அறிவியல் துளிகள்-14

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


53. விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?

விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, 8, 7, ———— 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர். இதில் ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக் குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப் பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும் எண்ணுவது தொடரும். ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜயம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம் தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக் கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

54. கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் ?

இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் — அது துப்பாக்கிக் குண்டோ, சாதாரணக் கருங்கல்லோ எதுவாயினும் அவற்றில் — ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kinetic energy) உள்ளது; இந்த ஆற்றலை உந்தம் (momentum) என்பர். இவ்வுந்தம் பொருள் செல்லும் நேர்விரைவைப் (velocity) பொறுத்தது. அதாவது நேர்விரைவு மிகுதியாக இருந்தால் உந்தமும் மிகுதியாக இருக்கும். துப்பாக்கிக் குண்டு போன்ற எடை குறைந்த தக்கையான பொருளும் மிக விரைவாகச் செல்லும் போது அதனுடைய உந்தம், மெதுவாகச் செல்லும் எடை மிகுந்த பொருளின் உந்தத்தைவிடக் கூடுதலாக இருக்கும். துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் விரைவில் செல்வதால், அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடிக் கதவால் தடுக்கப்படும்போது, அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே; அதே நேரத்தில் துப்பாக்கிக் குண்டு சுழன்றவண்ணம் விரைந்து செல்வதால் கண்ணாடிக் கதவில் துளையை உருவாக்கி அதன் வழியே வெளியேறிவிடுகிறது. மாறாகக் கதவை நோக்கி வீசியெறியப்பட்ட கல் குறைந்த வேகத்தில் செல்கிறது; அது கண்ணாடிப் பலகையைத் தொடும்போது அதன் முழு உந்தமும் கண்ணாடிக்கு மாற்றப்பெறுகிறது. இவ்வாறு கல்லில் பொதிந்திருந்த முழு ஆற்றலும் கண்ணாடிக்கு மாற்றமுறுவதோடு அதன் தகைவுப் பகுதிகளிலும் –அதாவது கண்ணாடி மூலக்கூறுகள் வலிமை குன்றி பிணைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும் – பரவுகிறது. இதன் விளைவாகக் கல்லெறிபட்ட கண்ணாடிக் கதவுப் பகுதிகள் உடைந்து சிதறுகின்றன.

55. திரைப் படத்தில், இரு சக்கர வாகனங்கள் ஓடும்போது சக்கரத்தின் ஆரைக்கபிகள் (spokes) பின்னோக்கிச் சுழல்வது போல் தோன்றுவது ஏன் ?

திரைப்படம் என்பது ஒரு திரிபுத் தோற்றம் (illusion). எனவே சக்கரத்தின் ஆரைக்கம்பிகள் பின்னோக்கிச் சுழல்வதுபோல் காட்சியளிப்பதும் ஒரு திரிபுத் தோற்றமே. இவ்வாறு காட்சியளிப்பது, சக்கரம் எவ்வளவு வேகத்தில் சுழல்கிறது என்பதைப் பொறுத்தது; இத்தகைய காட்சியை சுழல் பொருள் நோக்கு விளைவு (stroboscopic effect) என்பர். சாதாரணமாக ஒரு வினாடிக்கு இருபத்திநான்கு படங்கள் என்ற அளவில் (திரைப்)படப்பிடிப்பு மேற்கொள்ளப்படுகிறது. படத்தை திரையிடுகையில், கண்களின் தொடர் பார்வையின் காரணமாக படம் நமக்குத் தொடர்ச்சியாகக் காட்சியளிக்கிறது. சக்கரத்தின் சுழற்சி ஒரு வினாடிக்கு இருபத்திநான்கு என்ற அளவில் இருந்தால் திரைப்படத்தில் சக்கரம் சுழலாமல் நிலையாக இருப்பது போல் தோற்றமளிக்கும். அவ்வாறின்றி ஒரு வினாடிக்கு இருபத்திநான்குக்குக் கூடவோ, குறைந்தோ சக்கரத்தின் சுழற்சி இருக்குமானால், சக்கரத்தின் ஆரைக்கம்பிகள் முன்னோகி அல்லது பின்னோக்கி ஓடுவது போல் தோன்றும்.

56. இறப்புக்குப் பின்னர் மனிதர்கள் விழிக்கொடை அளிப்பது போன்று குருதிக் கொடை அளிக்க இயலாதது ஏன் ?

மனித உடலிலுள்ள திசுக்களில் (tissues) இறப்பு, நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்குப் பிந்தைய இம்மாற்றங்களுக்குக் காரணம் உடல் அணுக்களில் பொதிந்துள்ள அழிவு நொதிகள் (destructive enzymes) மற்றும் நுண்ணுயிரிகள் (microbes) ஆற்றும் வினை; அடுத்த காரணம் உயிர்வாழ்வதற்கு முக்கியத் தேவைகளான உயிர்வளி மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியன நின்றுபோவது. ஆனால் இம்மாற்றங்கள் உடலின் எல்லா உறுப்புகளிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை; உறுப்புக்கு உறுப்பு இம்மாற்றங்கள் நிகழ்வதற்கான காலம் வேறுபடும். இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் குருதியில் உடனடியாக உண்டாகின்றன. சாவுக்குப்பின் இதயத்தில் குருதி ஓட்டம் நின்றுபோவதால், இறந்த உடலில் இருந்து வலிந்து குருதியை வெளிக்கொணர வேண்டும். அப்போது நுண்ணுயிரிகளின் (micro organisms) தொடர்பால் குருதி மாசடைந்து போகும். மாசடைந்த குருதியைப் பயன்படுத்த இயலாதல்லவா ? இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒருவர் உடலில் குருதிக் கொடையளித்த சில நாட்களுக்குள் மீண்டும் புதுக்குருதி ஊறிவிடும். குருதிக் கொடையளிக்கும் நல்ல உள்ளம் கொண்ட பலர் உலகில் உள்ளனர்; எனவே பிணத்தில் இருந்து அதனைப் பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அடுத்து சிறுநீரகம், இதயம், விழிகள் ஆகிய உறுப்புகளில் இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் சற்று தாமதமாக நிகழும். எனவே இறந்த உடனே அவற்றை எடுத்துத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு பதப்படுத்தி வைத்தால் வேறோர் உடலில் பொருத்திட இயலும். மேலும் உயிரோடிருக்கிற ஒருவர் கண்களைக் கொடுத்தால், அது அவருக்கு நிரந்தர இழப்பாக அமைந்துவிடும். எனவே தான் இறந்தவர் உடலில் இருந்து அதனைப் பெறுகிறோம்.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar, Mysore 570023, India குவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா

Email ragha2193van@yahoo.com தொ.பேசி: 91-0821-561863

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர