திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம்- விமரிசனக் கூட்டம்

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

திலகபாமா


திருவனந்தபுரம், இது எனது இரண்டாவது அநுபவம்.பிப்ரவரி மாதம் 24ம்தேதி ஞாயிறு மாலை 6 மணியளவில் 101வது கவியரங்கமும் ‘ சூரியனுக்கும் கிழக்கே ‘ என்கிற தங்களது கவிதைத் தொகுதி மீதான விமரிசனமும். வாருங்கள் என்ற அன்பான அழைப்பும் வர மீண்டுமொரு பயணம் திருவனந்தபுரத்திற்கு

போன முறை ஆகஸ்டு மாதம் மாருதம் வீச மண்ணெல்லாம் ஈரம் மணக்க ,மண் சுமந்த ஈரம் தான் வாங்கி தேனாய் சுரக்கும் மலர்கள் மணக்க ஓணம் பண்டிகையோடு திருவனந்தபுரம் சென்றோம். இந்த முறை அனல் பறக்கும் வெயில் , அரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினை கதிரவனும் தன் ஆதரவை கனன்றே தெரிவிப்பதாய் நமக்கு உணர்த்த , இருந்தும் ஊரெல்லாம் கொண்டாட்டம் ஆற்றுக்கால் பகவதியம்மன் திருவிழாவென , மதுரை எரித்த கண்ணகி ஆற்றைக் கடக்க குளிர்ந்து கோவில் கொண்டுள்ள இடம்.கோவில் திருவிழாவில் மக்களின் மகிழ்ச்சி அலைகளோடு எங்கள் நெஞ்சத்தையும் தென்றலாய் உலவ விட்டு, பிறகு என் குழந்தைகளை கோவளம் கரையில் அலைகளோடு புரளவிட்டு பின் வீடு வந்து கூட்டத்திற்கு தயாராகி தமிழ் சங்கம் 6 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

கலந்துரையாடலுக்கென மெல்ல அரங்கு தயாராகிக் கொண்டிருக்க தமிழ்சங்கத் தலைவர், விநாயகப் பெருமாள், கிரிஜா சுந்தர் ,குமரேசன் போன்றோருடன் நலம் விசாரித்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தோம்

கூட்டம் 6.30 மணிக்கு 30 நபர்களுடன் ஆரம்பமானது. நீலபத்மநாபன், வ. ஐ.ச ஜெயபாலன் ஆகியோர் வந்திருந்தன. ஐந்து பேர் சூரியனுக்கும் கிழக்கே கவிதை தொகுப்பை பற்றி விமர்சனம் செய்தனர். கவிஞர் வானமாமலை சூரியனுக்கும் கிழக்கே என்பது வித்தியாசமான தலைப்பு என்றார். கவிதை பற்றிய விமர்சனத்தை கவிதையாகவே தந்திருந்தார் ஜி . குமரேசன் அவர்கள்.

மனக்குமுறல், ஆனந்தம், காதல் தாலி

மண வாழ்வு ,புகுந்தவீடு, அடிமை எண்ணம்

தனக்கென்றோர் எதிர்பார்ப்பு,கனவு,சிக்கல்

தன் வாழ்வின் அன்றாடம், குழந்தை,ஏழ்மை

கணக்கின்ற சமுதாயக் கட்டுப்பாடு,

காண்கின்ற உலகியல் இயற்கை விண்,மண்

என என் கவிதை தாங்கியிருந்த விசயங்களை பட்டியலிட்டிருந்தார். கவிதைகளின் அழுத்தமான வார்த்தைகள் நமக்கு தவிப்பை ஏற்படுத்துகிறது என சிவகணேஷ் அவர்களும், கவிதைகள் இயல்பாக அதன் வேகத்திலேயே பதிவு செய்யப்படல் வேண்டும். கவிஞர் பேசும் பிரச்சனைகளை , அவர் முன்னிலை பண்புகளில் சொல்வதாலேயே அவரின் சொந்த பிரச்சனைகளாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது அடுத்தவர் பிரச்சனைகளை அவர் தனதாக்கி கொள்கி றார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் நீலபத்மனாபன் அவர்கள்

வ.ஐ.ச ஜெயபாலன் அவர்கள் பெண் மொழி என்பது இன்னமும் அறியப்படாத மொழியாகவே உள்ளது. ஆண்களும் பெண்களும் இ ணைந்து உலகத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்கு உன்னதங்களை இழந்து நிற்கும் ஆணிய நோக்கில் இருக்கும் பெண்மை தன் படிமச் சிறைகளை உடைத்து கொண்டு வரவேண்டும். அப்படி வெளிவந்திருக்கும் திலகபாமாவை வாழ்த்துகிறேன் என்றும் பேசினார்

தொடர்ந்து என்னுரையில் கவிதை பற்றி வந்த விமரிசனங்களும் விவாதங்களும் எனை மனம் திறக்க வைத்திருந்தன.

‘ என் கவிதை என்பது எனை பாதித்தவைகளும், என்னுள் பதிந்தவைகளும் எனது வாழ்வின் தேடல்களில் கிடைக்கும் தரிசனங்களுமே ஆகும். வாழ்வின் தேடல்களில் கிடைக்கும் என் மன உணர்வுகளை அதன் இயல்பிலேயே எழுத்துக்களில் பதிவு செய்வதே எனது கவிதைகள். கவிதை என்பது இயல்பிலேயே வர வேண்டும் என்றார் நீலபத்மனாபன் . ஆம் என் இறுக்கமான, அழுத்தமான உணர்வுகள் அது வெளிவரும் வேகத்திலேயே கவிதையாக்குகிறேன். கவிதையை வெட்டி ,ஒட்டி செறிவு சேர்த்திருக்கலாம் என்று நண்பர் சொன்னார். என்னால் அது இயலாமலேயே போகிறது. வெட்டி ஒட்டி சேர்ப்பது என்பது இயல்பாய் இருக்கின்ற கவிதையின் போக்கை இயந்திரத்தனத்துக்குள் மாற்றி விடுவதாய் எனக்குப் படுகின்றது.

அடுத்து உருவம்தொடர்பான சிந்தனைகள். என் கவிதை இன்றைய கால கட்டத்தில் இல்லை என்று கூறும் நண்பர்கள் உண்டு. யாரோ தீர்மானித்து வைத்த உருவத்திற்குள் என் கவிதையை கொண்டு வருவது என்பது என்னால் இயலாததே. கவிதை அதன் இயல்பிலேயே அதன் வடிவத்தை தீர்மானிக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். நீங்கள் எதிர்பார்க்கும் முகங்களை என்னில் தேடினால் அது எப்படி சாத்தியமாகும்

ஒரு வேளை காலப்போக்கில் என் கவிதையும் நீங்கள் எதிர்பார்க்கும் உருவத்திற்கு வந்து சேரலாம். சேராமலும் போகலாம். எதிர்பார்க்கும் உருவத்திற்குள் வந்து சேர்வதொன்றே அதன் இலக்காக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

அடுத்து பெண்ணியம் தொடர்பான சிந்தனை என் கவிதைகளில் அதிகம் வருகின்றது என்கிற கருத்து பெண்ணியம் பற்றி எனக்கு அதிக ஈடுபாடு இருந்ததில்லை….எனக்குள் பாதிப்பு ஏற்படுத்திய எனை சூழ்ந்து நடந்த பிரச்சனைகளையே பதிவு செய்தேன் அவற்றை ஒன்று படுத்தி பார்க்கையில் பெண்ணியம் பற்றிய சிந்தனைகளும் அதிகமாக இருந்தன….அதற்கு காரணம் எல்லா பிரச்சனைகள்ளுள்ளும் நேரும் பாதிப்பு, அடிப்படையில் எங்காகிலும் ஒரு பெண் ,பெண் என்கிறகாரனத்திற்காக ஒதுக்கப் படுதலே என என் மனமும் கவிதையும் உணர்ந்திருந்தன. பெண்ணியம் எனும் போது ஆண் எதிர்ப்பு வாத கொள்கை என்றும் பொருள் கொள்கின்றனர். சக மனிதர்களோடும் குடும்பத்தாருடனும், சமூகத்துடனும் விட்டுக் கொடுக்க நானும் தயார். ஆனால் பெண் என்பதற்காக விட்டுக் கொடுக்க நேரும் போது எனது எதிர்ப்புகள் பலமானாதாகவே இருந்து வந்திருக்கின்றது. பெண் என்பதனாலேயே உணர்வுகள் கவனிக்கப் படாமல் போவதும் பெரும் கோபமாகவே இருக்கின்றது . ஒரு பிரச்சனையை ஆண் சந்திபதற்கும் பெண் சந்திப்பதற்கும் இருக்கும் வேறுபாடுகள், பெண் என்பதனால் ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரம் இவையெல்லாம் நீங்கள் சொல்லும் பெண்ணியம் பேச வைத்திருக்கின்றன

அதைக் கூட பிறப்பின் காரணமாக வந்த வேறுபாட்டினால் மனிதம் ஒதுக்கப்படுவதை கண்டித்தே என் எண்ணங்கள் இருக்கின்றன பெண்ணியம் என்று தொடங்கியவுடன் பெண்ணுக்கு பெண்ணே எதிரி போன்ற வசனங்களும் தொடர்ந்து வந்து விடுகின்றது. ஆண்கள் வடிவமைத்த சமூகத்தில் பெண் ஆணின் பிரதி நிதியாகவும், பிரதி பிம்பமுமாகவே இருக்கின்றாள். ஆண் புனைந்து கொடுத்த பெண் முகங்களை பூட்டியவளாகவே இருக்கின்றாள். அதை பெண்கள் உணர வேண்டும் என்பதுவே என் ஆவல்

பிறகு கவிதைகளில் நிறைய புராண விசயங்கள் கையாளப் பட்டிருக்கின்றது என சுட்டிக் காட்டப்பட்டது.

எந்த ஒரு விசயத்தின் ஆரம்ப அடிகள் நல்லவற்றை நோக்கியே முன் வைக்கப்படுகின்றன .பழமை வாதங்கள் என்று பேசப்படும் புராணங்களும் அப்படியே.ஆனால் அது நாளடைவில் ஆண்களால் ஆண்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டு விட்டது.சாதகமாக மாற்றப்பட்டது பாதகமில்லை.அது பெண்களுக்கு பாதகமாக அடியெடுத்து வைக்கப் படும் போது அவற்றை கலாசாரம் சிதையாமல் சீர்படுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்கின்றேன்.புராணங்கள் இயல்பாகவே என் கவிதைகளில் இடம்பெற்று விடுகின்றது.இன்றைய பிரச்சனைகளை பேசும்போதும், உதாரணமாகத் தாய்வீடு அனுப்புதல் அல்லது அனுப்பாதிருத்தலை தண்டனையாக பெண்களுக்கு வழங்கப்படும் இன்றைய பிரச்சனைகள் பற்றி பேசும் போது தாய் வீடு செல்ல அனுமதி கேட்டு கெஞ்சி நிற்கும் திருவிளையாடல் காட்சி எனையறியாது என் மனக் கண்ணில் தோன்றி கவிதையுள்ளும் பதிவாகி விடுகின்றது.

என் கவிதை பயணம் எனக்கான ஒத்தூதலாக இல்லாது எனைச் சேர்ந்திருக்கும் நான் அன்றாடம் சந்திக்கும் நேசமிகு மனிதர்களின் பிரச்சனைகளை எனதாக்கி பின் கவிதையாகி சமூகத்துக்காக்கி கொடுக்கும் விசயமாக இருக்கும்.

என்னுரை முடிய தொடந்து நடைபெற்றது காவியரங்கம். இது 101 வதுகவியரங்கம் என்பது இதன் சிறப்பு… கிரிஜா சுந்தர் நன்றியுரை கூற கூட்டம் நிறைவு தந்து நிறைவு பெற்றது.

Series Navigation

திலகபாமா

திலகபாமா