ரசிகன் கவிதைகள்

This entry is part of 40 in the series 20110206_Issue

ரசிகன்


என் கடவுள் என்பது…

எழுத படிக்க தெரியாத
ஒரு வாய்பேச முடியாதவனின்
காதல் கவிதை…

பொய் பேசாத
அன்பை ஊட்டும் தாயின்
ஒரு கை நிலாச்சோறு…

பேச ஆரம்பிக்காத
செல்லம் கொஞ்ச துடிக்கும்
ஒரு குழந்தையின்
எச்சில் முத்தம்….

என் கடவுள் என்பது
உங்களின் கேள்விக்குறி
எந்தன் காற்புள்ளி!

—-

தாழப்பறக்கும் விமானம்!

ஒரு
கை அகல இடைவெளியில்
கடல் கடந்து போகிறது…

தடுப்புக்கம்பிகளின்
எல்லை கோடுகள் வழி…
என்ன சொல்வதென தெரியாது
படர்கிறது கைவிரல்கள்
மௌனங்களை பிடித்தபடி…..

என் பக்கத்தில் இருப்பவன்
தன் குழந்தைக்கு
கொடுத்த முத்தத்தில்…
எச்சில் ஈரம் கொஞ்சமும் இல்லை…
அவன் கண்ணீரை துடைத்ததும்
ஊற்றெடுக்க முயலும் என் கண்கள்…

விமான எஞ்சின் புறப்பாட்டில்…
தாரை தாரையாய்
கண்ணீர்விடும்
என் அம்மாவும் சரி
என் அப்பாவும் சரி

பல கடல் கடந்த அன்பை
ஒரு முத்தம் கொடுத்து வந்திருக்கலாமென
எனை எழுப்பி சொல்லி…

தாழப் பறக்கிறது விமானம்!

– —–

Series Navigation