பாவண்ணன்
அதிகாலை நடை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாகப் பார்க்க நேர்கிற எல்லா முகங்களையும் அன்று உரிய நேரத்தில் உரிய இடத்தில் பார்த்துவிட்டதில் மனநிறைவாக இருந்தது. எந்தப் பதற்றமும் இல்லை. தெருக்கோடியில் உள்ள கிருஷ்ணன் கோயிலை நெருங்கும் போது உருட்டிவிட்ட பந்து போல கண்ணில் விழுந்தது சூரியன். சிவப்புப் பழமாக அதன் உருண்ட முகம். பொன்னிறமான அதன் கதிர்கள் மரங்களையும் கோபுரத்தையும் வீடுகளையும் தொட்டு இறங்கிக் கொண்டிருந்தன. பால் பாக்கெட்டுகளுடனும் செய்தித்தாட்களுடனும் வரும் சைக்கிள்களின் மணியோசை ஒலித்தபடி இருக்க, பாய்ந்து வரும் மணல் லாரிகளுக்கு வழிவிட்டு வேலிப்படலை ஒட்டி நின்றவண்ணம் சூரியனைக் கண்மூடி வணங்கிக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். பழுத்துத் தளர்ந்த அவர் முகத்தைக் கதிர் வருடிக் கொடுத்தது. பெட்டிக் கடையில் டா ஆற்றிக் கொண் டிருந்தவனிடம் பீடிக்கும் டாக்கும் சொல்லிவிட்டுத் தொடையையும் தாடியையும் சொரிந்தபடி நின்றிருந்தார்கள் கூலிகள். கடையின் கூரை மீது உட்கார்ந்து காக்கைகள் விடாது கரைந்த நேரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் ஓடிவந்து பதற்றத்தோடு என்னை வழிமறித்தார். தொடர்ந்து என்னை நடக்கவிடாமல் என்னையே மேலும் கீழும் பலமுறை பார்த்தார். அவர் கண்கள் தளும்பின. கையில் துடைப்பத்தைப் பார்த்ததுமே அவர் துப்புரவுத் தொழிலாளி என்று புரிந்து விட்டது எனக்கு. செய்துகொண்டிருந்த வேலையை போட்டது போட்டபடி ஓடிவந்து அவர் என்முன் நிற்க வேண்டிய காரணம் எனக்குச் சிறிதும் புரியவில்லை. ‘பாபு, நுவ்வு டேவிட் காதா ? ‘ என்று தெலுங்கில் என்னைப் பார்த்துக் கேட்டார்.
‘இல்லங்க, யாரு நீங்க ? யாருன்னு நெனைச்சிப் பாக்கறீங்க ? ‘ என்றேன் நான்.
‘நுவ்வு டேவிட் காதா ? ‘ ஆதங்கத்துடன் மறுபடியும் கேட்டார் பெரியவர்.
‘இல்லிங்க ‘ நான் தலையசைத்து மறுத்ததும் அவர் முகம் வாடியது. நிதானமாகக் கேட்டதும் ஒவ்வொன்றாகச் சொன்னார் அவர். பத்து வருஷங்களுக்கு முன்னர் அவர் மகன் டேவிட் வீட்டைவிட்டுப் போய்விட்டானாம். அச்சு அசலாகப் பார்க்க என்னைப் போல இருப்பானாம். அவனுக்கும் என்னைப் போலவே முன்வழுக்கையாம். சொல்லி முடிக்கும் போது அவர் குரல் தடுமாறியது. ‘கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். டிகிரி கூட வாங்கிட்டான். எங்க இருக்கானோ என்னமோ, பெத்தவங்கள பாக்கணுமின்னு கூடத் தோணல பாரு அவனுக்கு ‘. தாமதமானதால் கிளம்பத் தொடங்கிய நேரத்தில் ‘நுவ்வு நிஜங்கா டேவிட் காதா ? ‘ என்று கெஞ்சுதலோடு மறுபடியும் கேட்டார் அவர். ஆறுதலாக அவர் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன் நான். அன்று முதல் அந்தத் தெருவுக்கு அவர் பெருக்க வரும்போதெல்லாம் அவரைப் பார்ப்பதுண்டு. என்னைப் பார்த்ததும் சிரிக்கிறார் அவர். நான் அவரைப் பார்த்துச் சிரிக்கிறான். நின்று பேச நேரமிருக்கும் போது இருவருமே அருகிலிருக்கும் கடையில் டா அருந்துகிறோம். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு விஷயத்தில் தொடங்கும் பேச்சு தானாக டேவிட்டின் பெயருடன் நிற்பது வாடிக்கையாகி விட்டது.
காணாமல் போன தன் மகன் டேவிட்டை என் உருவில் அவர் பார்ப்பது உண்மையாக இருக்கலாம். நானும் ஒரு தந்தை என்கிற முறையில் அவர் துயரை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் தெருப்பெருக்கும் தொழிலைச் செய்தாலும் நான் ஏதோ ஓர் அலுவலகத்தில் வேலை செய்தாலும் அடிப்படையில் இருவரும் தந்தையல்லவா ? மகனைத் தொலைத்து விட்ட தந்தை அவர். தெருவோரத்தில் உதிர்ந்து கிடக்கும் பூக்களையும் சருகுகளையும் ஒதுக்கியபடி இருக்கும் சமயங்களில் என்னைக் கண்டதும் துடைப்பத்தோடு கையை உயர்த்தி ஆந்திராவாலாவான அப்பெரியவர் வணக்கம் சொல்லும் போதெல்லாம் என் அடிமனத்திலிருந்து நினைவிலெழும் சிறுகதை தாகூரின் ‘காபூலிவாலா ‘ ஆகும்.
காபூல் தேசத்திலிருந்து கல்கத்தாவுக்கு வியாபாரம் செய்து பிழைக்க வந்தவன் காபூலிவாலா. அவனுக்கும் எழுத்தாளர் மகள் சிறுமி மினிக்கும் நல்ல பழக்கம். இருவரும் சிரித்துப் பேசிக் கொள்கிறார்கள். அவன் தரும் பாதாம் பருப்புகளை அவள் ஆவலுடன் வாங்கிக் கொள்கிறாள். ஒருவரை யொருவர் கிண்டல் செய்து கொள்கிறார்கள். ‘எப்ப நீ மாமியார் வீட்டுக்குப் போகப் போறே ? ‘ என்று ஒருவரைப் பார்த்து பார்த்து கேலி செய்து கொள்கிறார்கள். காபூலுக்குத் திரும்பும் நேரம். ஏதோ பணத்தகராறில் யாரையோ கத்தியால் தாக்கியதால் காபூலிவாலா சிறைப்படுகிறான். ஆறாண்டு காலத் தண்டனை. தெருவில் இழுத்துச் செல்லப்படும் போது விவரம் புரியாத மினி ‘என்ன மாமியார் வீட்டுக்கா போறே ? ‘ என்று கேட்கிறாள். ஆறு ஆண்டுகள் கழித்து விடுதலையாகி அதே வீட்டுக்கு வருகிறான் காபூலிவாலா. மினிக்காகப் பரிசுப் பொருட்கள் வாங்கி வருகிறான். வாசலருகே மறித்துப் பேசுகிறார் எழுத்தாளர் . மினிக்குத் திருமணம் நடக்க உள்ளது. ஆனால் அதை எழுத்தாளர் சொல்வதில்லை. ‘வீட்டில் விசேஷம், பார்க்க முடியாது ‘ என்று மொட்டையாகச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார். பார்க்க முடியாத ஏக்கம் முகத்தில் படர வாங்கி வந்த பரிசுப் பொருட்களை மினியிடம் சேர்க்குமாறு கெஞ்சுகிறான் காபூலிவாலா. அப்பொருட்களுக்குப் பணம் தர முன்வருகிறார் எழுத்தாளர். சட்டென்ற மனச்சங்கடத்தோடு பின்வாங்கும் காபூலிவாலா தன் சட்டைப் பையில் வைத்திருக்கும் கசங்கிய தாளை எடுத்து நீட்டுகிறான். ஒரு குழந்தையின் கைவிரல் ரேகை பதிந்த தாள் அது. அந்த ரேகை தன் மகளுடையது என்றும் அவளைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் அவளைப் போலவே இருப்பதாலேயே குழந்தை மினியின் மீது ஈடுபாடு ஏற்பட்டதென்றும் மினியைப் பார்ப்பதன் வழியே தன் மகளுக்கு அருகே இருக்கிற நிறைவும் அமைதியும் தமக்குக் கிடைத்து வந்ததாகவும் சொல்லி விட்டுச் செல்ல முனைகிறான் காபூலிவாலா. நெகிழ்ந்து போன எழுத்தாளர் சிறுமி இப்போது பெரியவளாகி விட்டாள் என்றும் திருமணம் நடக்க உள்ளதென்றும் சொல்லிவிட்டு மணமகளான மினியைச் சம்பிரதாயத்தை மீறி வெளியே அழைத்து அவன் முன் நிறுத்துகிறார். களிப்பிலும் திகைப்பிலும் கலங்கும் காபூலிவாலா ஆனந்தக் கண்ணீருடன் ‘மாமியார் வீட்டுக்குப் போறியா மினி ? ‘ என்று சிரிக்கிறான். சில ஆடம்பரச் சடங்குகளை நிறுத்தி அந்தப் பணத்தைக் காபூலிவாலாவிடம் கொடுத்து ஊருக்குச் சென்று மகளைக் காணுமாறு அனுப்பி வைக்கிறார் எழுத்தாளர்.
ஒன்றின் இன்மையை இன்னொன்றின் இருப்பின் வழியாக உணர்வது வாடிக்கை. தலைவன் வளர்த்த காளையை தலைவன் இல்லாத நாட்களில் தலைவனைப் பார்ப்பதைப் போலவே பார்க்கிற தலைவியரைச் சங்கக் கவிதைகளில் பார்க்கலாம். ஒருவர் கொடுக்கும் அன்பளிப்புகள் அவருக்கு ஈடாக இருந்து அவர் நினைவுகளை மற்றவர்கள் மனத்தில் சுரக்க வைத்தபடி இருக்கும். வெளிநாடுகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி விட்டு, அவர்கள் பயன்படுத்திய பேனாக்களையும் நோட்டுகளையும் புத்தகங்களையும் துணிமணிகளையும் பிள்ளைகளாகப் பார்த்துப் பார்த்துக் கவலையை ஆற்றிக் கொள்ளும் பெற்றோர்கள் பலர். அத்தகு பொருட்கள் கூட இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும் ? நினைவுகளைச் சுமந்து மட்டுமே திரிய முடியும் அல்லவா ? அபூர்வமான தருணங்களில் அதே சாயலை உடைய யாரையாவது பார்த்து நிறைவடையலாம். அவ்விதமாக, ஒருவர் முகத்தில் இன்னொருவரைக் கண்டு நிறைவடையும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறவர்களின் சுயநஷ்டங்கள் ஏராளம். அந்த நஷ்டங்களையெல்லாம் இப்படிப் பார்ப்பதன் வழியாகவும் பேசுவதன் வழியாகவும்தான் ஈடு செய்து கொள்ள வேண்டும். அருகில் இல்லாத ஒருவரை அல்லது தொலைந்து போன ஒருவரை இன்னொருவர் முகத்தில் கண்டு ஈடு செய்து கொள்வது எல்லாருக்குமே ஒரு சந்தர்ப்பத்தில் நேர்ந்து விடுகிறது.
ஈடு செய்வதின் வேதனையை மட்டுமே இக்கதையில் தாகூர் சொல்லவில்லை. அவர் மிகப்பெரிய லட்சியவாதி. மிகப்பெரிய பேராற்றலின் முன்னால் அன்புக்காக அவர் முன்வைக்கும் பிரார்த்தனை வரிகளை யாராலும் மறக்க முடியாது. அந்தப் பேராற்றல் எல்லா உயிர்களிலும் காந்தம் போலக் கலந்து இயங்குவதை அறிந்தவர் அவர். எவ்வளவு மறைவில் இருந்தாலும் காந்தம் இரும்புத் துகளை ஈர்த்துவிடுவதைப் போல, ஒருவர் மனத்திலிருக்கும் பேராற்றல் மற்றவர்களின் மனத்திலுள்ள பேராற்றலைக் அடையாளம் கண்டு கொள்கிறது. தன் உடலில் இயங்கும் உயிரே மற்றவர் உடலிலும் இயங்குகிறது என்னும் மகத்தான கண்டுபிடிப்பை மனிதன் நிகழ்த்த வேண்டும் என்பது எல்லா மகான்களுடைய கனவாக இருக்கிறது. நெற்கதிரின் உயிரும் தன் உயிரும் வேறு வேறல்ல என்று உணர்ந்ததாலேயே ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ‘ என்று வள்ளலாரால் பாட முடிந்தது. பக்தன் மீது விழுகிற பிரம்படியின் தழும்புகள் ஆண்டவன் உடலில் தென்பட்டதற்கு இதுதான் காரணமாக இருக்கும். அடியார்கள் உருவில் வருபவர்கள் அனைவரும் சிவனே என்ற பக்தர்களால் சேவை செய்ய முடிந்தது. இன்னும் ஒரு படி மேலே சென்று ‘நடமாடக் கோயில் நம்பற்கொன்றீயில் படமாடக் கோயில் பகவற்கதாமே ‘ என்று பாடியவர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்குள்ளும் எல்லாருக்குள்ளும் இயக்கம் பெறுவது ஒரே உயிர். ஒருவருக்குள் இயங்கும் உயிர் ஆற்றலே அடுத்தவருக்குள்ளும் இயங்குகிறது. ஒரே பேருயிரின் ஒரு துகள் நான். மறுதுகள் அவன். ஒரு எந்திரத்தின் எல்லா உறுப்புகளும் இணைந்து ஒரு ேசுர இயங்கினால் மட்டுமே இயந்திரத்தின் உற்பத்தித் திறன் சரியாக இருக்கும். எல்லா உயிர்த் துகள்களும் ஒருசேர இணைந்து இயங்கும் போதுதான் பேருயிரை அடையாளம் காண முடியும். மினியின் வழியாக தன் மகளைக் காணும் காபூலிவாலாவைப் போல, ஒருவரிடம் அன்பு செலுத்துவதன் வழியாக பேராற்றலைக் கண்டடைய முடியும் என்பதாலேயே அன்பு திரும்பத் திரும்ப எல்லோராலும் எல்லா இடங்களிலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கதையின் எந்த ஒரு வரியிலும் தாகூர் இதை முன்வைக்கவில்லை. ஆனால் இப்புள்ளியைச் சுற்றி நம் சிந்தனைகள் சுழலும் வண்ணம் கதையைச் சூட்சுமமாக அமைத்திருக்கிறார்.
**
இலக்கியத்துக்கான நோபெல் பரிசை வாங்கிய ஒரே இந்திய எழுத்தாளர் தாகூர். இந்திய தேசிய கீதத்தின் வழியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனத்திலும் இடம்பிடித்த எழுத்தாளர் இவர் என்கிற கூற்று மிகையான ஒன்றாகாது. இவருடைய கீதாஞ்சலி இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாகும். இவருடைய படைப்புகளாக கவிதைகள் மட்டுமன்றி, சிறுகதைகள், நாவல்கள் என நீண்ட பட்டியலுண்டு. 1961 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்த ரவீந்திரர் கதைத்திரட்டு என்கிற நுாலில் காபூல்காரன் என்னும் இக்கதை இடம்பெற்றுள்ளது.
***
paavannan@hotmail.com
- எங்கள் ஊர் பொங்கல்!
- திருப்பிக்கொடு
- பொங்கல்
- பொங்க லோ பொங்கல்!
- பொலிரட்டும் பொங்கல்!!!
- பொங்கல் கவிதைகள்
- மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)
- எனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- அறிவியல் துளிகள்-8
- க(னவு)விதை
- ஜன்னலினூடு பார்த்தல்!
- பசுமையான பொங்கல் நினைவுகள்
- இரண்டு கவிதைகள்
- பரிணாமம்
- இனி, அவள்…
- பொங்கல்
- ஒரு சந்திப்பு
- மகள்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை
- எண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா ?
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)
- அ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8
- கடிதங்கள்
- இளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி
- அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு
- வாசனை
- வேர்கள்
- கொழுத்தாடு பிடிப்பேன்