ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா


காற்றென வந்தது, கூற்று மிங்கே!….இந்தக்

காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!….

காற்றடித் ததிலே, மரங்கள் கணக்கிடத் தகுமோ ?

நாற்றினைப் போலே சிதறி, நாடெங்கும் வீழ்ந்தனவே!

பாரதியார் [புயல், மழை, பிழைத்த தென்னந் தோப்பு]

வேனிற் கோளப் பகுதிகளில் உருவாகும் பிரளயச் சூறாவளிகள்!

ஒவ்வோர் ஆண்டிலும் வேனிற் காலச் சூறாவளிகள் உருவாகிப் பேய்க் காற்றும், பெரு மழையும் கடற்கரைப் பகுதிகளையும், உள்நாட்டுப் பரப்புகளையும் தவறாது தாக்கி வருகின்றன. பூமத்திய ரேகைக்கு அப்பால் கிடைரேகை 5 டிகிரி [Latitude] வடக்கிலும், தெற்கிலும் சூறாவளிகளின் பிறப்பகங்கள் உள்ளன. சைக்கிலோன் [Cyclone] என்பது ஹர்ரிகேன், டைஃபூன் [Hurricane, Typhoon] ஆகிய இரண்டு சூறாவளிகளைப் பொதுவாகக் குறிப்பிடும் ஒரு சொல். மணிக்கு 73 மைலைத் தாண்டி அடிப்பவை, சைக்கிலோன் சூறாவாளிகள்! மணிக்கு 39 முதல் 72 மைல் வரை வீசுபவை வேனிற் காலப் புயல்கள் [Tropical Storms] என்று கூறப்படுபவை. ஆண்டு ஒன்றுக்கு சூறாவளிகள் 30 முதல் 100 வரை உருவாகலாம் என்று அறியப்படுகிறது! அவற்றில் கால் பங்கு தென்கிழக் காசியப் பிரதேசங்களிலும், ஏழில் ஒரு பங்கு கரீபியன் [Carribean] அட்லாண்டிக் கடற்கரைகளிலும், பத்தில் ஒரு பங்கு தென்மேற்குப் பசிபிக் ஆஸ்திரேலியன் கடற்பகுதிகளில் நேருகின்றன.

பேரளவு மழை மேக மண்டலத்தையோ அல்லது பனித்தூளையோ [Snow] தூக்கிக் கொண்டு, சுழற்காற்றுடன் பாயும் சைக்கிலோன்கள் பொதுவாக பூமத்திய ரேகை வளையத்தைக் [Equtarial Belt] கடந்து அப்பால் தாண்டி வடக்கிலோ, தெற்கிலோ செல்பவை! எதிர்ச் சூறாவளிகள் [Anticyclones] எனப்படுபவை, மழைப் பொழிவற்ற மென்மையான சூறைக் காற்றடிப்புகள் [Lighter Winds without the Precipitation]. சூறாவளிச் சுருள் ஆழிகளில் சிறியது விட்டம் 600 மைலுக்குக் குறைந்திருக்கலாம்! பூதச் சூறாவளிகளின் சுருள் விட்டம் 1800 மைல் முதல், 2400 மைல் வரை கூட பரந்து விரியலாம்!

‘சைக்கிலோன் ‘ எனக் குறிப்பிடப் படுபவை பூமத்திய ரேகைக்கு வடக்கிலும், தெற்கிலும் 10-15 டிகிரி கிடைகோடுகளில் [Latitudes] உள்ள அரங்கில் எழுபவை. கரீபியன், அட்லாண்டிக் கடல்களில் எழும் சூறாவளியை ‘ஹர்ரிகேன் ‘ என்றும் சைனாக் கடலில் உருவாகும் சூறாவளியை ‘டைஃபூன் ‘ என்றும் தனிப்பட்டுக் குறிப்பிடப் படுகின்றன. புயற் காற்றின் வேகம் மணிக்கு 65 மைல் முதல் 110 மைல் (வினாடிக்கு 30 மீடர் முதல் 50 மீடர்) வரைச் செல்லலாம்! மிதமிஞ்சிப் போனால் மணிக்கு 135 மைல் (வினாடிக்கு 60 மீடர்) கூடப் போகலாம்!

ஹர்ரிகேன்களின் வல்லமை, புயலின் வேகம், சேத மதிப்பீடுகளை ஒப்பிட்டு ஐந்து எண்ணிக்கைத் தகுதியில் கணிக்கப் படுகின்றன. அந்த எண்ணிக்கையில் முதலாவது எண் சூறாவளி சிறியதாகவும், ஐந்தாவது தரநிலைச் சூறாவளி எல்லாவற்றுக்கும் வலியதாகவும் கருதப்படும்! ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஜுனா இரண்டாவது தகுதிச் சூறாவளியாகக் கருதப்படுகிறது. 1992 ஆகஸ்டில் வட அமெரிக்காவைத் தாக்கிய வலுவான சூறாவளி ஆன்டுரூஸ் [Hurricane Andrew] நான்காவது தகுதி பெற்றது!

கனடா ஹாலிஃபாக்ஸில் அடித்த ஜுனா சூறாவளி

2003 செப்டம்பர் 29 ஆம் தேதி, கனடாவின் சிறந்த கிழக்குத் துறைமுகமாகக் கருதப்படும் ஹாலிஃபாக்ஸைத் தாக்கிப் பேரழிவையும், பெரும் இன்னல்களையும் விளைவித்த ஹர்ரிகேன் ஜுனா, நோவாஸ்கோசியாவின் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் பேரசுரச் சூறாவளியாக குறிக்கப்படுகிறது! வேகத்திலும், வலுவிலும் இரண்டாம் தகுதி நிலையைப் பெற்றாலும், நோவாஸ்கோஸியா, பிரின்ஸ் எட்வெர்டு தீவு [Prince Edward Island (PEI)] மாநிலங்களில் சூறாவளி இழைத்த சேதங்களும், பதினாங்கு நாட்கள் 300,000 மக்கள் மின்சக்தி யின்றி, விளக்குகள் இன்றி, போக்குவரத்துக்கள் இல்லாமல் பட்ட இன்னல்களும் எழுத்தில் சொல்லப் பல பக்கங்கள் வேண்டும்! மாண்டவர் எட்டுப் பேராக இருந்தாலும், தங்க வீடில்லாமல், குடிக்க நீரில்லாமல், இரவில் விளக்கில்லாமல், அபாயத்தை அறிவிக்க டெலிஃபோன் தொடர்பில்லாமல் ஆயிரக் கணக்கான மக்கள் பட்ட அவதிகள் எண்ணற்றவை! பெருமழை பெய்யாவிடாலும், பேய்ப் புயலே பெருந்தீங்குகளை மாநில மெங்கும் விளைவித்தது!

மில்லியன் கணக்கில் மரங்கள் சரிந்து, விழுந்து பாதைகளில் வாகனப் போக்குகள் தடைப்பட்டு, மனித நடமாற்றங்களும் நின்று போயின! காரணம் மரங்கள் சரிந்து, மின்சாரக் கம்பிகள் அறுந்து, மின்சாரத் தீ விபத்துகள் நேர்ந்து, மின்சார அதிர்ச்சிகள் ஏற்படுத்தப் பயமுறுத்தின! அடித்த புயலில் மின்சாரம் பரிமாறும் மரக் கம்பங்கள் முறிந்து, வீடுகளும் வீதிகளும் இருண்டு போயின! மரங்கள் விழுந்து எண்ணற்ற வீடுகள் பிளவு பட்டன; கார்கள், டிரக் வாகனங்கள் மரங்கள் விழுந்து நசுக்கப் பட்டு முடமாயின! பல வீடுகளில் மேல்தளங்கள், கூரைகள் காற்றில் அகற்றப்பட்டு, மழைநீர் கொட்டிச் சிதைந்து போயின! ஜுனா சூறாவளி இரு மாநிலங்களில் விளைவித்த சேதாரங்கள் 500 மில்லியன் டாலர் நிதி மதிப்பைத் தாண்டும் என்று மதிப்பிடப் படுகிறது.

ஜுனா சூறாவளிக் கண்ணின் விட்டம்: 20-24 மைல் (35-40 கி.மீடர்) என்று கணிக்கப் படுகிறது! அதன் கண்மதில் மேகக் கவசத்தின் [Eyewall] உச்ச வேகப் புயலின் ஆரம் [Radius] மையத்திலிருந்து 18 மைல் என்று மதிப்பிடப் பட்டது! அளக்கப்பட்ட பேய் வேகம்: மணிக்கு 95 மைல். புயற் காற்றின் உச்ச வேகம்: மணிக்கு 110 மைல்! ஜுனா மையக் கண்ணின் அழுத்தம் 973 mb (milli bar)என்று மதிப்பிடப் பட்டது! ஹாலிஃபாக்ஸ் மீது தாக்கிய சமயத்தில் காற்றின் சராசரி வேகம் மணிக்கு 90 மைல் என்றும், உச்ச வேகம் மணிக்கு 105 மைல் என்றும் பதிவாகி உள்ளன. உச்ச வேகம் பூண்ட சூறாவளி வீச்சின் கிழக்கு வரம்பு [Hurricane East Wing] ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தின் மீது பயணம் செய்திருந்ததால், அப்பகுதிகளில் சிதைவுகள் மிகுந்திருந்தன.

PE தீவை நெருங்கும் போது, ஜுனாவின் வேகம் மணிக்கு 57 மைலாகத் தணிந்தது. புயலின் வேகம் மணிக்கு 84 மைலாகக் குறைந்தது. பெய்த மழைப் பொழிவின் அளவு: 25-40 மி.மீடர். ஹாலிஃபாக்ஸ் அருகே கடல் மட்டம் 7 அடி உயரம் எழுந்து, அலைகள் 30 அடி உயரம் தாவியதாக அறியப் படுகிறது. இரண்டு காரணங்களால், சூறாவளி ஜுனா அதிக மழையைப் பொழியவில்லை! முதலாவது காரணம் சூறாவளி (35-40) mph வேகத்தில் விரைவாக மாநிலத்தைக் கடந்து சென்றது. ஆதலால் மழை நின்று பெய்ய நேரமின்றிப் போனது. இரண்டாவது காரணம் ஜுனா சூறாவளியின் தென்பகுதி பெரும்பான்மை நீர்மை குன்றி வரட்சியாக வற்றிப் போனது. புயலின் வாயு அழுத்தம் மிகுந்திருந்ததால், வனாந்தரக் காட்டு மரங்களை அப்படியே ஒருபோக்கில் சூறாவளி தாக்கித் தரையில் தள்ளியது! புயற்காற்று அடித்துச் சிதைவு செய்த சின்னங்களே நோவாஸ்கோசியா, P.E. தீவு மாநில மெங்கும் காணப்பட்டன!

பாரத கண்டத்தில் நேர்ந்த சூறாவளிப் பேரழிவுகள்!

பாரதத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதி நகரங்கள் அடிக்கடி சூறாவளிகளால் தாக்கப்பட்டுப் பேரழிவுகள் உண்டாகி வந்தது காவியங்களிலும், வரலாறுகளிலும் காணப்படுகிறது! தமிழகத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் [கி.பி.1223 ?] எழுதப்பட்ட சிலப்பதிகாரக் காவியம் போற்றும் கண்ணகி, கோவலன், மாதவி மூவரும் வாழ்ந்த காவிரிப் பூம்பட்டினம் என்னும் கிழக்குக் கடற்கரை நகர் பூம்புகாரைக், கடல் கொண்டு விட்டதாக மணிமேகலை காப்பியத்தில் சீத்தலைச் சாத்தனார் அறிவிக்கிறார்! ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிப் போன பூம்புகாரை, ஒருநாள் தமிழகப் புதை பொருள் ஆய்வு நிபுணர்கள் நிதி செலவழித்துக் கண்டுபிடிக்க முயல்வார் என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து! முதல் நூற்றாண்டில் வெஸ்சூவியஸ் எரிமலை கக்கிச் சாம்பலில் மூடிப்போன இரண்டு நகரங்களை, இத்தாலியர் அவ்விதமே தோண்டிக் கண்டுபிடித்தனர்! பூம்புகார் தேடல் பணியைத் தமிழகம் ஒருகாலத்தில் செய்ய முற்பட்டுத் தமிழர் வரலாற்றைத் தோண்டி நிரப்ப வேண்டும்.

பிரிட்டிஷ் இந்தியாவில் கிழக்குக் கரையில் அடித்த ஆறு பெரும் சூறாவளியின் கோர மரணங்கள் பதிவாகி உள்ளன! 1737 அக்டோபர் 7 ஆம் தேதி கல்கத்தாவில் அடித்த சைக்கிலோன் சூறாவளியில் 40 அடி உயரம் கடல் அலைகள் எழுந்து 300,000 மேற்பட்ட மக்கள் மூழ்கிப் போனதாக அறியப்படுகிறது! பிறகு வங்காளக் வளைகுடாவில் 1789 ஆம் ஆண்டு கொரிங்கா [Coringa] என்னும் நகரை அடுத்தடுத்து மூன்று சூறாவளிகள் தாக்கிக் கடலைகள் உயர்ந்து 20,000 பேர் மாய்ந்து போனார்கள்! அதே நகரைத் தாக்கிய 1839 சூறாவளியில் 300,000 பேரும், கல்கத்தாவில் அடித்த 1864 சூறாவளியில் 70,000 மாந்தரும், வங்காளத்தில் மெக்னா ஆற்றுச் சங்கமப் பகுதியில் சிட்டகாங்குக்கு அருகில் வீசிய 1876 சூறாவளியில் 100,000 மக்கள் மூழ்கிப் போனார்கள்! 100,000 பேர் கறைபட்ட நீரால் விளைந்த நோயில் இறந்தார்கள். 1942 இல் எழுந்த சூறாவளியில் வங்காள மக்கள் 40,000 பேர் மாண்டனர்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆறு முக்கிய சூறாவளிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஐந்து ஒரிஸா, ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் நிகழ்ந்தவை! 1994 அக்டோபரிலும், 1995 நவம்பரிலும் ஏற்பட்ட சைக்கிலோன்களில் அதே பகுதிகளில் பெருஞ் சேதம் உண்டானது. 1996 இல் ஆந்திரா மாநிலத்தில் கோதாவரி ஆற்றுச் சங்கமக் கடற் கரையைத் தாக்கிய சைக்கிலோனில் மணிக்கு 100 மைல் வேகத்தில் புயல் அடித்தது! அதன் விளைவாக 1675 பேர் மரணம் அடைந்தனர்! பல்லாயிரம் மக்கள் வீடிழந்தனர்! 5400 செம்படவர் படகுகள் நொருங்கி உடைந்தன! 1998 இல் நேர்ந்த குஜராத் சூறாவளியில் 900 பேர் மாண்டதாகவும், 1800 பேர் காயமுற்றதாகவும் அறியப்படுகிறது.

1999 அக்டோபர் 29 இல் ஒரிஸாவை அடித்த சைக்கிலோனில் புயல் காற்று மணிக்கு 190 மைல் வேகத்தில் வீசியது! கடல் அலைகள் 15 அடி உயர்ந்து, 85 மைல் அகண்ட கரைப் பகுதியில் பெருஞ் சேதம் விளைவித்தது! போக்குவரத்து வீதிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள், மின்சார நிலையங்கள், தகவல் தொடர்புக் கம்பிகள், வேளாண்மை நிலங்கள் யாவும் பாதிக்கப் பட்டன! 10,000 பேர் உயிரிழந்தனர்! 2.5 மில்லியன் மக்கள் வீடிந்தனர்! 400,000 கால்நடை உயிரினங்கள் மூழ்கி மாண்டன! பொருள் விரையம்: 3.5 பில்லியன் U.S. டாலர் மதிப்புக்கு நிகரானது!

வேனிற் காலச் சூறாவளிகள் உருவாக ஐந்து நிபந்தனைகள்

வேனிற் காலச் சூறாவளிகள் [Tropical Cyclones] உருவாகி அசுர வல்லமை அடைவதற்கு பின் காணும் ஐந்து நிபந்தனைகள் நிறைவேற வேண்டும்:

1. கடற்பரப்பில் உஷ்ணம் 26.5 டிகிரி C, அல்லது அதற்கு மேற்பட்டுச் சூடாக இருத்தல் மிக மிக அவசியம். இவ்வித வெப்பக்கடல் நீர்நிலை உஷ்ணம் இருந்தால்தான், தொடர்ந்து நிலையாக நீர்மை ஆவி [Water Vapour] உற்பத்தியாகிப் பிறகு குளிர்ச்சி நிலை அடையும் போது, ‘தேங்கிய வெப்பம் ‘ வெளியாக [Release of ‘Latent Heat ‘ of Condensation] ஏதுவாக இருக்கும்.

2. பூமியின் தன்னச்சில் சுற்றும் வேகம் பூமத்திய ரேகையில் உச்சமாகி [சுமார் மணிக்கு 1000 மைல்], துருவங்களில் பூஜியத்தை அண்டுகிறது. சூறாவளிகள் சுற்ற ஆரம்பிக்க, நீர் முகில் கிடைரேகை 5 டிகிரிக்கு மேலாக உள்ள கடற் பரப்புகளில் உருவாக வேண்டும். அப்பிரதேசங்களில்தான் குறைந்த அளவு ‘புவிச்சுழல் விசை ‘ [Coriolis Force] உற்பத்தியாக முடியும். பூமத்திய ரேகை உச்ச வேகத்திற்கும், 5 டிகிரி அல்லது மேற்பட்ட கிடைரேகையில் நேரும் குன்றிய புவிச்சுழல் வேகத்துக்கும் உள்ள வித்தியாசமே, வேனிற் புயல் காற்றைத் தீபாவளிச் கிருஷ்ணச் சக்கரம் போன்று சுற்ற வைக்கிறது!

3. வெப்ப நீர்முகில் திணிவு வேறுபாடால் மேலே உயரத்தில் எழும்போது, காற்றோட்டம் துண்டிக்கப்படாமை [Absence og Wind Shear with Height]! அந்நிலையில்தான் வெப்ப நீர்முகில் தடங்கலின்றிக் கடல் மட்டத்திலிருந்து, மேல் கோளத்திற்குச் [Troposphere] செங்குத்தாக எழ முடிகிறது.

4. கீழ்மட்டக் குவிப்போக்கை விட மேல்மட்ட விரிவாக்கம் மிகையாதல் [Upper Level Divergence greater than Lower Level Convergence]. இவ்விதமாக நிகழும் விரிவாக்கத்தில்தான் உள்ளிழுக்கப்படும் காற்று, வெளித்தள்ளப்படும் போது, விரைவாக்கம் பெற்று வேகம் அதிகமாகிறது.

5. கீழ்மட்ட கடற்பரப்பில் ஏற்கனவே அமைந்திருக்கும் கொந்தளிப்பு [Pre-existing Low-level Disturbance].

வேனிற் காலச் சூறாவளிகளின் பிறப்பும் சக்தியும்!

மகர ரேகை, கடக ரேகை இரண்டுக்கும் இடைப்பட்ட வேனிற் கோளக் கடல்களில் [ Seas between Tropics of Capricorn & Cancer] மணிக்கு 75 மைல் (mph) வேகத்தைத் தாண்டி வீசும் ஹர்ரிகேன் எனப்படும் பேய்மழைச் சூறாவளிகள் உருவாகின்றன. அவை தாக்கும் போது கடற்கரைப் பிரதேசங்களிலும், உள்நாட்டுப் பரப்புகளிலும் உயிர்ச்சேதம், பயிர்ச்சேதம், பொருட்சேதம் விளைந்து வருவது, இயற்கை அன்னையின் திருவிளையாடல்களில் ஒன்று! பூமத்திய ரேகை உச்ச வேகத்திற்கும், 5 டிகிரி அல்லது மேற்பட்ட கிடைரேகையில் நேரும் குன்றிய புவிச்சுழல் வேகத்துக்கும் உள்ள வித்தியாசமே, வேனிற் புயல் காற்றைத் தீபாவளிச் கிருஷ்ணச் சக்கரம் போன்று சுற்ற வைக்கிறது!

வடபாதிக் கோளத்தில் [Northern Hemisphere] எழும் சூறாவளிகள் மையக் கண்ணை நோக்கிச் சுழலும் போது, எதிர்க்கடிகாரச் சுற்றோட்டத்திலும் [Anti-clockwise] தென்பாதிக் கோளத்தில் [Southern Hemisphere] எழும் சூறாவளிகள் மையக் கண்ணை நோக்கிக் கடிகாரச் சுற்றோட்டத்திலும் [Clockwise] காற்றின் போக்குகள் சுழல்கின்றன! சூறாவளியின் மையக் கண்ணில் [Eye of the Storm] மெல்லிய தென்றல் மேவுகிறது! சற்று அமைதி நிலவுகிறது! மேலும் மையத்தில் பாராமெட்ரிக் அழுத்தம் மிகக் குன்றி விடுகிறது! ஆனால் காற்றின் வேகம், நீர்மைத் திணிவு [Humidity], மழைப்பொழிவு [Rainfall] ஆகியவை மைய அரங்கத்தை நோக்கிச் செல்லும் போது மிகையாகும்! அவை யாவும் நடு மையத்தைத் தொட்டவுடன் சட்டெனக் குன்றிவிடும்! மையக் கண்ணில் கீழ்நோக்கிக் காற்றெழுச்சி [Downdraft] ஏற்படும் சமயத்தில், உஷ்ணம் 8-10 டிகிரி C சூறாவளியின் அகண்ட உடம்பை விட அதிகமாக இருக்கும்!

சூறாவளிக் கொந்தளிப்புகள் பூமத்திய அரங்கில் கீழ்க்கிடை ரேகையிலிருந்து வடிவம் பெற்று, நடுநிலைக் கிடைரேகை நாடுகளுக்குப் [Low to Middle Lattitudes] பேரளவுக் கொள்ளளவு வெப்ப நீர்த்துளி ஆவியைச் சுமந்து கொண்டு போய் வாயு மண்டலத்தைக் கலக்கி அடிக்கிறது. முதிர்ச்சி யுற்ற சூறாவளி ஒன்று மணிக்கு 3.5 பில்லியன் டன் நீர்த்துளி ஆவியைத் தணிமட்டச் சூழ்மண்டலத்தில் [பூமத்திய ரேகைப் பகுதியில் 8-10 மைல் உயரம், துருவப் பிரதேசத்தில் 5-6 மைல் உயரம் (Troposphere)] கொட்டுகிறது. ஹர்ரிகேன் ஒன்றின் பூத வளர்ச்சி, பேரளவுச் சக்தி [அழுத்தம், வெப்பம்] சேமிப்பை சுமந்து நூற்றுக் கணக்கான மைல்கள் தூரம் தூக்கிச் செல்லும் வல்லமை பெற்றது!

பூமத்திய ரேகைக்கு வடக்கிலும், தெற்கிலும் 300 மைலுக்கு உட்பட்ட பரப்புகளில் ஹர்ரிகேன் தோன்றுவதில்லை! ஹர்ரிகேன் சூறாவளியைப் பம்பரமாய்ச் சுற்றவைக்கும் ‘புவிச்சுற்று விசை ‘ [Coriolis Force] பூமத்திய ரேகையில் மீது மிக மிகச் சொற்பம், அல்லது பூஜியம்! பூமி சுழன்று வருவதால், புவிச்சுற்று விசை

நகரும் முகில் தூண்களை ஒரு புறத்தே திசை திருப்பும்! வட கோளப் பகுதியில் [Northern Hemisphere] புவிச்சுற்று விசை வலது புறம் திருப்பும்! சூறாவளி உருவாகக் கடற்பரப்பின் உஷ்ண நிலை 26.5 டிகிரிக்கு மேலாக இருத்தல் எவ்விதம் அவசியமோ, அவ்விதம் கடல் மட்டத்திற்கு 30,000 அடிக்கு மேல்வரை உயரத்தில் [9000 மீடர் உயரம்] வீசும் காற்றின் திசை ஒரே திக்கிலும், வேகம் ஒரே விதத்திலும் அடிக்க வேண்டும்! கொடை ராட்டினத்தில் [Merry-go-round] சுற்றும் ஒருவர் கையிலிருந்து ஒரு பந்தைச் சுழல விட்டால், அது ஒரு புறம் திரும்புவது போல் தோன்றும்! அதைப் போல சூறாவளிப் புயலைப் புவிச்சுற்று விசை வலப் புறமோ [in Northern Hemisphere], இடப் புறமோ [in Southern Hemisphere] திருப்புகிறது.

தகவல்கள்:

1. Hurricanes & Typhoons, Cyclones & Anticyclones, Winds & Storms, The New Encyclopaedia of Britannica Vol:5 & 9 [1978].

2. BBC News South Asia India Cyclone [June 12, 1998]

3. Case Studies: On the Southern Coast of India www.fao.org/FOCUS/E/disaster/casestud/CSindia.htm

4. Canadian Hurricane Centre, Hurricane Juna 2003 [Oct 29, 2003].

5. Canadian Broadcasting Corp -Recovering from Hurricane Juan

****

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா