குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

டாக்டர்.B.செல்வராஜ் Ph.D.,


குழந்தைகள் சில குணங்களை பிறப்பிலேயே மரபுத்தன்மைகளின் காரணமாக பெற்றிருக்கும். வளர வளர அக்குணங்கள் ஆளுமைப் பண்புகளாக உருவெடுக்கும். பிறப்பில் அமைந்த குணங்களை தவிர்த்து பிற நடத்தைகள் அனைத்தையும் குழந்தைகள் வளர வளர பிறைப் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். பெற்றோர், குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றோர்களின் நடத்தைகளைப் பார்த்து குழந்தைகள் தன் நடத்தைகளை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

பார்த்துக் கற்றல் கோட்பாடு தற்காஅ உளவியலில் மிக முக்கியமான ஒன்றாகும். நம் நட்த்தைகள் அனைத்தும் சமூக சூழலில் பிறரோடு ஏற்படும் தொடர்பின் மூலம் உருவானவை என்பதே இக்கோட்பாட்டின் மையக் கருத்தாகும். குழந்தை அப்பாவைப் போல நடப்பது, அம்மாவைப் போல சிரிப்பது, தாத்தாவைப் போல உட்காருவது, பாட்டியைப் போல் தூங்குவது ஆகியவை இக்கோட்பாடு உண்மை என்பதற்கு சில உதாரணங்கள். பிறரின் நடத்தையை பின்பற்றுவது குழந்தையின் வாழ்க்கையில் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பின் துவங்குகிறது. குழந்தை அம்மா சிரிப்பதைப் பார்த்து அதைப் போன்றே திருப்பி சிரிப்பது தான் முதல் பார்த்துக் கற்றுக்கொள்ளும் நடத்தை. ஏழு அல்லது எட்டு வயதிற்குள் அநேகமாக எல்லா நடத்தைகளையும் குழந்தை பிறரைப் பார்த்து கற்றுக் கொண்டு விடுகிறது. அதற்குப் பின்னர் குழந்தையின் எல்லா புதிய நடத்தைகளுக்கும் ஏழு அல்லது எட்டு வயதிற்குள் கற்றுக் கொண்ட நடத்தைகளே அடிப்படையாக அமையும். எனவே ஏழு அல்லது எட்டு வயது வரை குழந்தைகள் முன் மிகவும் எச்சரிக்கயாக நடந்து கொள்ள வேண்டும்.

பெரியவர்களைப் போலன்றி குழந்தைகள் கூர்ந்து கவனிக்கும் திறமை பெற்றவர்கள். எனவே அவர்கள் கவனிக்கவா போகிறார்கள் என்று அஜாக்கிரதையாக நடந்து கொள்வது கடும் பின் விளைவுகளை உண்டாக்கும் பேசும் போது நாம் பயன்படுத்தும் சொற்கள், பிறரிடம் பேசும் முறை, பிறரிடம் பேசும் விதம், உடையணியும் முறை, வீட்டிலும் வெளியிலும் சாப்பிடும் முறை போன்றவற்றை மிகுந்த கவனமுடன் தீர்மானித்து பெற்றோர்கள் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்விசயத்தில் அநேக பெற்றோர்கள் தவறிழைக்கின்றார்கள். உதாரணமாக

• இரட்டை வேடம் போடுதல்
• குழந்தைகள் முன் பிறரிடம் போய் பேசுதல்
• கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
• குழந்தைகளுக்கு தெரியும் வகையில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுதல்
• குழந்தைகள் முன்னிலையில் உறவினர் மற்றும் பிறறைப் பற்றி தவறாக விவாதித்தல்
• குழந்தைகள் முன்னிலையில் சுயநலமுடன் நடந்து கொள்ளல்
• குழந்தைகள் முன் சிகரெட் குடித்தல் மற்றும் பாலியல் சரசங்களில் ஈடுபடுதல்
• மனைவி-கணவன் தகறாறு செய்து கொள்ளல்
• மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் மரியாதை இன்றி நடத்துதல்

போன்றவைகள் குழந்தைகள் மனதில் நன்கு பதிந்து அவர்களும் அவ்வாறே நடந்து கொள்கிறார்கள்

மேலே குறிப்பிட்டவைகளை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆளுமை வெளிப்பாடு. பெற்றோர் எத்தகைய ஆளுமைகளை குழந்தைகள் முன் வெளிப்படுத்துகிறார்களோ அவ்வாறான ஆளுமையே குழந்தைகளுக்கும் அமையும். எடுத்துக்காட்டாக மிகவும் சிக்கலான சூழ்நிலை ஒன்றை சமாளிக்க இயலாமல் ஒரு தந்தை மனமுடைந்து போகிறார் என்றால் அவருடைய குழந்தையும் பிற்காலத்தில் அதைப் போன்றே கடும் சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல் வருந்தும். எனவே எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாகவும், ஏற்று நடக்கும் மனப்பாங்கு உடையவர்களாகவும் நம்மை முதலில் மாற்றிக் கொண்டு பின் அவ்வாளுமையை குழந்தைகள் முன் வெளிப்படுத்துவது நன்று.

நாம் மட்டுமே முயன்று குழந்தைகளின் நடத்தையை முழுமையாக மாற்றியமைக்க இயலாது. எனவே நம்மைத் தவிர வேறு பலர் நல்ல பழக்கங்களை கொண்டவராக இருப்பதை நாம் அறிய நேரிட்டால் நம் குழந்தைகளுக்கும் அதைக் காண்பித்து “நீயும் அதைப் போன்று நடந்து கொள்வது விரும்பத்தக்கதாகும்” என்று கூறுவது நல்ல பயனை அளிக்கும். நாம் என்னதான் முயன்றாலும் நம்மால் கைவிடமுடியாத கெட்ட பழக்கங்கள் சில நம்மிடம் இருக்கலாம். அதை நம் குழந்தைகள் பின்பற்றும்போது “என்னால் கைவிட முடியாத இந்நடத்தையால் நான் துன்பமடைந்து கொண்டு இருக்கிறேன்.” நீ அதை பின்பற்ற வேண்டாம் என் நல்ல நடத்தைகளை மட்டும் நீ பின்பற்றினால் நான் மகிழ்ச்சி கொள்வேன் என்று வெளிப்படையாக குழந்தைகளிடம் கூறிவிட வேண்டும்.

ஒரு தாய் தன் அறிவுரையையும் கேட்காமல் அதிகமாக சர்க்கரை உண்ணும் தன் மகனை பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அழைத்துச் சென்று அதிக சர்க்கரை உண்பதை கைவிடுமாறு தன் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டினார். அதைக் கேட்ட இராமகிருஷ்ணர் ஒரு வாரம் கழித்து குழந்தையை அழைத்து வருமாறு அப்பெண்மணியைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒரு வாரம் கழித்து அழைத்துச் செல்லப்பட்ட அப்பையனிடம் “சர்க்கரை அதிகமாக உண்பது உடலுக்கு கேடு, எனவே அதை விட்டுவிடு என்று இராமகிருஷ்ணர் அறிவுரை கூறினார். அதைக் கேட்ட அப்பையனின் தாய் இந்த அறிவுரையை சென்ற வாரமே நீங்கள் என் குழந்தைக்கு வழங்கியிருக்கலாமே சுவாமி? என்று பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரிடம் வினவினார். இராமகிருஷ்ணர் சென்ற வாரம் வரை நானும் அதிக சர்க்கரை உண்டு வந்தேன், நான் தவறு செய்து கொண்டு குழந்தைக்கு அறிவுரை கூறக் கூடாது. எனவேதான் என்னை முதலில் திருத்திக் கொண்டு என்னிடம் வந்தவரை திருந்துமாறு இப்போது கேட்டுக் கொள்கிறேன் என்று பதிலளித்தார். குழந்தைகளுக்கு நல்ல முன் மாதிரியாக இருப்பது என்பது இதைப் போன்று நாமும் உண்மையான நல்ல பழக்கங்களை கொண்டிருப்பது அல்லது உண்மையாகவே நம் தவறுகளை திருத்திக் கொள்வது என்பதுதான். மாறாக குழந்தைகளுக்குத் தெரியாமல் நீங்கள் தவறு செய்தால் அதை உணர்ந்து கொண்ட குழந்தை உங்களுக்குத் தெரியாமல் அதே தவறை செய்யும்.

டாக்டர்.B.செல்வராஜ் Ph.D.,
முதுநிலை உளவியல் விரிவுரையாளர்,
அரசு கலைக்கல்லூரி,
கோவை – 641 018

Series Navigation