எனக்குப் பிடித்த கதைகள் – 7 – கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை ‘ – எதிர்பார்ப்பும் ஏக்கமும்

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

பாவண்ணன்


எங்கள் குடும்பத்தில் நான் மூத்தபிள்ளை. மூத்தவனாக இருப்பதில் முதல் நஷ்டம் அவன் யாருக்கும் தம்பியாக இருக்க முடியாது என்பதுதான். குறிப்பாக எந்த அக்காவுக்கும் தம்பியாக இருக்க முடியாது. எல்லாக் குடும்பங்களிலும் மூத்த குழந்தை பெண்குழந்தையாக இருக்க வேண்டும் என்று மனசார விரும்புகிறவன் நான். ஒரு சகோதரியின் அரவணைப்பும் அன்பும் தாயின் அரவணைப்புக்கும் அன்புக்கும் நிகரானவை. தாயின் இன்னொரு நிழல் சகோதரி. ஒரு சகோதரிக்கான ஏக்கம் என் நெஞ்சில் எப்போதும் உண்டு. என்னைவிட வயதில் மூத்த பெண் நண்பர்களையும் நண்பர்களின் மனைவிமார்களையும் அக்கா என்று அழைக்க நான் தயங்கியதில்லை. ‘என் தம்பி எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா ? ‘ என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படவும் ‘போடா அசடே ‘ என்று செல்லமாகக் கடிந்து கொள்ளவும் ஒரு சகோதரியால் மட்டுமே எப்போதும் முடியும். விளையாடப் போகிற இடங்களில் கிட்டும் புளியம்பழங்களையும் கொடுக்காப்புளிகளையும் கரும்புத் துண்டுகளையும் ஒரு சகோதரிக்காக மட்டுமே கொண்டு வந்து தரமுடியும். அக்கா என்பவள் மிகப்பெரிய பொக்கிஷம். அக்கா இல்லாதவர்கள் சற்றே அதிர்ஷ்டம் குறைந்தவர்கள். சமீபத்தில் யூமா.வாசுகி என்னும் நண்பர் எழுதியிருந்த ‘ரத்த உறவுகள் ‘ நாவலில் தந்தையிடம் அடிபடும் தம்பிகளைத் தாங்கும் சகோதரியைப் பாத்திரமாக வாசித்த போது என் நெஞ்சம் நெகிழ்ந்ததை எளிதில் மறக்க முடியாது.

என் நண்பன் கணேஷூக்கு அக்கா உண்டு. எங்களை விடப் பல மடங்கு வசதியானவர்கள். எங்கள் பள்ளி மைதானத்தில் பாதி அளவுள்ள இடத்தில் அவர்கள் வீடும் தோட்டமும் இருந்தன. உள்ளே நுழைந்து செல்லவே அச்சமுண்டாகும். கணேஷ் தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் சேர்ந்து படிக்கவும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பெரிய கூடம். மெத்தென்ற இருக்கைகள். திரைப்படங்களில் பார்க்கிற மாதிரி மேசைகள், நாற்காலிகள், ஜன்னல் திரைச்சீலைகள், பூங்கொத்துகள். அந்த இடத்தில் என்னைச் சற்றும் பொருத்தமற்றவனாக உணர்ந்தேன் நான். உடம்பு வியர்த்தது. உள்ளூர ஒரு பயம் ஓடிக்கொண்டே இருந்தது. கணேஷ் தன் அக்காவை எனக்கு அறிமுகப்படுத்தினான். அந்த அக்கா நல்ல உயரம். நீலநிறத்தில் ஒரு தாவணி கட்டியிருந்தாள். இரட்டைச்சடை போட்டிருந்தாள். கழுத்தில் தங்கச் சங்கிலி. அதை உதடுகளுக்கிடையே வைத்தபடி அந்த அக்கா பேசினாள். என் நாக்கில் பேச்சு புரளவில்லை. ‘என்னடா உன் சிநேகிதனுக்கு பேச்சு வராதா ? ‘ என்றாள் அந்த அக்கா. ‘ஐயோ அக்கா, ஸ்கூல் பேச்சுப் போட்டியில அவன் முதல்பரிசு வாங்கனவன். உன்னப் பாத்து கூச்சப்படறான் ‘ என்றான் கணேஷ். புன்னகைத்தபடி உள்ளே சென்ற அக்கா முறுக்கும் தேநீரும் கொண்டு வந்து தந்தாள். தேநீர் என்பதைக் கடையில் வாங்கி அருந்துகிற பானம் என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த எனக்கு வீட்டிலும் அதைத் தயாரித்துக் குடிக்க முடியும் என்று முதல் முதலாகப் புரிந்து கொண்டதில் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

இப்படி முதல் ஆச்சரியங்கள் பல இருந்தன அங்கே. இறகுப் பந்தையும் மட்டையையும் முதலில் பார்த்தது அங்குதான். ரிங்பாலைத் தொட்டு ஆடியதும் அங்குதான். ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க அகராதி என்ற ஒன்று இருப்பதைத் தெரிந்து கொண்டதும் அங்குதான். நீலம், சிவப்பு தவிர வேறு மையுள்ள பேனாக்களே உலகில் இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நான் கருப்பு, பச்சை நிறமுள்ள பேனாக்களையும் பன்னிரண்டு வண்ணங்களிலும் பட்டையடிக்கிற ஸ்கெட்ச் பேனாக்களையும் ஆச்சரியத்தோடு பார்த்ததும் அங்குதான் . உள்ளங்கையில் ஊற்றிய ஒருதுளி திரவம் சோப்பு நுரைகளாக மாறிய ஷேம்புவையும் அங்குதான் பார்த்தேன்.

நாளாக நாளாக, அந்த அக்கா எனக்கும் கூடப் பிறந்தவள் போலானாள். எனக்கும் கதை சொன்னாள். என் கதைகளையும் கேட்டாள். ஸ்கிப்பிங் ஆடினாள். இறகுப் பந்தை அடித்து விரட்டினாள். பேஸ்பால் மட்டையைப் பிடித்துக் கொண்டு என்னைப் பந்துவீசச் சொன்னாள். சிரித்தாள். ‘அத்தையடி மெத்தையடி ‘ அழகாகப் பாடினாள்.

காலம் என்னைக் கிராமத்தைவிட்டு வெளியே தள்ளியது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பட்டதாரியாக கிராமத்துக்குள் நுழைந்தேன். அன்று மாலையே கணேஷைப் பார்க்கச் சென்றேன். அவனும் சென்னைக்குச் சென்று பட்டதாரியாகத் திரும்பி வந்திருந்தான். பேசிக் கொண்டிருக்கும் போது அக்காவைப் பற்றிக் கேட்டேன். அக்காவுக்குத் திருமணமாகி விட்டதென்றும் தலைப்பிரசவம் நடந்து மூன்று மாதங்களாகின்றன என்றும் சொன்னான். அக்கா எந்தப் பக்கத்திலிருந்து வெளிப்படுவாள் என்று நான் ஒவ்வொரு கதவாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏறத்தாழ ஒருமணி நேரத்துக்குப் பின்பு கணேஷ் உள்ளே சென்று அழைத்து வந்தான். பூசினாற் போல இருந்தாள் அக்கா. களையான முகம். கழுத்தில் மூன்று தங்கச் சங்கிலிகள் இருந்தன. பும்மென்ற தலைமுடியைக் கொண்டையாகக் கட்டியிருந்தாள். என்னைப் பார்த்துச் சிரிக்காமலே ‘பாஸ்கர்தானே ? எப்படி இருக்கே ? டிகிரில நீ என்ன மெய்ன் எடுத்தே ? ‘ என்று கேட்டாள். ஏதோ பட்டணத்துக் கதையைப் பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ‘உள்ள கொழந்த தனியா இருக்கான் , அப்பறம் பாக்கலாமா ? ‘ என்று சொன்னபடி தலையசைக்கும் முன்பே திரும்பிச் சென்று விட்டாள். ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் வெளியே வந்தேன் நான்.

அக்காவின் போக்கு விசித்திரமாக இருந்தது. பழைய அக்காவிடம் இருந்த ஏதோ ஒன்று இந்த அக்காவிடம் காணாமல் போயிருந்தது. என்ன அது ? ஏன் காணாமல் போனது ? காணாமல் போனதற்குக் காரணம் என்ன ? இடையில் கழிந்த ஐந்தாண்டுகளா ? அவளுக்கு நடந்த திருமணமா ? அவளுக்குக் கிட்டிய உலக அறிவா ? குழந்தைகளா ? வசதிபேதமா ? பல நாட்கள் இக்கேள்விகள் நெஞ்சைக் குடைந்ததுண்டு. விடை கிடைத்தபாடில்லை.

விடுப்பில் கிராமத்தில் இருந்த காலம் வரை அதற்குப் பின் கணேஷைப் பார்க்கச் செல்லவே இல்லை. அவனே ஒன்றிரண்டு முறைகள் தேடி வந்தான். ‘ஏன் வரவில்லை ? ‘ என்று கேட்டான். முதலில் மழுப்பினேன். பிறகு ஆதங்கத்தைக் கொட்டினேன். ‘அட போடா முட்டாள், , அது எங்கிட்டயும் அப்படித்தான் இருக்குது ‘ என்றான் சிரித்தபடி. நான் நம்பிக்கையில்லாமல் அவனைப் பார்த்தேன். அந்த வார்த்தையை நம்பாமலேயே ஊரைவிட்டு வெளியேறினேன். ஆறாத வலியாக அந்த இழப்பு எனக்குள் இருந்தது. எதிர்பாராத தருணத்தில் படிக்க நேர்ந்த ஒரு சிறுகதை என் மனத்தை மாற்றியது. கணேஷின் வார்த்தைகளை நான் நம்பியிருக்க வேண்டும் என்று தோன்றியது. பல நாட்களாக நெஞ்சில் சுமந்திருந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்து விட்டது. எனக்குப் புரிய வைத்த கதை கி.ராஜநாராயணன் அவர்களின் சிறுகதை ‘கன்னிமை ‘

நாச்சியாரம்மாள் என்பவரைப் பற்றி கி.ரா. சொல்கிறார். கதை இரண்டு பாகங்களாகச் சொல்லப்படுகிறது. முதல் பகுதியில் அவள் மனுஷியாகி கன்னிகாத்த நாட்கள் சொல்லப்படுகின்றன. அந்த நாட்களில் அவள் வேலைக்காரர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் பசியாறப் படைக்கிறாள். பிரபந்தப் பாடல்களைப் பாடுகிறாள். கம்ப ராமாயண வசனப் புஸ்தகத்தை ராகம் போட்டு வாசிக்கிறாள். செம்பு நிறையத் தயிர் கொடுத்துப் பருகச் சொல்கிறாள். பருத்தி எடுக்க வந்த பள்ளுப்பெண்களுக்கு மடிப்பருத்தி, பிள்ளைப் பருத்தி, போடு பருத்தி என்று பகிர்ந்து தருகிறாள். அடிபட்டவன் வீட்டுக்கு பத்துப்பக்கா நெல் அரிசியையும் இரண்டு கோழிகளையும் கொடுத்தனுப்புகிறாள். ஐந்து வீடுகள் தள்ளி உள்ள புக்ககத்துக்குக் கட்டிக் கொண்டு போகும் போது ‘மாயம்ம லஷ்மியம்ம போயி ராவே ‘ என்று சகோதரர்களால் விடைகொடுத்து அனுப்பப் படுகிறாள். இத்துடன் நாச்சியாரம்மாவின் முதல் பகுதி முடிவடைகிறது. இரண்டாம் பிரவில் வருவது, அவள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த வகை ஆகும். இக்கால கட்டத்தில் அவளிடம் எக்குறையுமில்லை. ஆனால் மிக நுட்பமான குணம் அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்டது. குழந்தைகளிடம் சலிப்பு. கூலி கேட்டு வருகிறவர்களிடம் சலிப்பு. அலுத்துக் களைத்து வருகிறவரிடம் பணக்கணக்கு கேட்கிற அவசரம். அர்த்த ராத்திரியில் ரூபாய் அணா பைசா கணக்கில் மூழ்குகிற குணம். பழைய நாச்சியாரிடமிருந்து பிரிந்து போன ஏதோ ஒன்று திரும்ப வராதா என்று ஆதங்கப்படுகிறான் மணந்து கொண்டவன்.

கன்னிமை என்பது ஒரு செல்வம். கண்ணுக்குத் தெரியாத ஒரு சுரங்கத்தின் வழியாக பெண்களின் மனம் அந்தச் செல்வத்தை அடைகிறது. அந்தச் சுரங்கத்தையும் மனத்தையும் இணைக்கும் வழியை நுட்பமாக கண்டடைகிறார்கள் கன்னிப்பெண்கள். அன்பு, காதல், இரக்கம், கருணை, மதிப்பு, நம்பிக்கை எல்லாவற்றையும் அவர்கள் அந்த நுட்பமான வழியாகவே பெறுகிறார்கள். இக்கட்டத்தில் சுரந்து சேகரமாகும் குணங்களே பிற்கால வாழ்வுக்கு இருப்பாகவும் அமைகின்றன என்பதில் ஆச்சரியமில்லை. திருமணம் இந்த வழியை அடைத்து விடுகிறது. பெண்களின் கவனம் இந்த வழியை விட்டு வேறு வேறு வழிகளில் பதியத் தொடங்கிவிடுகின்றன. அவரவர்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிற விதத்துக்கேற்ப அந்த வழிகளின் எண்ணிக்கையும் அளவும் மாறுபடுகின்றன. அந்த வழிகளின் மூலமாகவும் பெண்களுக்கு இச்செல்வம் கிட்டக்கூடும். ஆனால் அது கன்னிமைப் பருவத்தில் பெறும் செல்வத்துக்கு ஈடாவது கிடையாது. பெற்றுத் தொலைத்து விடுகிற செல்வத்தைப் பற்றி அவர்கள் மனம் கவலைப்படுவதில்லை. உறக்கத்தில் வந்து போன கனவாகி விடுகிறது அவர்களுக்கு. ஆனால், அச்செல்வத்தைப் பெற்றுத் திளைத்தவர்களோ, உள்ளளவும் நினைக்கப்பட வேண்டிய உப்பிட்டவர்களாக, அப்பருவப் பெண்களை நினைத்து மருகுகிறார்கள். உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் கன்னிமையின் அன்பில் திளைத்தவனாகவும் காலமெல்லாம் அத்தகு அன்பு கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறவனாகவும் இருக்கிறான். அதற்கு நான் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும் ?

***

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்