கண்களைச் செப்பனிட லேஸர் குளிர் ஒளிக்கதிர் அறுவை முறைகள் -4 (Eye Surgery with Cool Laser Beams)

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


கண்ணில் தெரியுதொரு தோற்றம்! அதில்

கண்ணன் அழகு முழுதில்லை! ..

சுட்டும் விழிச்சுடர்தான், கண்ணம்மா

சூரிய சந்திரரோ ? ..

கண்ணை இனிது என்றுரைப்பார்,

கண்ணுக்குக் கண்ணாகி

விண்ணை அளக்கும் ஒளி மேம்படுமோ ? ..

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்

கைகொட்டிச் சிரியாரோ ?

மகாகவி பாரதியார்

‘ஒரு பில்லியன் டாலர் பணமுடிப்பு, தெளிவான பூரணக் கண்ணொளி அளிப்பு இவை இரண்டில் நான் எதனைத் தேர்ந்தெடுப்பேன் என்று நீ நினைக்கிறாய் ? ‘

‘மகத்தானதோர் கண்டுபிடிப்பைச் செய்யும் ஓர் உன்னத வாய்ப்பு, ஒழுக்க முறை இயக்கங்களின் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. ‘ [லாஸிக் (LASIK) என்னும் லேஸர் கண்ணறுவை முறையைக் கண்டுபிடித்துப் பாராட்டப் பட்ட சமயம்]

டாக்டர். ரங்கசாமி ஸ்ரீனிவாசன் [Inventor of Laser Eye Surgery Device (Times News Network, Nov. 2003)]

முன்னுரை: இது ஒரு மருத்துவக் கட்டுரை இல்லை. குளிர்ச்சியான லேஸர் ஒளிக்கதிரைப் பயன்படுத்தி அறுவை முறையில் பழுதுபட்ட கண்ணொளி செம்மைப்பாடு செய்வதை எடுத்துக் காட்டுகிறது இந்த கட்டுரை. நானொரு மருத்துவத் துறையைச் சேர்ந்தவன் அல்லன். பல துறைகளில் பயன்படும் லேஸர் ஒளிக்கதிர் மருத்துவப் பணிக்கும், குறிப்பாக கண்ணொளி மீட்சிக்கு அறுவை மூலம் உதவுவதை ஆழமாய் விளக்காமல் மேலாக மட்டுமே எடுத்துக் கூறி யிருக்கிறேன். கண்ணொளிப் பிரச்சனைகளுக்கு லேஸர் அறுவை முறை ஒன்றுதான் உகந்தது என்று சுட்டிக் காட்டவோ அல்லது கண்ணோய் உற்றோருக்கு ஆலோசனை கூறுவதோ என் கட்டுரையின் நோக்கமில்லை. கண்ணொளிப் பிரச்சனை உள்ளவர் தகுந்த கண்ணொளி மருத்துவ நிபுணரை அணுகி, தமது பழுதுக்கேற்ற சிகிட்சை முறைகளை அறிந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒளித்திரிபு லேஸர் கண்ணறுவைச் [Refractive Eye Surgery] சிகிட்சையில் PRK அறுவை [Photo-Refractive Keratechtomy], LASIK அறுவை [Laser Assisted In-situ Keratomileusis] எனப்படும் இரண்டு முக்கிய முறைகள் உள்ளன. 1988 இல் முதல் PRK ஒளித்திரிபு லேஸர் அறுவைச் சிகிட்சை ஜெர்மனியில் செய்யப் பட்டதாக அறியப்படுகிறது. அதைப் பின்பற்றி 1994 ஆண்டு இறுதி வரை சுமார் ஒரு மில்லியன் லேஸர் கண்ணறுவைச் சிகிட்சைகள் 40 ஐரோப்பிய, கிழக்காசிய நாடுகளில் நடந்துள்ளன. முதல் பயிற்சி LASIK அறுவை 1991 ஆண்டு அமெரிக்காவில் வெற்றிகரமாகச் செய்து காட்டப் பட்டது. 1996 இல் அமெரிக்காவின் கூட்டாட்சி மருத்துவ ஆணையகம் FDA [US Federal Drug Administration] புதிய முறையான LASIK அறுவை புரிய அங்கீகரம் அளித்தது. 2003 ஆண்டுவரை அமெரிக்காவில் லேஸர் ஒளிக்கதிரைப் பயன்படுத்தி சுமார் 5 மில்லியன் தடவை லாஸிக் (LASIK) கண்ணறுவைச் சிகிட்சை செய்யப்பட்டுள்ளதாக அறியப் படுகிறது. அந்த வெப்பமற்ற லேஸர் அறுவை முறையை [Heatless Laser Surgery], அமெரிக்க IBM ஆய்வகத்தில் பணி செய்யும் போது கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி டாக்டர் ரங்கசுவாமி ஸ்ரீனிவாசன். மகத்தான பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த கருவி படைத்தவருக்கு அப்போது IBM அளித்த நிதி வெகுமதி 10,000 டாலர் மட்டுமே.

லேஸர் கண்ணறுவைச் சிகிட்சையின் வரலாறு

கடந்த நூறாண்டுகளாக ‘ஒளித்திரிபு அறுவை முறைச் ‘ [Refractive Surgery] சிகிட்சை மீது கண் மருத்துவ நிபுணரிடையே மிக்க ஆர்வமும், கவர்ச்சியும் இருந்து வந்திருக்கிறது. 1898 ஆம் ஆண்டில் டச் கண்மருத்துவப் பேராசிரியர் லான்ஸ் [Lans, Professor of Opththalmology] என்பவர் கண் லென்ஸ் முன்பாக இருக்கும் கார்னியா ஆடியை (Cornea) ‘ஆரச்சிதைவு ‘ செய்து மட்டமாக்கி [Radial Keratotomy] கிட்டப் பார்வையைச் [Myopia] செப்பனிடும் அடிப்படை முறைகளை நிலைநாட்டினார். அதே போன்று ஜப்பானில் சாட்டோ [Sato] என்பவர் சில முன்னோடிக் கண்பழுதுப் பணிகளை கார்னியா ஆடி அறுவையில் செய்திருந்தார். அடுத்து 1970 இல் ரஷ்ய மருத்துவ நிபுணர் ஃபியோடோராவ் [Dr. Fyodorov] கண்ணோயில் [Eye Trauma] ஆரச்சிதைவு மூலம் ஒளித்திரிபு அறுவைச் சிகிட்சையை நடைமுறை வழக்கத்திற்குக் கொண்டுவந்தார். அமெரிக்க கண்மருத்துவ நிபுணர்கள் 1978 இல் ரஷ்யர் ஃபியோடோராவின் கண்ணறுவை முறைகளில் கவரப்பட்டு அவற்றை அவரிடமிருந்து தெரிந்து கொண்டார்கள்.

சோவியத் ரஷ்யாவில் ஃபியோடோராவைக் கண்டு பேசி வந்த அமெரிக்க மருத்துவ நிபுணர் லியோ போரஸ் [Dr. Leo Bores] ரஷ்ய நுணுக்கத்தை அமெரிக்க நகரங்களுக்குக் கொண்டு வந்தார். அவ்விதம் அறிமுகமான பிறகு, அமெரிக்காவில் 2 மில்லியன் கண்ணோயாளிகள் ஆரச்சிதைவு அறுவைச் சிகிட்சையில் கண்ணொளியைத் திருப்பி அடைந்துள்ளனர். 1970 ஆண்டுகளில் செய்த ஆரச்சிதைவு அறுவை முறைகளில் சில குறைபாடுகளைத் தவிர்க்க முடியாததால், மருத்துவ வல்லுநர்கள் வேறு விதமான புதிய முறையில் ஒளித்திரிபு அறுவைச் சிகிட்சைகளைச் செய்ய முற்பட்டார்கள். அதே சமயத்தில்தான் IBM ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்து வந்த பெளதிக விஞ்ஞானி டாக்டர். ஆர். ஸ்ரீனிவாசன் உயிரினத் தசையில் [Biological Tissue] சிற்பப்பணி புரியும் தான் கண்டுபிடித்த ‘எக்ஸைமர் லேஸர் ‘ [Excimer Laser] அறுவைக்குள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் கண்டறிந்தார்.

ஸ்ரீனிவாசன் எக்ஸைமர் கண்ணறுவை முறை கண்டுபிடிப்பு

IBM ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்து வந்த டாக்டர் ஆர் ஸ்ரீனிவாசன் படைத்த எக்ஸைமர் லேஸர் ஒளிக்கருவியை, கண்மருத்துவ டாக்டரான ஸ்டிவன் டிரோகெல் [Dr. Steven Trokel] முதன்முதலில் கார்னியா ஆடியை [Cornea] அறுக்க வசதி செய்து செப்பனிட்டார். அந்த லேஸர் எந்திரம் வெப்பமில்லாத குளிர்ந்த லேஸர் ஒளிக்கற்றையை உண்டாக்கிக் கார்னியா தசையின் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் கார்பன்-கார்பன் பிணைப்பை [Carbon to Carbon Bond] உடைத்து, தசை நீக்கம் [Tissue Ablation] செய்து மட்டப் படுத்தியது. 1987 ஆண்டு முதல் எக்ஸைமர் லேஸர் அறுவை முறை இரண்டு மில்லியன் தடவைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டு, மிகச் சிறந்த, பாதுகாப்பான ஓர் மருத்துவச் சாதனமாகப் பெயர் பெற்றிருக்கிறது! புது நூற்றாண்டுப் [2000] பிறப்பின் முதல் வருடம் மட்டும் அம்முறை அமெரிக்காவில் சுமார் ஒரு மில்லியன் தடவைகளுக்கு மேற்பட்டு செய்யப் பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.

லேஸர் கண்ணறுவைச் சிகிட்சைச் செய்ய சில நிமிடங்களே [1-5 நிமிடங்கள்] எடுக்கின்றன. மீண்டும் புழங்க ஒன்றிலிருந்து ஐந்து நாட்கள் ஆகின்றன. அறுவைக்குப் பிறகு குணமடைந்தோர், கூடுமான வரை கண்ணாடி லென்ஸ்கள் அல்லது கண்ணொட்டு லென்ஸ்கள் [Contact Lenses] அணிய வேண்டிய தில்லை. மேலும் அடிக்கடித் தேவைப்படும் லென்ஸ் கழுவிகள், லென்ஸ்கள், அவற்றுக்குச் சட்டங்கள், கண் சோதிப்புகள் வேண்டப்படா.

இந்தியராகிய ஸ்ரீனிவாசன் 1929 ஆம் ஆண்டில் பிறந்தவர். 1949-1950 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு பெளதிகப் பட்டங்கள் [B.Sc. M.Sc.] பெற்று Ph.D. மேற்படிப்புக்கு அமெரிக்கா வந்து தென் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் [University of Southern California]. சேர்ந்தார். டாக்டர் பட்டம் [Ph.D. in Physical Chemistry] பெற்ற பிறகு காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்திலும் [California Institute of Technology], ராச்செஸ்டர் பல்கலைக் கழகத்திலும் [University of Rochester] டாக்டர் பட்டப் பிற்பணி [Post-doctoral Work] புரிந்தார். ஸ்ரீனிவாசன் IBM வாட்ஸன் ஆய்வுக் கூடத்தில் [IBM ‘s T.J. Watson Research Center] 30 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது பெயரில் 21 காப்புரிமைப் பட்டயங்கள் [U.S. Patents] அமெரிக்காவில் உள்ளன.

IBM ஆய்வகத்தில் IBM மின்கணனி மின்னியல் இணைப்புச் சுற்றில் [IBM Computer Circuits] பணிபுரிந்த போது, ஸ்ரீனிவாசனுக்கு எதிர்பாராத விதமாக புறவூதா லேஸர் சாதனம் [Ultraviolet Laser] ஒன்று கிடைத்தது. பண்டங்களில் படும் புறவூதா லேஸர் என்ன பாதகங்களை விளைவிக்கிறது என்று ஸ்ரீனிவாசன் கண்டறிந்து வந்தார். எருது போன்ற கால்நடை விலங்கினத்தின் தசைகளில் எப்படிக் குளிர்ந்த லேஸர் ஒளி ஊசிகளைச் செலுத்திச் சிதைவுகள் இல்லாமல் சீர்ப்படுத்துவது [Cool Laser Beam Injection] என்று செய்து காட்டினார். அதற்கு முன்னால் அறுவை முறைகளுக்குப் பயன்படுத்திய லேஸர் பொறிநுணுக்கங்களில் மிகுதியான வெப்பம் உண்டாகி நுனிப் பகுதிகள் வெட்டப் பட்டன! ஆனால் அவர் கண்டுபிடித்த புறவூதா எக்ஸைமர் லேஸர் குளிர் ஒளிக்கதிர் மனித அல்லது மாட்டுத் தசைகளில் எவ்விதத் தடங்களையோ அல்லது சிதைவுகளையோ உண்டாக்காது. முற்போக்கான அந்த லேஸர் நுணுக்கக் கருவி உயிரினத் தசைகளில் புரியும் சிற்ப வேலைப்பாடுகள் புதியதோர் மருத்துவத் தொழிற் கூடங்களை உலகெங்கும் உருவாக்கின!

1981 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசன் புறவூதா எக்ஸைமர் லேஸர் [Ultraviole Excimer Laser] கண்டுபிடித்து மகத்தான, நுட்பமான, குளிர் லேஸர் தையல் ஊசியைப் படைத்துச் சுத்தமான சிற்ப வேலகள் புரிந்து உலக விஞ்ஞான, மருத்துவ நிபுணர்களால் பாரட்டப் பட்டார். பொதுவாகப் பயன்படும் பசுமை லேஸர் [Green Laser] சூடேறி உயிரினத் தசைகளைச் சிதைத்ததோடு, கரித்துக் கரடு முரடாக அறுவையைச் செய்தது. தனது எக்ஸைமர் லேஸர் சாதனத்துக்கு ஸ்ரீனிவாசன் இட்ட பெயர்: APD [Phenomenon Ablative Photo-Decomposition (APD)]. 2002 இல் பதிவு பெற்ற காப்புரிமை பட்டய எண்: [Patent No: 4,784,135].

1983 இல் ஸ்ரீனிவாசன் கண்மருத்துவ டாக்டரான ஸ்டிவன் டிரோகெலுடன் [Dr. Steven Trokel] கூட்டாகச் சேர்ந்து, லேஸிக் (LASIK) அறுவை முறையைப் படைத்து, கண்ணறுவைச் சிகிட்சையை உலக மாந்தருக்கும், உயிரினத்துக்கும் எடுத்துக் காட்டி மகத்தான மருத்துவப் பணிபுரிந்தார். 2003 அக்டோபர் 27 ஆம் தேதி டாக்டர் ஸ்ரீனிவாசனுக்கு AIP பரிசை [Industrial Application for Physics] ஸான் ஜோஸ், [San Jose] காலிஃபோர்னியாவில் பெளதிகப் பேரவை அளித்தது. மற்றும் அவர் பெற்ற விருதுகள்: [American Chemical Society ‘s Creative Medal], [North East SEction ‘s Esselen Medal], [American Physical Society ‘s Biological Physics Prize], [Inventors Hall of Fame], [U.S. Patent Office Award for Innovation Technology]. 1999 ஆம் ஆண்டில் தேசீயப் பொறியியற் பேரவைக்குத் [National Academy of Engineering] தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லேஸிக் கண்ணறுவைக் [LASIK Eye Surgery] கருவிக்குப் பிதாவான இந்தியர், டாக்டர் ஆர். ஸ்ரீனிவாசன் ஒருவர்தான் ‘அமெரிக்க தேசீயப் பாராட்டு மாளிகையில் ‘ [US National Hall of Fame] தாமஸ் ஆல்வா எடிஸன், ஹென்றி ஃபோர்டு, வால்ட் டிஸ்னி, ரைட் சகோதர்கள் மத்தியிலே கம்பீரமாக நின்று நாமெல்லாம் அவரைப் போன்று ஆக்கவழி ஒன்றைப் பின்பற்றி முன்னேற முடியும் என்று வழிகாட்டி, ஒளிகாட்டி வருகிறார்.

(தொடரும்)

****

தகவல்:

1. History of Laser Eye Surgery [www.LaserSurgeryForEyes.com] [2002]

2. Crossing the Final Frontier By: Dr. S.K.Rao & Dr. Prema Padmanabhan ( ‘The Hindu ‘ Dec 16, 2001)

3. Dr.Rangaswamy Srinivasan, Medical Center, Dept of Ophthalmology, 2002 Inventors Hall of Fame

(Jan 10, 2005)

4. Seeing A New Path: Pioneer of Laser Surgery Honoured for pplication By: Martha J. Heil (2003)

5. They Also Deserve Laurels, Times News Network, The Times of India (Nov 23, 2003)

6. Dr. C. Kumar Patel Inventor of the Week: Archive [http://web.mit.edu/invent/iow/patel.html] (Jan 2000)

7. Schawlow & Townes Invent the Laser, The Invention of the Laser at Bell ‘s Lab [www.bell-labs.com/history/laser/] (1998)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 18, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா