இலை போட்டாச்சு கடலைப் பருப்பு போளி

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

பாரதி மகேந்திரன்


கடலைப் பருப்பு போளி

தேவை

கடலைப் பருப்பு – 500 கிராம்
வெல்லம் – 500 கிராம்
ஏலப்பொடி – ஒன்றரை தே.க.
தேங்காய்த் துருவல் – 1 பெரிய தேங்காயின் ஒரு மூடி
மைதா மாவு – 400 கிராம்
மஞ்சள் பொடி – 1 தே.க.
நல்லெண்ணெய் – 300 கிராம்
நெய் – 3 மே. க.
அரிசி மாவு – 250 கிராம்

முதலில், மைதாவுடன் மஞ்சள்பொடியைச் சேர்த்துக் கொஞ்சமாய்த் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை உருண்டையாக உருட்ட முடிகிற பதத்துக்கு அதைப் பிசையவேண்டும். பின்னர் அந்த உருண்டையின் மேல் நல்லெண்ணெய்யை ஊற்றி முழு உருண்டையின் மேலும் தடவி ஒரு வாழை இலையால் மூடி வைக்கவும். (அல்லது, மூடி உள்ள பாத்திரத்தில்)

அதன் பின், கடலைப் பருப்பைக் களைந்து சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் பருப்பைக் குக்கரில் இரண்டு கூவல்கள் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
வெந்த இந்தப் பருப்பைத் தண்ணீர் போக வடிகட்டிய பிறகு, ஒரு வாணலியில் கொட்டி நன்றாக ஒரு கரண்டியால் மசிக்கவும். பிறகு இத்துடன் தேங்காய்த் துருவல், தூள் செய்த வெல்லம், ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து அடுப்பில் ஏற்றி நன்றாகக் கிளறவும். வெல்லம் கரையத் தொடங்கும். அதன் நீர் வற்றிக் குறைந்து மொத்தையாக ஆனதும் இறக்கவும். பிறகு இதை மின் அம்மியில் போட்டு மசிய அரைத்து வழித்து எடுக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றிக் காய விடவும்.

பின்னர், மசித்து வைத்துள்ள கடலைப் பருப்புப் பூரணத்தில் சிறிய எலுமிச்சங்காய் அளவுக்கான உருண்டைகளைத் தயார் செய்து கொள்ளவும். பிறகு மைதாமாவில் சிறிய உருண்டை வரும் அளவுக்கு அதைக் கிள்ளி எடுத்து, அரிசி மாவில் அதைப் புரட்டி இடது உள்ளங்கையில் வைத்து, எண்ணெய் சிறிது வலக்கையால் எடுத்து அதன் மீது தடவி அழுத்திப் பரப்பி அதனுள் கடலைப் பருப்புப் பூரணத்தை வைத்து நாற்புறங்களிலும் மூடி ஒரு பெரிய உருண்டையாக்கிக் கொள்ளவும். பிறகு, இவ் வுருண்டையை நெய் தடவிய வாழை இலையில் வைத்துக் கையால் தட்டிப் பரப்பி அப்பளமாகச் செய்து, காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில் இலை மேற்புறம் இருக்குமாறு அதைக் கவிழ்த்துப் போட்டு இலையை அப்புறப்படுத்தவும். கொஞ்சமாய் நெய்யும் எண்ணெய்யும் கலந்த கலவையை ஊற்றி வேகவிடவும். ஒரு புறம் வெந்ததும் தோசைத் திருப்பியால் திருப்பி மறு புறமும் வேகவிட்டு எடுக்கவும்.

போளியின் மீது நெய் ஊற்றிக்கொண்டு சாப்பிடலாம்.

பூரணத்தின் உருண்டையை விடவும் மைதாமாவு உருண்டை சிறியதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மைதாவின் வாசம் அதிகமாகி, போளியின் சுவை கெட்டுவிடும்.


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்