திவாலாகும் தமிழக விவசாயம்*

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கித் தங்கள் நாட்டை வளமிக்க நாடாகச் செய்திடும். ஆனால் இந்தியாவோ அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகமோ இந்த நியதியைப் புறக்கணித்து, அறிந்தோ, அறியாமலோ தமிழக விவசாயத்தை புதை குழிக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. 1960க்குப் பின்னர் ஏற்பட்ட “பசுமைப் புரட்சி”யினால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாது. இந்த “பசுமைப் புரட்சி” தமிழக விவசாயத்தில் பல்வேறு மாறுதல்களையும் கொண்டு வந்தது.

* கால்வாய் நீர்ப்பாசனப் பரப்பு, ஏரி நீர்ப்பாசனப் பரப்பு குறையத் தொடங்கியது. கிணற்றுப் பாசனப் பரப்பு அதிகரிக்கத் தொடங்கியது. 1951ல் தமிழகத்தில் 14,751 பம்ப்செட்டுகள் இருந்தன. இது 1974ல் 6,81,205 பம்ப்செட்டுக்களாக உயர்ந்து, தற்போது 20 லட்சம் பம்ப்செட்டுக்கள் உள்ளன. இதனால் நிலத்தடி நீரின் உபயோகம் பிரதானமாக்கப்பட்டது. கால்வாய்ப் பாசனம், ஏரிப்பாசனம் இவைகளின் மீது விவசாயிகள் காட்டி வந்த அக்கறை குறையத் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் சந்தைப் பொருளாகியது (Water Market). இதை தமிழகத்தில் அப்பொழுது ஏற்பட்ட அரசுகள் கவனிக்கவில்லை.

* 1962க்குப் பிறகு, தொடர்ந்து நிலங்களில் இருபோகம் அல்லது மூன்று போகம் உயர் ரக நெல் வித்துக்கள் பயிரிடப்பட்டு வந்ததால், விளைச்சலைப் பெருக்க அதிக ரசாயன உரங்கள் ரசாயன பூச்சிக்கொல்லிகள் முதலியவற்றை விவசாயிகள் பெருமளவில் பயன்படுத்தினர். இதனால் மண்ணின் தரம் குறைந்து, விவசாயிகள் இன்னும் கூடுதலான ரசாயன இடுபொருட்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

* 1973-74க்குப் பிறகு வேளாண்மை வளர்ச்சியின் சாதனை என்பது சாதாரண முறையில்தான் உள்ளது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

* நில உடமைகளிலும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 10 சதவிகித உயர்மட்டக் குடும்பங்கள் மொத்த சாகுபடி நிலங்களில் 60 சதவிகிதத்தையும், 60 சதவிகித அடிமட்டக் குடும்பங்கள் 4,40 சதவிகித நிலங்களையும் வைத்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் வெறும் ஏட்டளவிலேயே நின்று போயின. நிலச்சீர்திருத்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள கோயில்களும், மடங்களும் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்களை தங்கள் வசம் வைத்துள்ளது. தலித் மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்று கண்டறியப்பட்ட 15000 ஏக்கர் நிலங்கள் அவர்கள்வசம் ஒப்படைக்கப்படவில்லை.

குத்தகை மற்றும் வாரச்சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அரசின்மூலம் செயல்படுத்தப்படும் “பாதுகாப்புச் சட்டங்கள்” பயனளிக்கவில்லை. இவர்கள் வலுவான விவசாய இயக்கங்கள் மூலமே தங்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

* காவிரி, முல்லை பெரியாறு போன்ற நதிநீர் தாவாக்களில் போதிய கவனம் செலுத்தாமல், விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. மாநிலத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களால், ஒரு அரசு மேற்கொள்ளும் கொள்கைக்கு நேர் எதிரான கொள்கையை மற்றொரு அரசு எடுக்கிறது. அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்த ஒரு ஆரோக்கியமான பொது விவாதத்தை தொடர்ந்து உருவாக்குவதன் மூலம்தான் இந்த நதி நீர் தாவாக்களுக்கு சரியான தீர்வுகளைக் காண முடியும். விவசாயிகளின் நலன்களை மனதில் கொள்ளாமல், சுயலாபத்திற்காக அரசியல் கட்சிகளும் கருத்துக்களில் முரண்பட்டு நிற்கின்றன.

* தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளிலும் அதிர்ச்சியூட்டும் அளவில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் அந்தந்த ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவதால் விவசாயக் கிணறுகள் வறண்டுபோய்விடுகிறது. ஆற்றின் மூலம் நீரைப் பெறுகின்ற ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில், மணல் கொள்ளை மூலம் ஆற்றின் ஆழம் குறைவதால் ஏரிகள் நீரைப் பெற முடிவதில்லை. இதை வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகம் காணமுடிகிறது. வைகை மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலுள்ள 22,000 ஏக்கர் நிலங்களின் நீர்ப்பாசனம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, நீதிபதி க்ஷி.ஸி. கிருஷ்ணய்யர் தலைமையில் நடைபெற்ற பொதுவிசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அதன் உபநதிகளில் அதிக ஆழம் ஏற்படுவதால், ஆற்றின் நீரோட்ட வேகம் வெகுவாகத் தடைபடுகிறது. அரசும், அரசு அதிகாரிகளும் இந்த மணல் கொள்ளையை ஊக்குவிப்பதால், இதைத் தடுக்க சட்டங்கள் இருந்தும் செயலாக்க முடியவில்லை.

* காவிரி மற்றும் அதன் உபநதிகள், பாலாறு போன்ற நதிக்கரைகளில் அமைந்துள்ள ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேற்றும் ஆலைக்கழிவுகள், சுற்றுச் சூழலையும், நதிநீரையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன. இதன் காரணமாக விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை. சாகுபடி செய்யும் நிலங்களிலும் விளைச்சல் கடுமையாகக் குறைந்து விவசாயிகளை மேலும் வறுமையில் ஆழ்த்துகின்றன. இதனால் பாலார் நதிப்படுகையில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் கடந்த 20 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக் ஆய்வுகள் கூறுகின்றன. மக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் பலவித நோய்களும் உண்டாகின்றன. இப்பிரச்சனைகளில் அரசு எவ்வித கவனமும் செலுத்தவில்லை.

* தமிழகத்தின் பலபகுதிகளின் விவசாயிகளின் நலன்களுக்காக தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்ட “ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்” இன்று செயலிழந்து நிற்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளிடத்தில் நெல் கொள்முதல் செய்வதில் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. இந்த வருடத்தில் (2002ல்) முன்னறிவிப்பு ஏதும் இன்றி அரசால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. பல சிறு நகரங்களில் தனியார் மண்டிகள், விவசாய விளைபொருட்களை குறைந்த விலையில் வாங்கி, பெரும் லாபம் ஈட்டுகின்றன. இந்த மண்டிகள் விவசாயிகளுக்கு சாகுபடி செலவிற்கு முன் பணம் வழங்குதல் அதிக வட்டிக்கு பணம் வழங்குதல் போன்றவைகளையும் செய்து வருகின்றன.

* விவசாயிகளின் கடன் வசதிக்காக கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்ட கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு விவசாய வங்கிகள், வர்த்தக வங்கிகள் போன்றவை அளிக்கும் கடன் வசதிகள் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. ஆனால் வர்த்தக வங்கிகள் பெரும் தொழில்களுக்கு ஏராளமான கடன்களையும், சலுகைகளையும் கொடுத்து ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் தனியார் கடன் மற்றும் கந்து வட்டி முதலியவைகளைச் சார்ந்துள்ளனர். இவர்கள் வசூலிக்கும் வட்டி விகிதம் விவசாயிகளை மேலும் வறுமையில் ஆழ்த்துகிறது.

* கிராமப்புற வறுமை ஒழிப்பு, நலிந்த விவசாயிகள் துயர் துடைப்பு போன்றவைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP), தேசீய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (NREP) போன்ற பல திட்டங்கள் பெரும் தோல்வியைத் தழுவின. இதை நிபுணர் குழுவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

* மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் உலக வர்த்தக ஒப்பந்தம் இவற்றின் காரணமாக விவசாயிகளுக்கு அளித்து வந்த மானியங்கள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. வளர்ச்சியடைந்த பல நாடுகளில், விவசாய வளர்ச்சிக்காக மானியங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

* தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னமும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு, மாநில அரசுகளை இலவச மின்சாரத்தை ரத்து செய்யும்படி நிர்பந்தித்து வருகிறது. நிர்வாகக் குளறுபடிகள், பகிர்மானம் மற்றும் விநியோக இழப்புகள் இவைகளின் காரணமாக தமிழக மின்வாரியத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவைகளைக் காரணம் காட்டி மின்வாரியத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டு வருகிறது. விவசாய மின் இணைப்புக்களுக்கு மீட்டர் பொருத்தும் முறையையும் அறிமுகப்படுத்த எண்ணியுள்ளது.

* இந்தியாவிலேயே தமிழகம் “நகரமயமாதலில்” முதலிடம் வகிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் நகரங்களின் மக்கள்தொகையும், கிராமப்புற மக்கள்தொகையும் 50 : 50 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதற்கு முக்கிய காரணம் “கிராமப்புற விவசாய திட்டங்கள்” மற்றும் அதன் வளர்ச்சியைப் பற்றிய அக்கறையின்மையும், பொறுப்பற்ற தன்மையும்தான். தமிழக நகரங்களின் அசுர வளர்ச்சியின் காரணமாக நகர்ப்புற திட்ட வளர்ச்சிகள், நிதி ஒதுக்கீடு, அடிப்படை வசதிகள் போன்றவைகளை எந்த அரசாலும் செயலாக்க முடியாது. நகர்ப்புற வளர்ச்சி விரிவடைவதால் நகரை ஒட்டியுள்ள ஏராளமான விவசாய நிலங்கள் குடியிருப்புப் பகுதிகளாக மாறி வருகின்றன. விவசாயங்களும் தங்களுடைய விளைநிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு வருகிறது. நகரங்களில் தினந்தோறும் குடிசைப் பகுதிகள் தோன்றி வருகின்றன. நகரங்களில் போக்குவரத்து, அடிப்படைப் பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், மாதர் நலம் போன்றவை சீர்குலைந்து வருகின்றன.

* தற்போது தமிழக விவசாயத்தை சாதனையின் உச்சிக்குக் கொண்டு செல்லவும் தமிழக விவசாயிகளை குபேரரர்களாக ஆக்கவும் ஒரு மாபெரும் திட்டத்தை தமிழக அரசு தீட்டியுள்ளது. இத்திட்டத்தின் பின்னணியில் பெரும் அறிவு ஜீவிகள் ( ?) அங்கம் வகிக்கின்றனர். தமிழ்நாடு நீர் மேலாண்மை முகமை என்ற அமைப்பை தமிழக அரசு (தனது நிதி நிலை அறிக்கை 2001 – 2002ல் அரசாணை வி.ஜி. ழிஜீ.228, 18.9.2001 தேதியிட்டது) அமைத்து அதன்மூலம் 20 லட்சம் ஹெக்டேர் நிலங்களை (50 லட்சம் ஏக்கர் நிலங்கள்) வரும் ஐந்து ஆண்டுகளில் விளைநிலமாக்கும் திட்டம் ஒன்றை “ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்” என்று பெயரிட்டு அமைத்துள்து. இந்த நிலங்கள் தொழில், வர்த்தகக் கழகங்களுக்கு தலா 1000 ஏக்கர் (உச்ச வரம்பு) வரை 30 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்படும். 20 ஏக்கருக்குக் குறைவான நிலங்கள் “சிறிய நிறுவனங்கள்”, கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குத்தகைக்கு விடப்படும். மாநில அரசால் அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டம் தமிழக விவசாயத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

கிராமப்புற நிலங்கள் பெரும்பாலும் தொழில், வர்த்தகக் கழகங்களின் உரிமையாளர்கள் கையில் சிக்கிக்கொள்ளலாம்.

* அவர்கள் கையகப்படுத்தும் நிலப்பரப்புக்களில் பாசனவசதிக்காக அமைக்கப்போகும் ஏராளமான பெரும் ஆழ்குழாய்க் கிணறுகள், அந்தப் பகுதிகளையும், அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களிலும் முற்றிலும் நிலத்தடி நீரைவற்றச்செய்து விவசாயிகளை திக்கற்றவர்களாக்கி வரும்.

* அரசின் தொலைநோக்கு சிந்தனையற்ற திட்டங்களாலும் சமூக வளத்தின்பால் அக்கறையற்ற நிலையாலும், தமிழக கிராமப்புற விவசாய வளர்ச்சி என்பது தேய்ந்து போனது. மேலும் இந்த “ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தின் மூலம் விவசாயிகளின் மீது ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்து, வர்த்தகக் கழகங்கள், கம்பெனிகள் என்ற பெயரில் ஊடுருவும் பணமுதலைகளிடம் கிராமப்புற நிலங்களைத் தாரைவார்த்து, தமிழக விவசாயத்தை திவாலாக்குதற்கு தயாராகி வருகிறது தமிழக அரசு. விவசாயக் கூலிவேலை செய்து அதன் மூலம் தங்கள் வாழக்கையை நடத்தி வரும் சுமார் 20 லட்சம் விவசாயக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் இதன் மூலம் நிலைகுலையச் செய்கிறது.

இதை முறியடிக்க தமிழக விவசாயிகள், தமிழக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதிலும் பெரும் போராட்டத்தைத் துவங்கினால்தான் அரசின் இந்தத் திட்டத்தை முறியடிக்க முடியும். இல்லையெனில் தமிழக கிராமப் புறங்கள் அனைத்தும், “புதிய ஜமீன்தார்களின்” கையில் வந்துவிடும்.

***

* உழவன் உரிமை, ஆகஸ்ட் 2002

***

jothi_mids@yahoo.co.uk

Series Navigation