்டம் சுமத்தியதால் கிடைத்த வேலையையே துறந்து வந்திருக்கிற தாய் இருவரும் இடம்பெறுகிற தருணம் மிகமுக்கியமான ஒன்று. எதைக்கேட்டாலும் வாங்கித்தர மாமா தயாராக இருந்தாலும் ஓவித்துாரிகை ஒன்றை சகமாணவனின் அசட்டையால் பையிலிருந்து கீழே நழுவி விழுந்திருக்கக்கண்டு எடுத்து உடைமைப்படுத்திக்கொள்வதும் மறுநாள் பையைச் சோதனையிடும் தருணத்தில் அகப்பட்டு எழுந்து நின்று மனம்மாறுவதும் ஒரு முக்கியமான பதிவு. உலகில் எழுதப்பட்ட எல்லா சுயசரிதைகளிலும் அவற்றை எழுதிய பெரியவர்கள் தம் இளமையில் நேர்ந்துவிட்ட தவறுகளை மறைக்காமல் பதிவு செய்வது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். காந்தியடிகள், டால்ஸ்டாய் ஆகியோரின் சுயசரிதைகளின் குறிப்புகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. ஆசுவாசமாக உட்காரக் கிட்டும் நேரத்தில் சதாகாலமும் மனத்தில் இடறியபடி இருந்துவரும் முட்களைப் பிடுங்கி வீசுவதே முதல்வேலையாகி விடுகிறது. இந்தத் தடைகளை அகற்றித் தள்ளுவதன் வழியாகவே மனத்திலிருந்து மற்ற எல்லாமும் வெள்ளம்போல் பீறிட்டெழ வழிபிறக்கிறது.
மதமாற்றத்துக்கான விழாவொன்று நாக்பூரில் ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய அளவில் தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. விழா தொடங்கும் நேரம் வரையிலும் சொல்லிவைக்கப்பட்ட இருக்கைகள் வரவில்லை. மேடைக்கு வரும் யாரோ ஒருவர் இரும்பு இருக்கைகளில் அம்பேத்கர் அமரமாட்டார் என்று வேறு சொல்லிவைத்துவிடுகிறார். நிலப்பரப்புக்கு அருகில் உள்ள குடியிருப்புக்கு ஓடும் மூன் கண்ணில் முதலில்பட்ட ஒரு முஸ்லிம் பெரியவரிடம் பேசி அவருக்குச் சொந்தமான இரண்டு மரச் சாய்வு நாற்காலிகளை வாங்கிக்கொண்டு வருகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அவை திருப்பித்தரப்பட்டு விடுகின்றன. நாலைந்து மாதங்கள் கழித்து அச்சாய்வு நாற்காலிகளுக்குக் கிடைத்துவிட்ட வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்தவராக மீண்டும் அப்பெரியவரைப் பார்க்கச் செல்கிறர். வாடகைக்குக் குடியிருந்த அவர் மத்தியப்பிரதேசத்துக்குச் சென்றுவிட்டதாக வீட்டுக்குச் சொந்தக்காரர் சொல்கிறார். ஒரு சிறுகதைக்கு நிகரான இதுபோன்ற பல சம்பவங்கள் சுயசரிதையை வாசிக்கத் துாண்டுபவையாக உள்ளன.
எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கும் வெ.கோவிந்தசாமி பாராட்டுக்குரியவர். பல முன்மாதிரிப்படைப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திவரும் விடியல் பதிப்பகத்தார் இந்த நுாலை அழகுற வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். பண்டரிபுரம் என்கிற ஊர் பண்டாரிபுரம் என்று அச்சாகியிருக்கிறது. விட்டல் கோயில் என்பது தொடர்ந்து வித்தல் கோயில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒருசில இடங்களில் பதினாறு, பதினொன்று எண் குழப்பங்களும் உண்டு. குறைகாணும் நோக்கிலல்ல, அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
***
paavannan@hotmail.com
- கடல் அரசனின் கட்டளை!
- உயிர்ப்பு
- ஓடிவா மகளே!
- மழை
- காத்திருக்கிறேன் அம்மாவிற்காக
- மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்
- தப்பும் வழி
- எளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாதர்ணின் ‘கல்முகம் ‘)
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- மனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)
- அறிவியல் துளிகள்-9
- நன்றி
- காதல்..
- ஒரு நாள் = 40 மணி நேரம்.
- அனுபவம்
- பாம்பு பற்றிய பயங்கள்.
- பறவையும் பெரு முட்டையும்!
- எல்லைகளைப் போடாதீர்!
- பூவின் முகவரி
- என்னென்ன செய்யலாம் ?
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார
- அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- கழிப்பறைகளும் விழிப்புணர்வும்
- ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்
- தமிழகமும் தண்ணீர் நெருக்கடியும்
- கடிதங்கள்
- திரைக்கடலோடியும் –