வியாழன் பூதக்கோள் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

சி. ஜெயபாரதன், கனடா


சூரிய குடும்பத்தில் சுடர்வீசும் பூதக்கோள் வியாழன்

கி.பி.1610 ஆண்டில் முதன் முதல் வியாழக் கோளையும், அதன் நான்கு சந்திரன்களையும் தொலை நோக்கியில் கண்டவர், இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ. கிரேக்க ரோமானிய இதிகாசங்களில் ஜூபிடரைப் [Jupiter] பிரதமக் கடவுளாய்க் [Chief God of Roman Mythology] காட்டப் பட்டுள்ளது. இந்துப் புராணங்களில் போற்றப்படும் சிவ பெருமானுக்கு இணையான கடவுள் ஜூபிடர். பிரம்மாண்டமான மூல விண்மீன் [Star], சூரியன் வயிற்றிலிருந்து பிறந்த அண்ட கோளங்கள் அனைத்திலும் மிகப் பெரிய பூதக் கோளம், வியாழன் [Giant Jupiter]. 300 ஆண்டுகளுக்கு மேல் வியாழக் கோளில் தொலை நோக்கி மூலம் காணப்படும் சிறப்பு மிக்க ‘பெருஞ் செந்திலகம் ‘ [Great Red Spot] இன்னும் வியாழ மண்டலத்தில் தென்படுகிறது.

1950-1960 ஆண்டுகளுக்கு இடையே, கதிரலை வானியல் துறைஞர் [Radio Astronomers] வியாழக்கோள் பல்வித அதிர்வுகளில் [Frequencies] சக்தி வாய்ந்த கதிரலைகள் [Radio Waves] எழுப்புவதைக் கண்டு வியப்படைந்தார்கள்! அப்படி யென்றால், வியாழன் பூமியைப் போல், ஆனால் வலிமை மிக்க, காந்தக் களத்தைப் பெற்றிருக்க வேண்டும். வியாழக் கோளின் மேல்மட்டச் சூழகம் [Upper Atmosphere] பூமியை விட 10 மடங்கு காந்த சக்தி கொண்டிருக்கிறது! சூரியன் வெளியேற்றும் புரோட்டான் [Protons] போன்ற மின்கொடைப் பரமாணுக்கள் [Charged Particles], துருவ காந்தக் களத்தில் இரண்டறக் கலக்கும் போது, வியாழனில் கதிரலை ஒலியும் [Radio Noise], விண்ணிற ஒளித்திரையும் [Aurora] உண்டாகிறது. பூமியில் இதுபோல் சில சமயம் வட துருவத்தில் ‘வடதிசை ஒளித்திரை ‘ [Northern Lights] பல நிறங்களில் தெரிகிறதல்லவா ?

கூர்மையான வெறும் கண்கள் மூலமாகவே வியாழனையும், அதன் நகர்ச்சியையும் விண்வெளியில் காண முடிந்தாலும், விளக்கமாகத் தெரிந்து கொள்ள தொலை நோக்கிக் கருவி மிகவும் தேவைப் படுகிறது. நவீன தொலை நோக்கியில் பார்த்தால், பிரெளன், நீல நிறப் பட்டைகள் தீட்டிய, சப்பையான பொரி உருண்டை போல் காட்சி அளிக்கிறது, வியாழன்.

வியாழக் கோளின் பொது விஞ்ஞான விபரங்கள்

சூரிய மண்டலத்தின் அகக்கோள்களான [Inner Planets] புதன், சுக்கிரன், பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் [Rocky Planets] போன்றில்லாது, புறக்கோள்களில் [Outer Planets] ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம்! சூடான பாறையும், திரவ உலோகம் [Liquid Metal] சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான [Solid] திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, பூத வடிவான வியாழன் 9:50 மணி நேரத்தில் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.

வியாழக்கோள் ஐந்தாவது சுழல்வீதியில் [Solar Orbit] சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு [Earth Years] ஒருமுறைச் சுற்றி வருகிறது. சூரிய வெளிச்சத்தை எதிர்ஒளிக்கும் திறமையில், சந்திரன், வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடிதான் வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும், வியாழன் பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் பளு [Mass] பூமியைப் போல் சுமார் 318 மடங்கு மிகையானது. புவி ஈர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன்.

பூதக்கோளின் மத்திம ரேகை விட்டம் [Equatorial Diameter] சுமார் 88,700 மைல்! சப்பையான துருவ விட்டம் [Polar Diameter] சுமார் 83,000 மைல்! வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் [9 மணி 50 நிமிடம்] தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்றும் சுழற்சியால்தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் சப்பிப் போயின! சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவைப் பூதக்கோள் வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, குட்டித் துணைக் கோள்கள் [Asteroids], வால் விண்மீன்கள் [Comets] போன்ற அற்ப அண்டங்களைத், தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமை யாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

வியாழனை நோக்கி அமெரிக்கா ஏவிய விண்வெளிக் கப்பல்கள்

நாசா [NASA] விண்வெளிக் கப்பல்களை ஏவி சூரியனின் அகக்கோள்களான நிலவு, புதன், செவ்வாய், வெள்ளி ஆகிய அண்டைக் கோள்களை ஆராய்ந்து வந்த அதே சமயத்தில், புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய தூரக் கிரகங்களுக்கும் எளிதான ஆய்வுச்சிமிழ்களை அனுப்பி விஞ்ஞான விபரங்களைச் சேகரித்து வந்தது. அகக்கோள்களில் விண்சிமிழ்களை அனுப்பிப் போட்டியிட்ட ரஷ்யா புறக்கோள்கள் ஆராய்ச்சியில் எந்த விதப் பங்கும் எடுத்துக் கொள்ளவில்லை!

பயனீயர்-10 விண்வெளிக் கப்பல் 1972 மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்டு, வியாழனை 1973 டிசம்பர் 3 ஆம் தேதி 81,000 மைல் நெருங்கிப் படமெடுத்து, விஞ்ஞானத் தகவல்களையும் பூமிக்கு அனுப்பியது. வெகு தொலைவில் பயணம் செய்யும் ஆய்வுச்சிமிழ் அனுப்பும் ஒளிவேகச் [வினாடிக்கு 186,000 மைல்] செய்திகள் கூட, பூமிக்கு வந்து சேர 46 நிமிடங்கள் எடுத்தன! வியாழனின் கதிர்வீச்சுக் கூண்டில் [Radiation Zones] மின்கொடைப் பரமாணுக்கள் [Charged Particles] மனிதனைக் கொல்லும் அளவை விட 1000 மடங்கு தீவிரமாய் இருந்தன! ஒரு வினாடிக்குள் 150 மில்லியன் எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வீரிய புரோட்டான்களின் [Protons] வெள்ளம், விண்வெளிக் கப்பல் மேனியின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பையும் உடனே தாக்கி நொறுக்கி விடலாம்! படு பயங்கர மின்கொடைத் துகள்கள் நடமாடும், கடும் காந்தக் கோளமாய், ஆய்வுச்சிமிழ் வியாழனைக் கண்டு பிடித்தது, ஒரு மாபெரும் விஞ்ஞானச் சாதனை!

1973 ஏப்ரல் 5 ஆம் தேதி ஏவப்பட்ட பயனீயர்-11 வியாழனை, 1974 டிசம்பர் 2 ஆம் தேதி 26,600 மைல் துருவத்தின் அருகே, கதிர்வீச்சு மண்டலத்தில் மாட்டிக் கொள்ளாதவாறு திட்டமிட்டபடி விரைவாகக் கடந்தது. எளிதாய் அமைக்கப்பட்ட இரண்டு பயனீயர் ஆய்வுச்சிமிழ்களும் வியாழனின் ஈர்ப்பு விசை, காந்த சக்தி, மேல்தளச் சூழகம் ஆகியவற்றை ஆராய்ந்து பூமிக்குத் தகவல் அனுப்பின.

1977 இல் நாசா ஏவிய யாத்திரைக் கப்பல்கள் வாயேஜர்-1,-2 [Voyager-1,-2] 1979 இல் வியாழக்கோள் அருகே பறந்து சென்றன. 1980 இல் வாயேஜர்-1 சனிக்கோள் அண்டையில் பறந்தது. 1979 இல் வாயேஜர்-2 வியாழனை ஆராய்ந்த பின்பு, 1981 இல் சனிக்கோளைக் கடந்து, 1986 இல் யுரேனஸைத் [Uranus] தாண்டி, இறுதியாக நெப்டியூன் [Neptune] கோளை 1989 இல் படமெடுத்து, அதற்கும் அப்பால் பயணம் செய்தது!

1989 மே 4 ஆம் தேதி ஏவப்பட்ட காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship] வியாழக் கோளை 1995 டிசம்பர் 7 ஆம் தேதி மிகவும் நெருங்கி அதன் சுழல்வீதியில் [Jupiter ‘s Orbit] சுற்றி, முதன் முதல் ஓர் ஆய்வுச்சிமிழை [Probe] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளிச் சரித்திர முதன்மை பெற்றது. அது வியாழக் கோளின் திரண்ட மேக மண்டலத்தைக் கடந்து சென்று, பல நெருக்கப் படங்களை எடுத்தது. சூழ் மண்டலத்தின் புது விஞ்ஞானத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி, இறுதியில் தரையை நெருங்கும் போது, பயங்கரச் சூழக அழுத்தத்தில் [சுமார் 150 psi] தொலையனுப்பி [Transmitter] நசுங்கித் தொடர்பு அறுந்து போனது. ஆனால் வியாழச் சுழல்வீதியில் ஒழுங்காய்ச் சுற்றிவரும் காலிலியோ கப்பல் 1997 இறுதி மாதங்கள் வரை பூதக்கோளைப் பற்றியும், அதன் பெரிய சந்திரன்களைப் பற்றியும் தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தது!

1990 இல் நாசா பூமியின் சுழல்வீதியில் [Earth ‘s Orbit] சுற்றும் விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] மீதிருந்து யுலிஸிஸ் [Ulysses] விண்வெளிக் கப்பலை ஏவி, சூரியனின் துருவத்தை ஆராய முற்பட்டது. யுலிஸிஸ் விண்வெளிக் கப்பல் வியாழக்கோள் ஈர்ப்புத் தளத்தைக் கவண் மையம் [Gravitational Slingshot] ஆகக் கொண்டு, சூரியச் சுழல்வீதியில் [Solar Orbit] சுற்ற முயன்றது. அந்தப் பணியைச் செய்து கொண்டே, சுழல்வீதியில் யுலிஸிஸ் ஆய்வுச்சிமிழ், வியாழனை இருமுறைக் [1992, அடுத்து 1998] கடந்து அதன் காந்த விசையைக் கணித்துப் பூமிக்கு அனுப்பியது.

வியாழக் கோளத்தின் உள்ளமைப்பும், கலப்புறுப்புகளும்

பூதக்கோள் வியாழன் பூமியைப் போல் சுமார் 11 மடங்கு விட்டமும், 1300 மடங்கு கொள்ளளவும் [Volume] கொண்டது. அதன் பளு [Mass] பூமியைப் போல் 318 மடங்கு! ஆனால் வியாழக் கோளின் திணிவு [Density] 1.33 gm/cc, பூமியின் திணிவில் [5.52 gm/cc] சுமார் நான்கில் ஒரு பங்கு. வியாழக் கோளின் பெரும் பகுதி, ஹைடிரஜன், ஹீலியம் போன்ற எளிய மூலக [Light Elements] வாயுக்கள் மண்டியுள்ளதே இதற்குக் காரணம். வாயுக் கோளான வியாழன் வெகு விரைவாகத் தனது அச்சில் சுழல்வதால், துருவ முனைகளில் சப்பி உருண்டை 7% தட்டையாகிப் போனது!

காலிலியோ ஆய்வுச்சிமிழ் வியாழச் சூழ்நிலையில் உலவும் சூறாவளிக் காற்றின் வேகத்தை அளந்து, நீர் மூலக்கூறுகள் [Water Molecules] இல்லாமையை எடுத்துக் காட்டியது! ஒவ்வொரு ஹீலிய அணுவிலும் 13 ஹைடிரஜன் அணுக்கள் [Atoms] இல்லாது, 6.4 ஹைடிரஜன் மூலக்கூறுகள் [Hydrogen Molecules] உள்ளதைக் காட்டி, சூரிய வாயுப் பண்டங்கள் உருவாக்கிய ஒரு கோள், வியாழன் என்னும் விஞ்ஞான நியதியை மெய்ப்பித்துக் காட்டியது.

விஞ்ஞானிகள் துணைக் கோள்களின் வேகத்தைக் கணித்த பிறகு, அவற்றைக் கவரும் வியாழனின் ஈர்ப்பு விசையைக் கணக்கிட்டு, வியாழக் கோளின் பளுவையும் நிர்ணயம் செய்தார்கள். வியாழனை நெருங்கிப் பயணம் செய்த விண்வெளிக் கப்பல்கள் அதன் ஈர்ப்புத் திறனையும், மண்டல உள்ளமைப்பை அனுமானிக்கவும் உதவின. வியாழச் சூழகத்தில் அங்கிங்கு எனாதபடி, எங்கும் பெரும்பான்மை வாயு மண்டலமே! ஹைடிரஜன், ஹீலியம், கார்பன் மனாக்ஸைடு [CO], ஹைடிரஜன் ஸல்ஃபைடு [H2S], ஹைடிரஜன் ஸயனைடு [HCN], மீதேன் [Methane], ஈதேன் [Ethane], அம்மோனியா, நீர், நீர்ப்பனி, அஸடிலீன் [Acetylene], ஃபாஸ்ஃபீன் [Phosphine] போன்றவை வியாழ மண்டலத்தில் தென்பட்டன.

வாயு மண்டலப் புறத்தோல் [Outer Layer] 600 மைல் உயரம் உள்ளது. அதற்குக் கீழே இருக்கும் அடுக்கில் அழுத்தமும், வெப்பமும் மிகுந்திருப்பதால், ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள் திரவ [Liquid Gases] மாகி, அடுத்து உட்கருவில் 3 மில்லியன் பூவழுத்தத்தில் [Earth Atmosphere, 45 மில்லியன் psi] வாயு உலோகமாய் [Metallic Hydrogen] பாறைபோல் இறுகிப் போனது! அக்கரு உருண்டை திரவ உலோகம் [Liquid Metal] போல் இயங்கி, ஹைடிரஜன் அணுக்கள் மின்னியல்பு [Inonized] பெற்று, நேர்க்கொடைப் புரோட்டான்களாகவும் [Positively Charged Protons], எதிர்க்கொடை எலக்டிரான்களாகவும் [Negatively Charged Electrons] பிரிந்து மின்கடத்தி [Electrical Conductor] ஆக மாறுகிறது. வியாழக்கோள் மாபெரும் காந்த மண்டலமாக இருப்பதற்கு இதுவே காரணம்!

சூரியன்போல் வாயுக் கோளமான வியாழனின் உட்கருவில் போதிய உஷ்ணமும், அழுத்தமும் இல்லாததால், அணுப்பிணைவு இயக்கம் [Nuclear Fusion Reaction] தொடர முடியாமல் போனது. அதனால் வியாழன் ஓர் விண்மீனாக [Star] மாற இயலாமல், சூரியனுக்கு வெறும் துணைக் கோளாகச் சுற்றி வருகிறது. வியாழன் சூரியனைப் போல் ஓர் விண்மீனாக மாற வேண்டுமானால், அதன் தற்போதைய பளுவைப் போல் 80 மடங்கு வாயுப் பண்டம் தேவைப் படுகிறது!

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளியை விட 5 மடங்கு தூரத்தில் வியாழன் இருப்பதால், அதன் மீது படும் சூரிய சக்திப் பூமியின் மேல் விழும் சக்தியில் 4% அளவுதான் என்று கணிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு எதிர்கொள்ளும் சூரிய சக்தியை விட 1.67 மடங்கு அதிக சக்தியை, வியாழக்கோள் விண்வெளி நோக்கி அனுப்புகிறது. இந்த மிஞ்சிய சக்தி, 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வியாழக் கோளின் கருப் பண்டங்கள், அதன் அபரிமித ஈர்ப்புச் சுருக்கத்தால் [Gravitational Compression] இறுகி வெளியாக்கிய வெப்ப சக்தியின் சுரங்கமான உட்கருவில் இருந்து தொடர்ந்து எழுகிறது.

பூதக்கோளில் அடிக்கும் புயல் காற்று! கொந்தளிக்கும் செந்திலகம்!

வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்று, மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள்,

சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!

மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடார் திடாரென வீசி அடிக்கின்றன! சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன! வியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல் 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப் பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை. முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.

வியாழனின் வளையங்களும், சுற்றி வரும் பதினாறு சந்திரன்களும்

1980 இல் விண்வெளி யாத்திரை செய்த வாயேஜர்-1 ஆய்வுச்சிமிழ் [Voyager-1 Space Probe] வியாழனில் கண்டு பிடித்தது, இதுவரை அறியாத ஓர் மகத்தான விஞ்ஞானச் சாதனை! சனிக்கோளின் இடையில் அணிந்திருக்கும் ஒளிமிகு வளையங்களைப் போன்று, வியாழனுக்கும் தனிப்பட்ட சில நலிந்த ஆனால் பிரம்மாண்டமான வளையங்கள் இருப்பதைப் படமெடுத்து அனுப்பியது. 1974 இல் சென்ற பயனீயர்-11 விண்வெளிக் கப்பல் வளையத்தின் ஊடே புகுந்து பயணம் செய்தாலும், நல்ல வேளை, அது உடையாமல் தப்பியது!

சனி, வியாழன், யுரானஸ் [Uranus] போன்ற பூத வடிவக் கோள்கள் யாவும், விண்ணளாவிய மாபெரும் வளையங்களை, மத்திம ரேகை மட்டத்தில் [Equtorial Plane] அணிந்துள்ளன. 4040 மைல் அகண்ட வியாழ வளையத்தின் தடிப்பு சுமார் அரை மைல்! 88700 மைல் விட்டமுள்ள வியாழ வளையத்தின் வெளிமுனை 35,000 மைல் தூரத்தில் உள்ளது! வளையத்திற்கு உள் எல்லை எதுவும் இல்லாது, சுழலும் துணுக்குகள் வியாழக் கோளோடு ஒன்றாய்க் கலந்து விடுகின்றன. உடைந்து போன துணைக் கோள்களின் பாறைகள், தூசிகள், பனிக்கற்கள் போன்றவை வளையத் தளத்தில் வியாழனைச் சுற்றி வரலாம் என்று கருதப் படுகிறது.

பூதக்கோள் வியாழனை 16 சந்திரன்கள் சுற்றி வருகின்றன. 1610 இல் காலிலியோ முதன் முதலில் வியாழனைப் பார்த்த போது, 4 பெரிய சந்திரன்களைக் கண்டு பிடித்தார். முதல் தொலை நோக்கிக் கருவி அமைக்கப்பட்ட போது, ஜெர்மன் விஞ்ஞானி ஸைமன் மாரியஸ் [Simon Marius] தனியாகக் கண்டு அவற்றை நிரூபித்துக் காட்டினார். நான்கு சந்திரன்களும் முதலில் கண்டு பிடித்தவர் நினைவாகக், காலிலியோ துணைக்கோள்கள் [Galilean Satellites] என அழைக்கப் படுகின்றன. அவை நான்கும் விண்வெளியில் மின்னுவதால் கூரிய கண்பார்வை உடையவர் எவரும் கண்டு விடலாம்! பெரிய சந்திரன்கள் நான்கின் பெயர்கள்: கானிமெடே [Ganymede], காலிஸ்டோ [Callisto], அயோ [Io], யூரோப்பா [Europa]. பெரிய சந்திரன்களுக்குப் பெயரிட்டவர், ஸைமன் மாரியஸ். 3165 மைல் விட்டம் உடைய கானிமெடே எல்லா வற்றுக்கும் பெரிய சந்திரன். சுமார் 642,000 மைல் தூரத்தில் வியாழனைச் சுற்றி வருகிறது. மற்ற 12 சந்திரன்களில் மிகவும் சிறுத்தது 10 மைல் அளவு, பெருத்தது 170 மைல் அளவு.

விண்வெளித் தொலை நோக்கி ஹப்பிள் கண்ட வியாழக்கோள் விபத்து!

1994 இல் வால் நட்சத்திரம் சூமேக்கர்-லெவி [Comet Shoemaker-Levy 9] வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கிச் சிதறிப் போனதைப், பூமியின் சுழல்வீதியில் [Earth ‘s Orbit] சுற்றும் ஹப்பிள் தொலை நோக்கிப் [Hubble Space Telescope] படமெடுத்து அனுப்பியது! சிதறித் தெறித்த துணுக்குகள் நிமிடத்திற்கு 220 மைல் வேகத்தில் வியாழ மண்டலத்தில் மோதி, மின்னல் போல் ஒளிவீசி அடுத்து மாபெரும் வெடிப்புகள் நேர்ந்து, 1800 மைல் தூரம் புகை மண்டலம் கிளம்பியதைப் பூகோளத் தொலை நோக்கிகளும் அதே சமயத்தில் பதிவு செய்துள்ளன!

வியாழக்கோள் ஆராய்ச்சி பற்றி எதிர்காலத் திட்டங்கள்.

அண்டவெளி விஞ்ஞானிகள், உயிரியல் துறைஞர்கள் [Exobiologiists] வியாழக் கோளின் பிறப்பு, சூரிய குடும்பத்தின் ஆரம்பத் தோற்றம், உயிரினங்களின் முதற் படைப்பு இவற்றைப் பற்றி ஆராய, நீண்ட காலம் பணி புரியும் ஆய்வுச்சிமிழை வியாழக்கோள் நோக்கி ஏவத் திட்டமிட்டுள்ளார்கள். அது வியாழனின் தளப் பண்ட மாதிரிகளைச் சோதனை செய்யும். சூழக வாயுக்களை இரசாயன ஆய்வுகள் புரியும். காந்தக் கூண்டின் தள அமைப்பை வரையும். பூமியைப் போல் பத்து மடங்கு வாயு அழுத்தம் கொண்ட வியாழன் பூதக்கோளில் நீடித்துப் பணி புரியும், ஆய்வுக் கருவிகளைப் படைப்பதுதான் அடுத்த மாபெரும் பொறியியல் சாதனையாக இருக்கும்!

******

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா