குடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்! [2001 ஜனவரி 26]

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


உலுக்கிச் செல்லும் இறைவன் கை

உலுக்கி, உலுக்கி மேற் செல்லும்!

அழுதாலும், தொழுதாலும் அயரா தவன்கை!

உலுக்கியபின் மீண்டும் உலுக்க வரும்!

உமர் கையாம் II

புதிரான அதிர்ச்சிகள்! புரியாத இதிகாசக் கருத்துக்கள்!

புராதனக்குடி மாந்தருக்குப் பூகம்ப அதிர்ச்சிகள் புதிராகவும் வியப்பாகவும் இருந்ததோடு, எதனால் பூமி ஆடுகிறது என்னும் காரணத்தை அவர்களால் அறிய முடியவில்லை! அதனால் பூகம்பத்தைப் பற்றி போலிக் கருத்துகளும், பொய்யான கோட்பாடுகளும் நிலவி வந்தன! இந்திய இதிகாசத்தில் நிலநடுக்கத்தைப் பற்றி ஓர் உபமானம் கூறப்பட்டுள்ளது: பூத ஆமை முதுகின் மீது நான்கு யானைகள் நின்று கொண்டு பூமியைத் தாங்கியபடி யுள்ளன! ஆமையானது ஒரு நாகப் பாம்பின் சிரசின் மேல் அமர்ந்து தன் சமநிலையைச் சீராக்கி வருகிறது! அந்த விலங்கினங்கள் அங்குமிங்கும் நகரும் போதுதான், பூமியில் பூகம்பம் உண்டாகிறது!

In Gandhidham

நியூ ஸிலாந்தில் நிலவி வருவது, வேறு வித உருவகம்: பூமா தேவியின் கர்ப்பப் பையில் உண்டாகி வளரும் கருச்சிசுவான ரூவென்னும் தெய்வம் [God Ru] கை, கால்களை ஆட்டி வயிற்றில் உதைக்கும் போது, நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று மொழிகிறது! கிழக்கு ஆப்பிரிகாவில் பரவியுள்ளது இப்படி ஓர் உபமானம்: பாறாங்கலை அசுரமீன் ஒன்று முதுகின் மீது சுமந்து நீந்துகிறது! பசுமாடு பாறாங்கல் மேல் நின்று, தன் கொம்பு ஒன்றில் பூமியைத் தாங்கிக் கொண்டு விழாமல் நிற்கிறது! சில சமயங்களில், கழுத்து வலி வந்து கல்லைப் பசுமாடு ஒரு கொம்பிலிருந்து அடுத்த கொம்புக்கு மாற்றிக் கொள்கிறது! அப்போது நிலநடுக்கம் உண்டாகிறது.

இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட இந்திய நிலநடுக்கங்கள்!

கடந்த இருநூறு ஆண்டுகளில் நேர்ந்த ஏழு தீவிர நிலநடுக்கங்களில் குவெட்டாவில் ஒன்றும், குஜராத் மாநிலத்தில் இரண்டும், அஸ்ஸாமில் ஒன்றும், மகாராஷ்டிராவில் ஒன்றும் நிகழ்ந்துள்ளன. 1819 ஜூன் 16 இல் ஏற்பட்ட 8.0 ரிக்டர் அளவு குஜராத் பூகம்பத்தில், 2000 பேர் மாண்டதாகத் தெரிகிறது. 1897 இல் நேர்ந்த 8.1 ரிக்டர் அளவு அஸ்ஸாம் நிலநடுக்கத்தில் பல்லாயிரம் மக்கள் மரணம் அடைந்தனர்! 1930 மே மாதம் 30 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் குவெட்டா நிலநடுக்கத்தில் 30,000 இந்தியர் மாண்டதாக அறியப்படுகிறது! அஸ்ஸாம் திபெத் எல்லையில் 1950 ஆகஸ்டு 15 இல் நடந்த 8.6 ரிக்டர் அளவுப் பயங்கரப் பூகம்பத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்! அதனால் ஏற்பட்ட நிலச் சரிவுகளில் 70 கிராமங்கள் சிதைவுற்றன. கரைபுரண்டு ஓடும் பிரமபுத்திரா நதியோட்டம் தடைப்பட்டு, பல கிராமங்கள் 8 நாட்களாய் நீரில் முழ்கி 532 பேர் இறந்தனர்!

1956 ஜூலை 21 ஆம் தேதி அதே அஸ்ஸாம் பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உண்டாகி 156 பேர் கொல்லப்பட்டார்கள். 1993 செப்டம்பர் 29 ஆம் தேதி உண்டான மகாராஷ்டிரா 6.4 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில் 11,000 மக்கள் மடிந்துள்ளார்கள். 2001 ஜனவரி 26 இல் நிகழ்ந்த குஜராத் கோரப் பூகம்பம், 1956 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட 100 மடங்கு கடும்தீங்கு விளைவித்தது! மரணம் அடைந்தவர்கள் 20,000! காயமடைந்தவர்கள் 166,000! வீடிந்தவர்கள் 600,000! இமாலய, திபெத், நேபாளம், சைனா மலைத் தொடரான காரகோரம் சரிவு நிலநடுக்கப் பழுது, பாகிஸ்தான் ஹிந்து குஷ் மலைச் சரிவுகளில் பரவி, நிலநடுக்கச் சங்கிலிப் பிணைப்பு நீண்டு, ஈரான், துருக்கி போன்ற மத்திய ஆசிய நாடுகளையும் சாடுகிறது!

குஜராத்தில் நேர்ந்த கோரச் சம்பவம்!

2001 ஜனவரி 26 ஆம் தேதி குஜராத்தில் பூஜ் பகுதியை உலுக்கு மையமாகக் [Bhuj Epicenter] கொண்டு, 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பூகம்பமாகக் கருதப்படுகிறது! உலுக்கு மையத் தளத்தில் பிப்ரவரியில் எடுத்த பூதள விரிவுக் கணிப்புகளை [Geodetic Data] மறுபடியும் ஜூலையில் பெங்களூர் மின்கணனி கணிதப் போலி மாடல் மையத்தில் [Centre of Mathematical Modelling and Computer Simulation (CMMACS), Council of Scientific & Industrial Research (CSIR)] ஒப்பிட்டு ஆராய்ந்த போது, நிலநடுக்கப் பிற்பாடு ஏற்ற இறக்கங்கள் [Post-Seismic Displacements] மாதம் ஒன்றுக்கு 1 மில்லி மீட்டராகக் [1.0 mm/month] கணக்கிடப் பட்டது! பூதள முறிவு வடிவமைப்புகளை [Earth ‘s Rupture Geometries] ஆய்வு செய்ததில், பின்னதிர்ச்சி அளவுகள் [Aftershock Data] 45-50 டிகிரிக் கோணத்தில், தென்சரிவுப் பகுதியாக நிலநடுக்கப் பழுது [South-dipping Fault] 6 முதல் 24 மைல் பூமி ஆழத்தில் இருந்ததைக் காட்டின.

38 மில்லியன் ஜனத்தொகை [2001] கொண்ட குஜராத் மாநிலத்தில் நேரிடையாகவோ அன்றி மறைமுகமாகவோ 16 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்று மாநில அரசு அனுமானிக்கிறது. 20,000 மக்கள் மடிந்ததோடு, 166,000 பேர் காய மடைந்தனர்! 600,000 பேர் வீடிழந்து தெருவீதிக் கூடாரங்களிலோ அல்லது வேறிடங்களிலோ தங்க வேண்டிய தாயிற்று! 348,000 வீடுகள் தகர்ந்து தரைமட்ட மாயின! மேலும் 844,000 வீடுகள் விரிசலாகிப் பிளந்தன! குஜராத் பூகம்பக் கோர விளைவுகளால் நிதிப்போக்கு நட்டம் [Economic Loss] 1.3 பில்லியன் டாலர் [1 டாலர் =46.5 ரூபாய்] என்று இந்திய மத்திய அரசு கணித்துள்ளது. மற்றவர் செய்த மதிப்பீடுகளில் 5 பில்லியன் டாலர் வரை நிதித்தொகை ஏறலாம் என்று அறியப்படுகின்றது.

பூகம்பத்தால் ஏற்பட்ட இழப்புகள், தகர்ப்புகள்.

2001 பூகம்பத்தின் உலுக்கு மையம் [Epicenter] அகமதாபாத்திலிருந்து 150 மைல் மேற்கே உள்ள பூஜ் [Bhuj] என்னும் இடத்தில் தோன்றியது. நகரத்தின் இரண்டு பெரிய மாவட்ட மருத்துவ மனைகள் சிதைந்தன. நகர்ப்புறத்தே இருந்த சிற்றூர்களில் 1200 மருத்துவச் சாலைகள் இடிந்து விழுந்தன. 11,600 பள்ளிக் கூடங்கள் தகர்க்கப் பட்டன. சிற்றூர் நகர்க்குடி மக்கள் அனைவருக்கும் நீர்வசதிப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டது. 240 சிற்றணைகள் உடைந்து, வேளாண்மை விருத்தி, குடிநீர் அளிப்பு, தொழிற்சாலை இயக்கம் யாவும் தடைபட்டன. பல இடங்களில் மின்சாரப் பரிமாற்றம், டெலிஃபோன் தொடர்புகள் அறுபட்டன.

பூகம்பம் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் உதவி செய்ய, பல ஊர்களிலிருந்து 20,000 பொதுநபர் உடனே முன்வந்தனர். 20 முதல் 35% மக்கள் பாதிப்பு இடத்திலிருந்து வேறிடத்துக்குப் புலம்பெயர்ந்தனர்! தெற்கே நிலநடுக்கம் தாக்காத மந்துவிப் [Mandvi] பகுதியில் மக்கள் தொகை 35,000 எண்ணிக்கையிலிருந்து, சில நாட்களில் 100,000 ஆக மாறியது.

இந்தியாவின் பெரிய காண்டலா துறைமுகம் [Kandla Port] சிதைவு பட்டது. கட்ச் வளைகுடாப் பகுதியைக் கடக்கும் பெரிய இரயில் பாலத்தையும், போக்குவரத்துப் பாலத்தையும் தாங்கும் கடற் தூண்கள் இடிபட்டு, வாகனங்கள் பயணம் செய்ய முடியாது முடங்கிப் போயின! மின்சாரம் அனுப்பும் கோபுரத் தூண்கள் [Transmission Towers] சிதைவு படவில்லை! ஆனால் மின்கலன் தொகுப்புகள் [Battery Banks] பாதிக்கப் பட்டதால், வெளித்தொடர்பு, மின்சக்திக் காப்பு ஏற்பாடுகள் [Communication & Power Protection System] துண்டிக்கப் பட்டன. நல்ல வேளையாகப் பெட்ரோலிய ஆயில் தொழிற்சாலைகளுக்குப் போகும் 24 அங்குல ஆயில் பைப்புகள் உடைபட வில்லை.

நிலையற்ற பூமிக்குள் ஏற்படும் நிலநடுக்கத் தட்டுகள்!

தன்னச்சில் தானே சுற்றும் பூமி, ஒரு திரண்ட உருண்டைக் கட்டி அன்று. பூமிக்குள் திணிவு மிக்க உட்கருவைச் சுற்றிப் பல அடுக்குத் திட்டுகள் மேவிக் கவசத்தோல் [Mantle], மேல்திட்டு [Crest] என்பவை வளைந்து ஒட்டிக் கொண்டுள்ளன. கவசத்தோல், மேல்திட்டு மீது மோதும் போதுதான் ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கவசத்தோலின் மேற்புறம் [Upper Mantle] என்பது பூமிக்கு 40 முதல் 150 மைல் ஆழத்தில் இருக்கும் மென்திரவக் கோளம் [Asthenosphere] என்று அழைக்கப் படுகிறது. அது ஓரளவு குழம்பாகவே உள்ளது. மென்திரவக் கோளின் மேலே உள்ளது, திடத்தோல் கோளம் [Lithosphere]. திடத்தோல் பெரும் திட்டு திட்டாகக் கவசத்தோல் மீது மிதந்து கொண்டுள்ளது. அந்தத் திட்டுகளைத்தான் விஞ்ஞானிகள் ‘தட்டுகள் ‘ [Plates] என்று குறிப்பிடுகிறார்கள். பூமியின் ஈர்ப்பியல்பு, கவசத்தோலின் வெப்பச்சுழல், பூமியின் சுழற்சி, மற்றும் சில தூண்டு விசைகள் [Gravity, Convection, Rotation, Other Forces] போன்ற காரணங்களால், தட்டுகள் மெதுவாக நகர்கின்றன!

பூமியின் உட்கோளப் புறத்தில் கனல் வெப்பம் பொங்கும் போது, வெப்பச்சுழல் [Convection] உண்டாகும். சூடாக்கப்பட்ட பாறைகள் முப்புறச் சுழல் நகர்ச்சியில் [3D Circular Motion] குழம்பில் மிதந்து மேல் எழும்பும். கொதி கலத்தில் [Boiler Vessel] வெப்பச்சுழல் நிகழும் போது இவ்விதமே, வெப்பப் பண்டம் மேலே எழும்புவதும், குளிர்ந்த பண்டம் கீழே இறங்குவதும் இயற்கையான காட்சி! பூமிக்குள்ளும் இவ்விதக் கொதியுலை ஒன்று, கவசத்தோல் கோளத்தில் உள்ளதாகக் கற்பனித்துக் கொண்டால், பூமியின் மேல்திட்டில் [Mantle] ஏற்படும் அமுக்கத்தைப் [Stress] பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

பூதளத்தின் நிலக் கண்டங்கள் [Continents] நலிந்த திணிவுப் பிண்டம் [Lighter Materials] கொண்டவை. அவை மீண்டும் கீழே நிகழும் வெப்பச்சுழலில் கலந்து கொள்ள முடியவில்லை! கொதிநீரில் மிதக்கும் எண்ணை போல், அவை எப்போதும் பூமியின் மேல் தளத்திலே நிலவி வருபவை!

நிலநடுக்கப் பழுதுகள், குவிமையம், உலுக்கு மையம்

பூமி தன்னச்சில் தானே சுழல்கிறது. சுற்றும் வேகம் துருவ முனைகளில் பூஜிய மாகவும், பூமத்திய ரேகைப் பகுதியில் மணிக்கு 1000 மைல் வீதத்திலும் மாறுகிறது. பூமத்திய ரேகைப் பிரதேசங்கள், துருவத் தளங்களை விட வெகு விரைவாக நகர்கின்றன. ஆகவே சுழல்வீச்சு விசையால் [Centrifugal Force] ஏற்படும் புவித் தளங்களின் அமுக்கம் [Stress] பூஜியத்திலிருந்து பெருமளவு வேறுபடுகிறது.

திடத்தோல் தட்டுகள் [Lithosphere Plates] வெப்பச்சுழலாலும், சுழல்வீச்சு விசையாலும் உண்டாகும் அமுக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முறிவு படுகின்றன! அம்முறிவுகளே நிலநடுக்கப் ‘பழுதுகள் ‘ [Earthquake Faults] எனப் பெயர் பெறுபவை! பழுதுகள் எனப்படுபவை பூமியின் மேல்திட்டுக்குள்ளே [Earth ‘s Crest] கிடக்கும் முறிந்த தட்டுகள். அப்பழுதுகளின் வழியே புகும் பூமியின் உட்கரு அதிர்வுகள், சக்தியை வெளியாக்கிப் நிலநடுக்க அலைகளை உண்டாக்கும்! பூமிக்குள்ளே பிளவுபட்ட பாறைத் தொடர் திடாரென முன்பு ஏற்பட்ட பழுதுகளின் வழியே நகரும்போது, நிலநடுக்கம் உண்டாகிறது.

பழுதுத் தொடரில் எந்தப் புள்ளியில் துண்டிப்பு அல்லது உதைப்புத் தூண்டல் எழும்புகிறதோ, அப்புள்ளி ‘குவிமையம் ‘ [Focus] என்று அழைக்கப் படுகிறது. குவிமையத்துக்கு நேர் மேலே உள்ள பூதளப் புள்ளியை ‘உலுக்கு மையம் ‘ [Epicenter] எனக் குறிப்பிடுகிறார். பழுதுத் தொடர் குவிமையத்தில் மூன்று விதமான நிலநடுக்க விளைவுகள் உண்டாகலாம். 1. பிரிக்கும் அல்லது இழுக்கும் நடுக்கம் [Pull Apart (Extensional)] 2. சரியும் நடுக்கம் [Slip Slide (Transformal)] 3. இறுக்கும் நடுக்கம் [Compressional].

நீட்சி-இழுப்பு, துண்டிப்பு அதிர்வு அலைகள்

பூகம்ப அலைகள் பூதளம் மீது பரவிப் பயணம் செய்கின்றன. பல்வேறு விதமான அலைகள் தனித்து அறியப் பட்டாலும், முக்கியமாக இரண்டு வித அலைகளே எடுத்தாளப் படுகின்றன. 1. நீட்சி-இறுக்க அல்லது முதலடி அலைகள் [Push-Pull (Primary) or P-Wavess] 2. துண்டிப்பு அல்லது பின்னடி அலைகள் [Shear (Secondary) or S-Waves].

முதலடி அலைகள் வெகு விரைவில் பயணம் செல்பவை. அவற்றையே நிலநடுக்க மானி [Scismograph Recorder] முதலில் பதிவு செய்யும். தரை மட்டத்தில் நிலப்போக்கு நீள்வதும், சுருங்குவதும் பதிவாகும். இந்த நீட்சி-இறுக்க அலை [Push-Pull Wave] இழுக்கும் விசையாக [Extensional Force] அல்லது இறுக்கும் விசையாகத் [Compressional] தட்டுகளில் பயணம் செய்யும்.

துண்டிப்பு அல்லது பின்னடி அலைகள் முதலடி அலைகளை விட மெதுவாகப் பயணம் செய்பவை! நிலநடுக்க வரைமானியில் [Seismograph] பூகம்பம் உண்டாக்கும் அலைகளைப் பதிவு செய்யவும், தீவிரங்களை அளக்கவும் முடியும்.

நிலநடுக்கத் தீவிரம் [Earthquake Magnitude] இருவித அளவுகளில் குறிப்பிடப் படலாம். முதலாவது இத்தாலிய விஞ்ஞானி கியூஸெப்பி மெர்கல்லி [Giuseppe Mercalli] அமைத்த மெர்கல்லி அளவு [Mercalli Scale]. இரண்டாவது அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் ரிக்டர் [Charles Richter] 1935 ஆம் ஆண்டு காலிஃபோர்னியா தொழில் நுணுக்கக் கூடத்தில் [California Institute of Technology] ஆக்கிய ரிக்டர் அளவு [Richter Scale].

இமாலயத் திபெத் பீடபூமியில் பூகம்பப் பழுதுத் தொடர்

1934 ஆம் ஆண்டில் நேர்ந்த பீஹார்-நேபாள நிலநடுக்கத்தின் உலுக்கு மையத்திலிருந்து [Epicenter] எவரெஸ்ட் மலைச் சிகரம் 18 மைல் தூரத்தில்தான் உள்ளது! சென்ற 100 ஆண்டுகளில் பூகம்பத் தீவிரம் [Earthquake Magnitude] ரிக்டர் அளவு 8 கொண்ட 4 பூத நிலநடுக்கங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன! அடுத்து வரும் சில நூற்றாண்டிகளில் >8 ரிக்டருக்கும் மேற்பட்டு இன்னும் 4 அசுர பூகம்பங்கள், கங்கா நதித்தீரப் பிரதேசத்தை ஆட்டப் போகின்றன என்று யூகிக்கப் பட்டிருக்கிறது! அப்போது மக்கள் தொகை பெருத்த நகரங்களில் மடிந்து போகும் மாந்தர் ஒரு மில்லியனைத் தாண்டி விடலாம் என்று அஞ்சப் படுகிறது! அந்தக் கடும் நிலநடுக்கங்கள் இந்தியாவில் எங்கு நேர்ந்து இடர்ப்படுத்தும் என்று தெரியுமே தவிர, எப்போது ஏற்படும் என்பதைக் கூறுவது இயலாது!

கடந்த 50 ஆண்டுகளாக இமாலயத் தொடர்ப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பங்களில் இடிந்த வீடுகளிலும், விளைந்த நிலச்சரிவுகளிலும் மாண்டு போனவர் எண்ணிக்கை 20,000 என்று அறிய வருகிறது! இமய மலையின் அடித்தளத்தில் முறியும் கடின இணைப்பில் [Brittle Junction] ஆசியத் தட்டும், இந்தியத் தட்டும் [Asian & Indian Plates] சேரும் பகுதியில்தான் பெரும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன! ஆசியத் தட்டும், இந்தியத் தட்டும் நிலநடுக்கத் தூண்டுதலால் மோதிக் கொள்ளும் போது, இமாலய மண்பொதிகைக் குலுக்கப் படுகிறது! அதன் வடதிசைப் போக்கிலும் திபெத், மங்கோலியப் பீடபூமிகளிலும் நிலநடுக்கங்கள் நேருகின்றன! இந்திய வடமுனைப்பு, திபெத் பீடத்துக்குக் கீழிறங்க அமுக்கப்படும் போது, தட்டுகள் சூடேறி இழுப்பாகித் [Hot & Ductlie] திபெத் அடித்தளத்தில் ஆழமான நடுக்கங்கள் ஏற்படுகின்றன!

‘பூதளப் பரப்பளவி ஏற்பாடு ‘ மூலம் [Geological Positioning System (GPS Measurements 1 mm/week] அளவுகள் எடுத்ததில், இந்தியத் தட்டு ஆசியாவை ஆண்டுக்கு 6 செ.மீட்டரும், திபெத் பீடம் ஆசியாவை ஆண்டுக்கு 4 செ.மீட்டரும் நெருங்குவதாக அறியப்படுகிறது! அந்த இரண்டு வேறான நகர்ச்சிகளால் நேபாள நாடு ஆண்டுக்கு 2 செ.மீட்டர் குறுகி வருகிறாம்! அதாவது 360 மைல் நீட்சியுள்ள வடதிசை எல்லையில் ஆண்டுக்கு இரண்டு கால்பந்துத் திடல் நீளம் மறைந்து போகிறது என்பது தெரிய வருகிறது!

அஸ்ஸாமில் ஷில்லாங் பீடபூமி நிலநடுக்கத் தொடர்

1897 இல் அஸ்ஸாம் பீடமான ஷில்லாங் பகுதியில் 8.1 ரிக்டர் அளவில் நேர்ந்த ஒரு பெரு பூகம்பத்தின் காரணத்தை ஆராயக் கொலராடோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராஜர் பில்ஹாம் [Roger Bilham], ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பிலிப் இங்கிலண்டு [Philip England] ஆகியோர் இருவரும் முற்பட்டனர். பூகம்ப முடிவில் ஷில்லாங் பீடபூமி 50 அடி மேலே உயர்ந்து விட்டது! மேகாலயா பிரதேசத்தில் ஸில்லாங் பீடபூமிக் கடியில் இரண்டு நெருங்கிய நிலநடுக்கப் பழுதுகள் முறிந்து பூகம்பம் உண்டானதாக அவர்கள் இருவரும் நம்பினர்.

அவர்கள் ஆய்வில் கண்டறிந்த விளக்கம், ஆங்கில விஞ்ஞான வெளியீடு ‘இயற்கையில் ‘ [Nature] ஏப்ரல் 12, 2001 இல் வந்தது : ‘உலுக்கு மையத்துக்குக் [Epicenter] கீழே பீடபூமிக்கடியில் 10 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் உண்டாகி, வளர்வேகம் புவி ஈர்ப்பியல்பை மீறிப் [Acceleration Exceeded Earth ‘s Gravity] பெரும் பாறைகள், இடுகாட்டுப் புதைகற்கள் [Boulders & Tombstones] வீசிக் காற்றில் எறியப்பட்டன. ஏன் மாந்தர் கூடத் தூக்கி எறியப் பட்டனர்! பழுதுப் பகுதிப் பாறைகள் கூட மேற்திட்டு அரணைப் [Crest] பொத்துக் கொண்டு வீசப்படலாம் என்னும் ‘கொந்தளிப்பு முறிவுகளைக் ‘ [Active Deformation] கண்டோம்! 20,000 பேர் மாண்ட குஜராத் [2001 ஜனவரி 26] பூகம்பமும், 1897 ஆண்டு அஸ்ஸாமில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தை ஒத்தது ‘ என்று எழுதி யிருந்தனர்.

பல விஞ்ஞானிகள் அஸ்ஸாம் பூகம்பம் இமாலயத் தொடர் நிலநடுக்கப் பழுதால் துவங்கி, வடபுறம் தாழ்ந்து பூதானுக்குத் [Bhutan] தென்புறத்தில் பரவியது என்று தவறாகக் கருதினர்! ஆனால் பில்ஹாம், பிளிப் இருவரும் நூறாண்டுகளுக்கு முன்னால் பிரிட்டன் புரிந்த நிலப்பரப்பு வரைவுகளை [Survey of India] மின்கணனி மாடல்களில் [Computer Models] போட்டுப் பார்த்ததில், முதலடி நிலநடுக்கப் பழுது [Primary Fault] பூதானுக்கு 100 மைல் தெற்கே உள்ள ஷில்லாங் பீடத்தின் கீழே காணப்பட்டது! ஓல்டாம் நிலநடுக்கப் பழுது [Oldham Fault] எனப்படும் அப்பழுது 78 மைல் நீட்சியில் இமயப் பழுதுக்கு அப்பால், 20 மைல் ஆழத்தில் இருந்ததை பில்ஹாம், பிலிப் இருவரும் கண்டனர்! ஒல்டாம் பழுதுக்குத் தெற்கே மற்றுமொரு பழுதும் இருக்க வேண்டு மென்று இருவரும் கூறினர்.

பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய அஸ்ஸாம் பூகம்ப விளக்கம்

அடுத்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் நிபுணர், காப்டன் ஜெ. பான்ட் [J. Bond] புரிந்த நிலவரைவில் ஷில்லாங் பீடபூமி 20 அடி உயர்ந்திருப்பதைக் காட்டி யுள்ளார்! அதே சமயம் பிரிட்டிஷ் புவியியல்வாதி ரிச்செர்டு ஓல்டாம் [Geologist Richard Oldham] 1897 அஸ்ஸாம் நில ஆட்டத்துக்குப் பிறகு, ஷில்லாங் பீடபூமி தொடர்ந்து நகர்ந்து, பூர்வீக நிலவரைப் பதிவுகளைப் பிழையாக்கி விட்டது! 1936 இல் இறந்த ரிச்செர்டு ஓல்டாம், அஸ்ஸாம் பூகம்பத்தைப் பற்றி விளக்கமாகக் கூறிப் பூமியின் உட்கருவை ஆராயும் ஒரு சிறந்த ஆய்வு நூலை எழுதி யுள்ளார்.

2 முதல் 5 மில்லியன் ஆண்டுகளாக ஷில்லாங் பீடபூமி உயர்ந்து வருவதால், நூறாண்டுக்கு 15 அங்குல வீதம் இந்திய நிலத்தட்டு [Indian Plate shrinks by 15 inch per century] சுருங்கிக் குறுகுகிறது! அதனால் பூதானில் நிலநடுக்க எதிர்பார்ப்புகள் குன்றி, 130 மில்லியன் மக்கள் [2001] வாழும் பங்களா தேசத்தில் பூகம்பம் அதிகமாக நிகழ ஏதுவாகிறது! அஸ்ஸாம் பூகம்பம் போன்று [8.1 ரிக்டர்] ஒரு பூத நிலநடுக்கம், ஷில்லாங் பீடப் பழுதில் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் என்று முன்னறிவிக்கிறார், ராஜர் பில்ஹாம்! அவ்வித அசுர நிலநடுக்கம் வருவது அபூர்வம்! அப்படி வந்தால் மேகாலய, பங்களா தேசப் பகுதிகளில் கோடிக் கணக்கான பாமர மக்கள் மாண்டு போவார் என்று அஞ்சுகிறார், ராஜர் பில்ஹாம்!

தகவல்கள்:

1. Earthquake Engineering Research Institute [EERI] Gujarat Preliminary Report from the Field By: Donald Ballantyne www.reliefweb.int/w/rwb.nsf [Feb 10, 2001]

2. 26 January 2001 Bhuj Earthquake, Gujarat, India [Updated August 2001]

3. Casualities www.gujarat-eathquake.gov.in/final/casualities.html [Updated May 3, 2001]

4. Earthqukae Facts & Figures www.uaf.edu/seagrant/eathquake/facts6.html

5. British Geological Survey Network Information.

6. General Earthquake Information.

7. Himalayan Earthquakes

8. Building Materials & Technology for Disaster Preparedness, Mitigation & Management

*****************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா