கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

ஜெயமோகன்


அன்புள்ள மாலன் ,

கலாச்சாரம் குறித்த என் விடைகளை நீங்கள் பொருட்படுத்திக் கவனிக்கவில்லையாயினும் வாசகர்கள் கவனிக்கத் தவறியிருக்க வாய்ப்பில்லை என ஆறுதல் கொள்கிறேன்.ஒரு படைப்பிலக்கியவாதி திட்டவட்டமான விடைகளை எது குறித்தும் முன்வைக்க தயங்குவான்.கலாச்சாரமென நான் உணர்வதை எதிர்கொள்ள நேரும் பலவித தருணங்களை முதலில் தொகுத்து தந்துவிட்டு அவற்றுக்குப் பொதுவான ஒரு வரையறையை அளிக்க நான் முயன்றுள்ளதாகவே எனக்குப் படுகிறது.அவ்வரையறையை அத்தருணங்களுக்கு முழுக்க விரித்துப் பொருள் கொள்வது சாத்தியம்தான்.

நீங்கள் எளிய விடைகளில் திருப்தி கொண்டிருக்கிறீர்கள் .அவ்விடைகளில் இருந்து ஒரு தெளிவான திட்டத்தையும் கொண்டிருக்கிறீர்கள் .அப்படிப் பட்ட திருப்தியை நான் அடைய என் அறிதல்கள் என்னை அனுமதிக்கவில்லை.என் வினாக்கள் மேலும் அகன்றவை என கலாச்சாரம் குறித்து நான் தேடும் மாறுபட்ட தளங்களை சொல்லும்போதே நீங்கள் ஊகித்துவிட முடியும். ஆகவே என் வரையறையும் மேலும் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். அன்றாட வாழ்க்கை முதல் செவ்விலக்கியம் தத்துவம் வரை பரந்து கிடக்கும் ஓர் அடிப்படையாகவே நான் கலாச்சாரத்தைக் காண்கிறேன்.

மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயான உறவு குறித்து நீங்கள் கொண்டுள்ள எளிமையான புரிதலை நான் ஏற்க இயலாது.மொழியை கலாச்சாரத்திலிருந்து பிரிக்க முடியாது,காரணம் மொழியை மனம் என்ற குறியீட்டு இயக்கத்திலிருந்தும் பிரித்துவிட இயலாது.மொழி என நான் சொல்லும்போது சொற்களையல்ல சொற்களுக்கு அர்த்தம்தரும் அகமொழியை[langue] குறிப்பிடுகிறேன். மொழி ஒரு தொடர்பு ஊடகம் மட்டுமல்ல.

*****

கலாச்சாரத்தை குறித்த விவாதத்தை உடனடியாக சிற்றிதழ் – பிரபல இதழ் என்ற தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளீர்கள் .இங்கும் நான் என் அனுபவ தளம் சார்ந்தே பேச வேண்டியவனாகிறேன்.சிற்றிதழ்கள் தேவையில்லை என்று சொல்பவர்களிடம் நான் உடனடியாக கேட்க விரும்பும் கேள்வி அப்படியானால் இப்போது சிற்றிதழில் வெளியாகும் படைப்புகளையும் கட்டுரைகளையும் எங்கு வெளியிடுவது ?இன்று எந்த பிரபல இதழும் அவற்றில் மிகச் சிறு பகுதியைக் கூட வெளியிடாது என்று நாமனைவருமே அறிவோம் .அப்படியானால் அவை தமிழுக்கு தேவை இல்லை என்று சொல்கிறோமா ?உதாரணமாக அமெரிக்கா மீதான தாக்குதலின் அரசியல் ,கலாச்சார பின்புலம் குறித்து தமிழ் சிற்றிதழ்களில் வந்த கட்டுரைகள் அளவுக்கு எந்த பிரபல ஊடகத்தில் விஷயங்கள் வெளியிடப்பட்டன ?தங்கள் பொறுப்பில் உள்ள ‘சன் செய்தி ‘ தெ ‘லைக்காட்சியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.பிரபல ஊடகங்களில் சராசரித்தனம் கொண்ட பொதுவான கருத்துக்கள் மட்டுமே வந்தன.தீவிரமான மாற்றுத்தரப்புகள் ,அபூர்வ கோணங்கள் ,பிற மொழியிலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் சிற்றிதழ்களில்தான் வந்தன[இடதுசாரி , இஸ்லாமிய , இலக்கியச் சிற்றிதழ்கள்] .

தினமணி நாளிதழ் மட்டுமே இன்று தமிழில் ஓரளவாவது கருத்துப் பரிமாற்றத்துக்கு இடம் தரும் பிரபல ஊடகம் அதை அதிக பட்சம் பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். அதன் எல்லைகளை சோதித்து அறிந்துள்ளேன். [நீங்கள் ஆசிரியராக இருந்த காலத்தைவிட இன்று அப்பக்கத்தின் தரமும் பங்களிப்பு விஸ்தீரணமும் மிக அதிகம் என்பதை எவருமே உணர முடியும் —- தாங்கள் ஆசிரியராக இருந்த எந்த இதழிலும் எனக்கு ஒரு வரிகூட எழுத இடம் தரப்பட்டதில்லை என்பதையும் இங்கு சொல்லியாகவேண்டும்] குறைந்த பட்ச சராசரிக்கு மேலே போகும் கட்டுரைக்கு புரியவில்லை என்று உடனே வாசக எதிர்வினை வரும் . சராசரியான மேலோட்டமான இந்த தளம் தவிர அறிவார்ந்த விவாதம் ஏதும் நடக்க அவசியமில்லை என்று எண்ணுகிறீர்களா ? நடக்க வேண்டுமெனில் எங்கு ?

தமிழின் இலக்கியப் படைப்புகளில் புதிய முயற்சிகள் சிற்றிதழ்களை நம்பியே இன்றும் உள்ளன .பிரபல இதழ்களில் இருந்து உடனடியாக அவை திரும்பிவிடும் என்பது வெளிப்படை .அவை தேவை இல்லை என்று கருதுகிறீர்களா ?ஆம் என்றால் பிரச்சினை வேறு.தேவை என கருதுபவர்கள் சிற்றிதழ் நடத்தி வாசிக்கிறார்கள்,அவ்வளவுதான்.பிரபல இதழ்களை குறை சொல்லவில்லை .அவை தங்கள் சராசரி வாசகனை முன்னிறுத்தியே செயல்படமுடியும் .தமிழின் சராசரிதளாத்துக்கு மேல் எதுவுமே எழுதப்படக் கூடாது என்று சொன்னால் ,மன்னிக்கவும் என்னால் அதை ஏற்க முடியவில்லை. அப்படி ஒரு கலாச்சாரம் இயங்க முடியாது.அதற்கு உலகில் ஒரு முன்னுதாரணம் கூட கிடையாது.

நேற்றைய சிற்றிதழ்களை புகழ்வதும் இன்றைய சிற்றிதழ்களை நிராகரிப்பதும் இப்போது ஒரு வாடிக்கை .காரணம் நேற்றைய சிற்றிதழ்களின் பங்களிப்பு மறுக்க முடியாதபடி வரலாறாக உள்ளது.இன்றைய சிற்றிதழ்களின் போட்டி பொறாமை , குழுமனப்பான்மை இன்ன பிற விஷயங்கள் சுட்டிகாட்டப் படுகின்றன .நேற்றைய சிற்றிதழ்களின் வரலாறோ ,பொதுவாக சிற்றிதழ்களின் வரலாறோ தெரிந்த ஒருவர் இப்படி சொல்ல தயங்குவார் .சி சு செல்லப்பாவின் சாதனை நாடறிந்ததே .ஆனால் அவருக்கு க.நா.சு மீது இருந்த காழ்ப்பு ,தன் கருத்துக்கள் மீது இருந்த விவாதிக்கத் தயாரில்லாத பிடிவாதம் [குருபீட மனோபாவம் ?] அக்காலப் படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டது.ஏன் செல்லப்பாவே தீபம் இதழில் கடைசிக் காலத்தில் எழுதிய எழுத்து கால நினைவுகள் முழுக்க இதே விஷயங்கள்தான் நிரம்பியுள்ளன.செல்லப்பாவின் பிடிவாதம்தான் பிற்காலத்தைய பல சிற்றிதழ்கள் உருவாக காரணம் என்பதை வேண்டுமென்றால் உங்கள் நண்பர் ஞானக்கூத்தனிடம் கேட்டு உறுதிசெய்துகொள்ளலாம்.

சிற்றிதழ்கள் இலக்கியக் கருத்துக் குழுக்களாகவே என்றும் இருந்துள்ளன.எந்த நடுநிலை வாசகனும் இன்றைய சிற்றிதழ்களை அன்றைய சிற்றிதழ்களுடன் ஒப்பிட்டால் அவற்றின் தளம் நுண்கலைகள்,வரலாறு, தத்துவம் ,நாட்டார் மரபு ,செவ்விலக்கியம் என விரிந்தபடியே இருப்பதைத்தான் காண்பான்.மொத்த கசடதபற இதழ்களிலும் வெளிவந்த விஷயங்களைவிட இரண்டு சொல்புதிது இதழ்களில் வெளிவந்த விஷயம் அளவிலும் தரத்திலும் அதிகம் என்றே நான் சொல்வேன்.விவாதங்கள் வீம்புகளாவதும் ,சண்டைகளாக ஆவதும் உண்மையே.மனித பலவீனம் .அவைகூட எழுத்து ,கசடதபற ,கொல்லிப்பாவை,லயம்,யாத்ரா முதலிய இதழ்கள் அளவுக்கு இப்போது கீழிறங்குவது இல்லை .இப்பலவீனங்களைதாண்டியே அவற்றின் பங்களிப்பு நிகழ்ந்துள்ளது.

வாசகதளம் விரிவடையவில்லை என்பது ஒரு மூச்சுதிணறச் செய்யும் உண்மையே .முன்பு 250 முதல் 500 வரை அச்சிட்டார்கள்.இப்போது 500 முதல் 3000 வரை.ஆனால் அது தமிழ் சமூகத்தின் பிரச்சினை .அதற்காக சிற்றிதழ்கள் தேவை இல்லை என்றால் அது என்ன தர்க்கம் என எனக்கு புரியவில்லை. இன்றும் சிற்றிதழின் தேவை உள்ளது.விகடனும் குமுதமும் வாசிக்கும் வாசகர்களில் ஒரு சாரார் ஒரு கட்டத்தில் அடுத்தது என்ன என்று தேடுவது ஒரு நிதரிசனம்.கணையாழிக்கும் பிறகு காலச்சுவடுக்கும் பிறகு சொல்புதிதுக்கும் அவர்கள் வருவார்கள் .அப்படி வரும் வாசகர்கள் வாரம் ஒருவராவது எனக்கு எழுதியபடியே தான் உள்ளனர்.அவர்களில் முக்கால்பங்கினர் கிராமப்புற வாசகர்கள் ,பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் பலமுறை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். அரசியல் ரீதியாக அறிவு ரீதியாக அழகியல்ரீதியாக ஆன்மீக ரீதியாக அந்த தேடல் உள்ளது. அந்த இடத்தை நிரப்பும் தேவை இருக்கும் வரை ,அதற்கு பிரபல இதழ்கள் தயாரிலாதவரை சிற்றிதழ்கள் வரும் .

****

உங்கள் கருத்துரையில் இலக்கியம் இயங்கும் தளம் குறித்த கணிப்பு ஒன்று உள்ளது என்று படுகிறது ,அதன் மீது எனக்குள்ள மறுப்பினையும் பதிவு செய்ய விரும்புகிறேன். செய்திகளை ,கருத்துக்களை [விழுமியங்களை ] மக்களிடையே கொண்டு செல்லும் ஒருவகை ஊடகம் என்று இலக்கியத்தை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அது கடந்த காலத்தில் இங்கு இடதுசாரிகளாலும் பிற சீர்திருத்தவாதிகளாலும் முன்வைக்கப்ப்பட்ட கருத்து. அந்தச் செய்திகள் ,கருத்துக்கள் எங்கு எவரால் கண்டையப் படுகின்றன , உற்பத்தி செய்யப் படுகின்றன என்ற வினாவுக்கு இத்தரப்பினர் தத்துவ ஆசான்களை ,மதகுருக்களை ,அரசியல்தலைவர்களை காட்டுவார்கள்.அதாவது அவர்கள் கோணத்தில் இலக்கியம் ஒரு உப அறிவுத்துறையே .

என் வாசிப்பும் ஆக்க அனுபவமும் அப்புரிதலை முற்றாக மறுக்கின்றன.பிற அறிவுத்துறைகளைபோலவே ,ஒரு படி மேலாகவே , இலக்கியமும் ஒரு மெய்காண்முறைதான் என நான் நம்புகிறேன். கற்பனை அதன் உபகரணம் .சாத்தியமான அனுபவங்களில் இருந்து கற்பனைமூலம் அடுத்த தளங்களுக்கு ந்கர முயல்வதும் ,அனுபவங்களையும் அறிதல்களையும் கற்பனைமூலம் தொகுக்க முயல்வதும் அதன் வழிமுறைகள்.ஒரு எழுத்தளன் தன் ஆக்கத்தை உருவாக்குவது அறிதலின் பொருட்டே .

அப்படியானால் அவன் ஏன் அதை எழுதவேண்டும்,பிரசுரிக்க வேண்டும் என்ற வினா எழலாம். எழுத்தாளன் தன் அந்தரங்க மொழியில் எழுதவில்லை.அவனது ஆக்கம் ஒரு சொல்லாட்டக் களனில் [discourse ] நிகழ்கிறது. அச்சொல்லாட்டக் களனை இடைவிடாது வளர்த்தெடுத்தாகவேண்டியுள்ளது. சொல்லாட்டக் களன் என்பது வாசிப்பினால்,விவாதத்தால்,படைப்புகளுக்கிடையேயான உறவாடலால் உருவாவது . அசோக மித்திரனும் சுந்தர ராமசாமியும் ஜானகிராமனும் ப .சிங்காரமும் , இவர்கள் மீதான இதுவரையிலான தமிழ்ச்சூழலின் வாசிப்பும் எல்லாம் கூடி உருவானதே நான் என்னை அறிய உபயோகிக்கும் படைப்பு மொழி.

ஆகவே இலக்கியப் படைப்புக்கள் அவற்றின் சொல்லாட்டக் களனுக்குள் வரும் வாசகனை உத்தேசித்தே எழுதப் படுகின்றன.அவ்வாறு வருவதற்குரிய ஆவலும் உழைப்பும் வாசகனிடம் இருக்க வேண்டும்.இது எந்த கலைக்கும் எந்த அறிவுத்துறைக்கும் பொருந்தும் விதியாகும்.எல்லாரும் எப்போதும் நுழைந்துவிடச் சாத்தியமான துறை என ஒன்று இல்லை.

எழுத்தும் வாசிப்பும் இணைந்தே அச்சொல்லாட்டக் களன் உருவாகிறது.

நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க மூடிய அறைக்குள் ஆய்வு செய்பவன் மக்கள்தொடர்பு இல்லாததனால் மக்கள் விரோதி என்றும் ,நேரடி சிகிழ்ச்சை அளிக்கும் மருத்துவர் மட்டுமே மக்கள்சேவகன் என்றும் சொல்லும் பார்வை உங்களூடையது. கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் எழுத்துக்களுக்கு ஒரு முக்கியத்துவம் கண்டிப்பாக உண்டு. அப்படைப்புகள் தங்கள் கருத்துக்களையும் மொழிஉத்திகளையும் அவற்றை அசலாகக் கண்டடைந்த படைப்புகளிலிருந்து எடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம் . வணிகக் கேளிக்கை எழுத்துக்களின் மூலம் கூட அசலான இலக்கியப்படைப்புகளிலேயே உள்ளது என்பதும் ஓர் உண்மை .

மக்கள் இலக்கியம் எனும்போது எப்போதுமே தமிழ்சூழலை வைத்து எனக்கு எழும் ஐயங்கள் சில உண்டு.தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவு.இவர்களில் செய்தித்தாள்களையாவது படிப்பவர்கள் மேலும் குறைவு.புனைகதை படிப்பவர்கள் அதிலும் குறைவு. தமிழில் மிக அதிகமாக படிக்கப்படுபவர் ராஜேஷ் குமார் [சமீபமாக ரமணி சந்திரன்] .இவரது நூல்கள் விற்பனை 50000 பிரதிகள் .ஒரு பிரதியை 10 பேர் படித்தால்கூட 5 லட்சம்பேர் .தமிழின் எல்லா வணிக இதழ்களின் விற்பனையையும் சேர்த்தால்கூட 20 லட்சம்தான் .பத்து கோடியில் இது எந்த மூலை ?அப்படியானால் எழுத்துவடிவ ஊடகமே பயனற்றது தானா ?இந்த சிறுபான்மையின் கருத்துக்கள் நம் சமூகத்தை பாதிக்குமென்றால் அதே தர்க்கப்படி அதைவிட சிறுபான்மையான சிற்றிதழ்கள் ஏன் சமூகத்தைப் பாதிக்கக் கூடாது ?

தமிழில் மார்க்ஸியம் குறித்து வந்த எல்லா இதழ்களும் இன்றுவரை சிற்றிதழ்களே .மார்க்ஸியம் குறித்து அறிந்தவர் இன்றும் மிக சிறுபான்மையினரே .தமிழ் நாட்டில் மார்க்ஸிய பாதிப்பே இல்லையா என்ன ? கருத்துக்கள் குளத்து நீரில் அலைபோல பரவுகின்றன.மையத்திலிருந்து விரிந்து விரிந்து செல்கின்றன.மையத்தின் அழுத்தமே தீர்மானிக்கும் சக்தி. தமிழின் முதல் பெண்ணிய சிற்றிதழான ‘ தமிழ் மகள் ‘ [யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ]மங்களத்தம்மாளால் சென்னையில் வெளியிடப்பட்டபோது அதன் எண்ணிக்கை மிக குறுகியது . ஆயுள் அதைவிட . அங்கிருந்து தொடங்கியதே இன்றை பெண்ணியம் முழுக்க.

*****

இறுதியாக செவ்வியல் குறித்த உங்கள் கருத்து.செவ்வியல் ஒரு கலாசாரத்துக்கு தேவை இல்லை என்கிறீர்களா ? கலாச்சாரம் செவ்வியலை உருவாக்குவது வீண்வேலை என்கிறீர்களா ? இது எல்லா கலைக்கும் பொருந்துமா ?இசை ?ஓவியம் ? தமிழனுக்கு தேவை இல்லையா , இல்லை உலகுக்கே தேவை இல்லையா ? சுந்தர ராமசாமி தேவை இல்லை என்றால் செம்மங்குடியும் தேவை இல்லை என்பீர்களா ?

செவ்வியல் மரபு ஒரு கலாச்சாரத்தின் இறந்தகாலப் பதிவு.அதன் மீதுதொடர்ச்சியான ஆய்வுரீதியான பார்வை இல்லாமல் எந்த கலாச்சாரமும் இருக்க இயலாது. ஆங்கிலமரபில் ஷேக்ஸ்பியர் இல்லாத நிலை உருவாகுமா ?சாக்ரட்டிஸ் இல்லாமல் சமகால சிந்தனை எதுவுமே சாத்தியமாகியிருக்குமா ?

செவ்வியலாக்கம் என்பது ஒரு கலாச்சாரம் தன் கலைகளை ,இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகவும் சாராம்சமாகவும் தொகுத்துக் கொள்வதன் விளைவு. எந்த கலாச்சாரத்திலும் இடைவிடாது செவ்வியலாக்கம் நடைபெற்ற படியேதான் இருக்கும். செவ்வியலாக்கம் நீங்கள் எண்ணுவதுபோல செவ்விலக்கிய உலகில் நடந்து முடிவதல்ல. அது தொடங்குவதே

சமகால அன்றாட வாழ்வில் இருந்துதான். அது கானாப்பாடலை சங்க இலக்கியமரபின் தொடர்ச்சியில் இணைக்க முயல்கிறது. சங்க இலக்கியத்தை கானாப்பாடல் அருகே கொண்டுவருகிறது.இரண்டிலும் நுட்பமான மாறுதலை நிகழ்த்தி விடுகிறது.இன்று நீங்கள் காணும் எல்லா கலை , இலக்கிய வடிவங்களும் அப்படி உருவானவையேயாகும்.

விஷ்ணுபுரம் நாவலை நீங்கள் படித்துபார்க்கலாம் . அது ஒரு புதுச் செவ்வியல் [neo classic] படைப்பு என சொல்வது எனக்கு உடன்பாடே . அவ்வடிவம் அதன் அறிதல் முயற்சியின் தேவையினால் உருவானது . நம் கலாச்சாரத்தின் இயக்கத்தை ஒட்டுமொத்தமாக வரலாற்றை ,கலைகளை ,ஐதீகங்களை கணக்கில் கொண்டு அறிய அது முய்ல்கிறது. தொகுத்தறிய முயலும் எந்த வடிவமும் இயல்பாகவே செவ்வியல் இயல்பை நோக்கி நகரும்.

விஷ்ணுபுரத்தின் அறிதலே அதன் கலாச்சார பங்களிப்பு .கலாச்சாரம் என்பது அத்தகைய அறிதல்களின் மூலம் கணம்தோறும் புதிதாக உருவாக்கப் பட்டபடியே உள்ளது. ஒவ்வொரு இலக்கிய ஆக்கத்துக்கும் அதில் அதற்கே உரிய பங்களிப்பு உள்ளது.குடும்பத்து நகைகளை தலைமுறை தோறும் உருக்கி புதிதாக செய்த படியே இருப்பதுபோல.

******

மக்கள் எழுத்தாளர்களின் முன்னோடியான கார்க்கியின் ஒரு குறிப்பு உள்ளது .[லெனின் நினைவுகள்.ராடுகா பதிப்பகம்] அவரிடம் லெனின் சொல்கிறார் .இனி தடிமனான சிக்கலான இலக்கியப்படைப்புகளை எழுதவேண்டியதை ஒத்திப்போடலாம் என்று.தொழிலாளர்களுக்கு எளிதில் புரியும் எளிய சிறிய படைப்புகளை எழுதலாமே என்று.அதை அக்கணமே கார்க்கி நிராகரித்துவிடுகிறார் .புரட்சி போலவே முக்கியமான ஒன்றுதான் இலக்கிய ஆக்கமும் என்கிறார்.வாழ்க்கையையும் வரலற்றையும் முழுமையாக அறிய விரிவாகவே எழுதவேண்டும் என்கிறார் . சிக்கலான செவ்வியல்படைப்பான அர்தமானவ்கள் அவர் பிறகு எழுதியதுதான்.

வரலாற்றையும் வாழ்க்கையையும் தான் உட்பட உள்ள தத்துவ ஆசான்கள் முழுக்க விளக்கிவிட்ட பிறகு கார்க்கியின்பணி அவ்விளக்கத்தை பரப்புவது மட்டுமேஎன்றுதான் இங்கு லெனின் உத்தேசிக்கிறார் .சுயமான தேடல் ஒன்றை தன் தளத்தில் நடத்தவோ , மேலும் வளர்த்தெடுக்கவோ கார்க்கியால் முடியாது ,தேவையுமில்லை என்று மதிப்பிட்டார்.

மறுகையில் துப்பாக்கியுடன் லெனின் சொன்னதை சொன்னார் ஸ்டாலின்.கார்க்கி விஷம் உண்ணவேண்டிவந்தது. காலம்தோறும் அந்த குரல் எழுத்தாளனிடம் கட்டளையிடுகிறது. நேற்று மதவாதியின் குரல், இன்று அரசியல்வாதியின் குரல்.

******

சமரசம் செய்யலாம்.சமரசம் மட்டுமே செய்யலாமா ?

ஒரு சிற்றிதழ் நடத்த ,ஒரு நூலை பிரசுரம் செய்ய ,குறைந்த பட்ச தேவைகளுடன் உயிர்வாழ செய்யும் சமரசங்கள் என் வாழ்வில் உண்டு. ஆனால் அடிப்படை நோக்கத்திலேயே சமரசம் என்றால் பின்பு எதற்குமே அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.

=======

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்