அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

ரசிகவ் ஞானியார்


அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்

அன்புள்ள சிம்புதேவனுக்கு ,

தங்களின் அறை எண் 305 ல் கடவுள் படம் நகைச்சுவையோடும் அறிவுரைகளோடும் இருந்ததில் மகிழ்ச்சி. உங்களின் தனித்திறமையை முழுமையாக பாராட்ட முடியாத நிலையில் இருக்க காரணம் எல்லாரும் விழுகின்ற குட்டையில் நீங்களும் விழுந்து சகதிகளை அப்பிக்கொண்டதுதான்.

பொருளாதார ஏற்ற இறக்கமா , இல்லை கலாச்சார சீரழிவா, இல்லை பக்கத்து தெரு குழாயில் தண்ணீர் வரவில்லையா? உடனே சாப்ட்வேர் இஞ்சினியர்கள்தான் காரணம் என்று கொடிபிடிக்கத் தொடங்கிவிடுகின்றார்கள்.

அது என்னப்பா ? உங்கள் வீட்டு கழிவறை சுத்தமில்லையென்றால் கூட சாப்ட்வேர் இஞ்சினியர்களை குறை சொல்ல ஆரம்பித்துவிடுகின்றீர்கள்?

அந்தப்படத்தில் ஒரு காட்சி சாப்ட்வேர் இஞ்சினியர்களை பெரிதும் வேதனைப்படுத்தியிருக்கின்றது. இரண்டு படம் எடுத்துள்ளீர்கள் என்கிற பெருமை அந்த ஒரு காட்சியில் தரைமட்டமாக்கிவிட்டீர்கள்.

“ஜாவா என்கிற கணிப்பொறி மொழி அறிந்த ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர், குறைந்த காலகட்டத்திற்குள் பைக், கார், ஹெலிகாப்டர் வாங்கி வாழ்க்கையில் முன்னேறுவதான காட்டியுள்ளீர்கள்.

இப்பொழுது நடைபெறுகின்ற நிகழ்வுகளின் தாக்கங்களை அதிகபட்டசமாக காட்டியுள்ளீர்கள்தான் எனினும் அப்படிபட்டவர்களை பழிவாங்குவதற்காக, கடவுளாக இருப்பவர்கள் அவர்களின் கைகளை சூம்பிப்போவ வைப்பதாக காட்டியுள்ள உங்களின் மட்டமான ரசனையை என்னவென்று சொல்வது? ”

ஆடைகள் குறைய குறைய கொட்டிக் கொடுக்கும், பெண்களின் மறைக்கப்படவேண்டிய உறுப்புகளின் மீது, பம்பரமும், ஆம்லெட்டும், போட்டு சாப்பிடுகின்ற சினிமாத்துறையினரை விடவா சாப்ட்வேர் இஞ்சினியர்கள் அதிகமாக சம்பாதிக்கின்றார்கள்?

சரி அப்படிப்பட்ட சம்பாத்தியத்தின் பிண்ணணியை ஆராய்ந்து பார்த்ததுண்டா?

அவர்களை வெட்டியாக உட்கார வைத்தா சம்பளம் கொடுக்கின்றார்கள். அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை,விபச்சாரம் செய்து பிழைக்கவில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவில்லை, லஞ்சம் வாங்கவில்லை. திறமைக்கு கிடைக்கின்ற ஊதியத்தில் ஒழுங்காக வருமானவரி கட்டுகிறவர்கள். அவர்களைப் பற்றியா இப்படி மட்டகரமான கற்பனையில் காட்சி எடுத்துள்ளீர்கள். அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

மற்ற துறைகளைப் போல அல்ல இது. இந்தப் பணியில் இருந்து எப்பொழுது தூக்கிவீசப்படுவார்கள் என்கிற உத்திரவாதம் இல்லை.

ஒரு ப்ராஜக்ட் ஆரம்பித்துவிட்டால் அதற்கு டெட் லைன்(Dead Line), உயிரோடு இருக்கும் லைன் என்று குறிப்பிட்ட காலகட்டத்தை நிர்ணயித்து அதற்குள் முடித்துவிடவேண்டிய கட்டாயத்திற்குள் பரபரப்பான சூழ்நிலையில் பணிபுரிபவர்கள்.

சிலநேரங்களில் இரவு பகல் பார்க்காமல் விழித்திருந்து அரைத்தூக்கம் தூங்கி, இப்படி உடல் வருத்தி பார்க்கின்ற வேலைக்காகத்தான் அவர்களுக்கு சம்பளமேயன்றி, உங்கள் துறையினர் பலரைப் போல பெண்களை அறைகுறையாக காட்டியோ, பாலுணர்வுகளைத்தூண்டியோ சம்பாதிக்கவில்லை

உங்கள் துறையில் சம்பாதிப்பவர்களை மிஞ்சிவிடக்கூடாதே என்கிற வயிற்றெரிச்சலிலா ?அப்படிப்பட்ட காட்சியை நீங்கள் எடுத்துள்ளீர்கள்? யதார்த்தங்களை படமாக்குவதற்கு முன் அவர்கள் வாழுகின்ற சூழலுக்குள் சென்று அவர்களின் உண்மையான நிலையினை உணர்ந்து கொள்ளுங்கள்.

சாப்ட்வேர் இஞ்சினியர்கள் கை நிறைய சம்பாதிக்கின்றார்கள் என்கிற கூப்பாடுகள் வெளிப்படுகின்றதே தவிர அவர்கள் அந்தச் சூழலில் படுகின்ற அவதிகளையும் படம் எடுத்தீர்கள் என்றால் பாராட்டலாம்.

அவர்களின் கைகள் சூம்பிப் போகுமாறு நீங்கள் காட்டியுள்ள காட்சியில் உங்கள் கற்பனை ரொம்பவே சூம்பிப்போயிருப்பது தெரிகின்றது சிம்புதேவா!

ஒரே ஒரு வேண்டுகோள், அறை எண் 305ல் கடவுள் படத்தின் தலைப்பை அறை எண் 305ல் வயிற்றெரிச்சல் என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். வருத்தங்களோடு ஒரு வாழ்த்துக்கள்

இப்படிக்கு வேதனையுடன்,

ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர்

– ரசிகவ் ஞானியார்

Series Navigation

ரசிகவ் ஞானியார்

ரசிகவ் ஞானியார்