சரித்திரப் பதிவுகள் – 4 : ஐ.என்.எஸ். தரங்கினி

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

வந்தியத்தேவன்


கப்பலென்றாலே அது கவிழ்ந்தால்தான் சரித்திரமாகுமா ? ‘மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்பா ‘ என்பது போன்று எதுவுமே இல்லையா என்று நெருங்கிய நண்பர் கேட்டதால் விளைந்த பதிவே ஐ.என்.எஸ். தரங்கினி.

தரங்கினி என்ற பெயர், ‘தரங் ‘ என்கின்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்தது. தரங் என்றால் ‘அலைகள் ‘ என்று பொருள்படும். தரங்கினி என்றால் ‘அலையோடி ‘ (Wave Rider) அல்லது ‘அலையாடி ‘ என்று அர்த்தம் கொள்ளலாம்.

இயற்கையை அணுக மனிதன் செய்தது மண்ணளவு

பாய்மரக் கப்பல் செய்தது கடலளவு

தனது சிறப்பின் சிறப்பை மனிதன் வெளிக் கொணரவில்லை

பாய்விரித்த கலம் போல்

— ஆலன் வில்லியர்ஸ் (Alan Villiers)

உலகம் தட்டையானது. விளிம்பினைக் கடந்தால் விழுந்து விடுவோமென்று பதினைந்தாம் நூற்றாண்டு வரை மக்கள் நம்பிக் கொண்டிருக்கையில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மெகல்லன் பாய்மரக் கப்பலில் உலகத்தை வலம் வந்து பூமி உருண்டையென்று நிரூபித்தார். பாய்மரக் கப்பல் பயணம் என்பது தற்கால, அதி நவீன வசதிகள் கொண்டதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு அணுசக்தி நீர்மூழ்கியிடம் சொன்னால் சப்தமின்றி பூமியை அதிவிரைவில் பலமுறை வலம் வந்திருக்கும்.

தரங்கினி போரிடும் யுத்தக் கப்பல் இல்லை. சொன்னால் நம்ப மாட்டார்கள், இது ஒரு பாய்மரக் கப்பல். மேலும் தரங்கினி ஒரு பயிற்சிக் கப்பல் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த திரு. காலின் (Colin Muddie) இக்கப்பலை சிரத்தையுடன் வடிவமைத்தார். கோவா கப்பல் கட்டுமிடத்தில் மிக நேர்த்தியுடன் தரங்கினி தன் வடிவம் பெற்றது. 11 நவம்பர் 1997 அன்று தரங்கினி இந்திய கடற்படையில் சேர்ந்தது. மாலுமிகளுக்கு அடிப்படைப் பயிற்சி அளிப்பதே இதன் தலையாய பணி. நவீன யுகத்தில் பாய்மரக் கப்பலா என்று பலர் புருவத்தை உயர்த்தலாம். 21 ‘ம் நூற்றாண்டில் பாய்மர பயிற்சிக் கப்பலின் பயனும், நோக்கமும் என்னவென்று பார்ப்போம்.

கப்பல் படையில் சேரும் கேடட்களுக்கு பாய்மரக் கப்பலில் பயிற்சி கொடுப்பது சாலச் சிறந்ததென்று ஜப்பானின் தலை சிறந்த அட்மிரலான யாமாமோடொ (Yamamoto) கருதினார். மேலும் அனைத்து ஜப்பானிய மாலுமிகளையும் பயிற்சி காலத்தில் பெரும் பகுதியை பாய்மரக் கப்பல்களிலேயே செலவிட வைத்தார். வளியை வழிக்குக் கொண்டு வரும் வித்தை சுலபமானதல்ல. அதற்கு நுட்பமான மதியூகமும், கடல் ஞானமும் வேண்டும். மேலும் கடற்பயணத்திற்கு முக்கியமாகத் தேவை வீரம், தோழமை மற்றும் சகிப்புத்தன்மை. இவ்வனைத்தும் பாய்மரக் கப்பலில் காணக் கிடைக்கும். உலகிலேயே மொத்தம் 27 அல்லது 30 நாடுகள்தான் பாய்மரக் கப்பல் பயிற்சி அளிக்கின்றது. ஆசியாவிலேயே மொத்தம் மூன்று பாய்மர பயிற்சிக் கப்பல்கள்தான் உள்ளது. அவற்றுள் நம் தரங்கினியும் ஒன்றென்பது பெருமை தரும் விஷயம்.

காற்றைப் பயன்படுத்தி உலகையே வலம் வரும் தன்மை இக்கலங்களுக்கு உண்டென்பது நமக்குத் தெரிந்ததுதான். கடலில் ஒரு முறை பயணம் சென்று வாருங்கள். இப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு கொசு போலக் கூட இல்லை என்ற நிதர்சனம் புரியும். எனக்கு அதிகம் பயணப்பட வாய்ப்புகள் கிட்டவில்லை என்றாலும் இருமுறை ஏவுகணைக் கப்பலிலும், ஒருமுறை நீர்மூழ்கியிலும் கடலை அளந்து வந்தேன்.

தரங்கினியில் மொத்தம் 18 பாய்கள் உள்ளன. அவற்றின் பரப்புளவு சுமார் 1000 சதுர மீட்டர். 6 அதிகாரிகளும், சுமார் 20 ‘ற்கு மேற்பட்ட மாலுமிகளும்தான் கப்பலின் நிரந்தரக் குழு. 30 பயிற்சியாளர்களும் உடன் செல்ல முடியும். தரங்கினி இந்தக் குறுகிய காலத்தில் சாதித்தது என்னவென்று பார்ப்போம்.

பயிற்சியோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு புது விதமான சகாஸம் மற்றும் நல்லெண்ண செயலிலும் தரங்கினி இறங்கியது. அது அண்டார்டிகா தவிர்த்து உலகையே வலம் வரும் திட்டம். 23 ஜனவரி 2003 ‘ல் தனது மிகப் பெரிய கடற்பயணத்தை தரங்கினி தொடங்கியது. பயணத்தின் நோக்கம் என்னவென்றால் ‘சமுத்திரங்கள் கடந்த நட்புப் பாலம் ‘ ( ‘Bridging friendship across the oceans ‘) அமைப்பது. துறைமுகங்களையும், எதிரியின் கலங்களையும் அழிக்க பல்வேறு கப்பல்கள் வடிக்கும் காலத்தில் நட்புறவு வளர்க்க வந்த கலம்தான் தரங்கினி. மொத்தம் 18 நாடுகள், 36 துறைமுகங்களில் பாய் (கால் ?) பதிப்பதோடு, அமெரிக்காவிலுள்ள ஐம்பெரும் ஏரிகளில் ஒரு ரேஸிலும் கலந்து கொள்வதாய் பயணத்திட்டம்(2003 Tall Ship Event) வகுக்கப்பட்டது. பொதுவாக யுத்தக்கப்பல்களையே தனது பராக்கிரமத்தைக் காட்ட வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கு உலக நாடுகள் அனுப்பி வைக்கும். தரங்கினியின் நோக்கமோ மிகவும் புனிதமானது. தீவிரவாத்தாலும், மதம் மற்றும் பல்வேறு காரணிகளால் உலக நாடுகள் பிரிந்துபட்டுள்ள தற்போதைய நாட்களில் மிகவும் தேவையான ஒன்றும் கூட.

தரங்கினி இந்திய மாலுமிகளோடு மட்டுமின்றி வெளிநாட்டு அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்தது. அந்த நாடுகளில் சில: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, இத்தாலி, மலேஷியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து.

அதிகமாகக் கதையாடாமல், தரங்கினி பயணத்தின் சிறப்பம்சங்களை கீழே தொகுத்துள்ளேன்:

* 458 நாட்கள் கடற் பயணம், 33,000 கடற் மைல்கள். ஒப்பு நோக்க வேண்டுமென்றால் கொலம்பஸ் விட்டாச்சு லீவு என்று 1492 ‘ல் 8 மாதங்களில் 3,000 கடற் மைல்கள் கடந்தார். தரங்கினியோ சுமார் 15 மாதங்களில் 33,000 (11 மடங்கு) கடற் மைல்கள் கடந்தது.

* சுமார் 1000 பயிற்சி அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பாடம் படித்தார்கள்

* 30 பாய் மரக் கலங்கள் பங்கு கொண்ட அமெரிக்க ரேஸில் முதலிடம் (Youth Training Division Category)

* ‘சர்வதேச நட்புணர்வு மற்றும் புரிந்து கொள்ளுதல் ‘ என்ற கொள்கையை எந்தக் கப்பல் சிறப்பாகச் செயல் படுத்துகிறது என்ற வகையில் தரங்கினிக்கு முதலிடம்

* 2003 விக்கி ஸ்காட் மெமோரியல் கோப்பை – தரங்கினியின் கேப்டனுக்கு (கமாண்டர் செளகத் அலி) கிடைத்தது

உலகினை வலம் வருவது வெறும் மாலுமிகளுக்கு பாய்மரத்தின் செயல்பாடுகளையும், கயிறுகளை கையாளும் வித்தைகளையும், கலமியக்கும் யுக்திகளையும் கற்றுக் கொடுக்க மட்டுமன்று. சாகஸச் செயலின் தாக்கம், குழுவாக இயைந்து செயல்படும் குணம், முழு கவனம், தலைமை தாங்கும் தகுதி, உடலையும் உணர்வுகளையும் விரைந்து செயல்படும் தன்மை, சவால்களை தன்னம்பிக்கையோடு சந்திக்கும் திறன், பொறுமை, உறுதியான நிலைப்பாடு மற்றும் நன்நம்பிக்கை ஆகியவற்றை கேடட்களிடம் வளர்ப்பதும்/விதைப்பதும் முக்கிய குறிக்கோள்களாய் கொண்டது இப்பயணம்.

பயணத்தில் அபாயங்களும் நேர்ந்தன. மெடிட்டரேனியன் பகுதியில் அடித்த சூறாவளியில் பாய்களும், கொக்கிகளும் கலத்திலிருந்து பெயர்ந்து வந்து விட்டன. கமாண்டர் ஷேக் மற்றும் கலக் குழுவும் 28 மணி நேரம் போராடி, கொந்தளித்த கடலிலிருந்து மீண்டு வந்தனர். அப்போது மணிக்கு 80 கடல் மைல் வேகத்தில் சூறாவளி வீச, அலைகள் சுமார் 10 மீட்டர் உயரம் வரை எழுந்தது. சேதாரமின்றி தப்பிக்க மிகச் சிறிய நேரம் கலத்தின் எஞ்சின் இயக்கப்பட்டது. சமயோசிதமாக செயல்பட்டு தரங்கினியை மீட்டதற்காக கமாண்டர் ஷேக்கிற்கு நெள சேனா (Nau Sena) வீரப்பதக்கம் கிட்டியது. இதே போல் பசிபிக் கடலிலும் அபாயத்திலிருந்து தரங்கினி மீண்டது.

15 மாத சுற்றுப்பயணத்தை முடித்து ஏப்ரல் 25 ‘ 2004 அன்று தரங்கினி கொச்சி வந்தடைந்தது. வரவேற்றுப் பேசிய முப்படைகளின் தளபதி திரு. கலாம் அவர்கள் கூறியதாவது, ‘1492 ‘ல் கொலம்பஸ் காரணத்துடன் தொடங்கி வைத்த கடற்பயண கலாச்சாரத்தை நீங்கள் தொடர்ந்தீர்கள். கொலம்பஸ் கண்டத்தை கண்டுபிடித்தார். நீங்களோ கண்டங்கள் கடந்து மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார்கள். இப்பயணம் முலம் இந்தியாவின் அமைதிக் கொடியை உலகமெங்கும் வீசச் செய்தீர்கள். ‘

இந்திய தபால் துறையோ 5 ரூபாய் தபால்தலை வெளியிட்டு தரங்கினியை கெளரவித்தது.

தரங்கினி கேப்டனின் டைரிக்குறிப்பு

It was during this epic voyage that the human spirit found its finest expression In an environment of challenge and adventure. It was a protracted voyage under a spread of canvas, where human skill and endeavour were pitted against the vagaries and raw energy of the elements of nature and finally emerged victorious & triumphant!

பாய்மரக் கப்பல்களைப் பற்றி எழுதப்பட்ட வரிகளில் என்னைக் கவர்ந்தது:

அவநம்பிக்கைவாதி காற்றை குற்றம் சாட்டுவான்; திடநம்பிக்கைவாதி (திசை) மாறுமென்று எதிர்பார்ப்பான்; நிதர்சனவாதி பாய்மரத்தை இணங்கச் செய்வான்.

— வில்லியம் ஆர்தர் வார்ட் (William Arthur ward)

படம் : நன்றி இந்திய கப்பற்படை

t_sambandam@yahoo.com

http://vanthiyathevan@blogspot.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்