வாண்டு பருவமும் வயதான கிழவியும்

This entry is part of 40 in the series 20110206_Issue

கொ.மா.கோ.இளங்கோ


‘சொர்க்கு
தவளை நீச்சல்
பேக் சார்ட்
பூசணிக்காய்
பல்டி
சப்பை கட்டு
முங்குளி பாம்பு ‘
கண்மாய் மூழ்கி குளித்ததில்
பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள்
மூன்று மணி நேர குளியல்
உள்ளம் உலகம் உலவி வரும்
உற்சாகம் குளத்தின் தரை தொடும்
என்னோடு சேர்த்து
நான்கு வாண்டுகள்

‘ஊளை’ சந்திரன்
‘சீழ்’ முருகேசன்
‘இங்கு மண்டை’
‘சுண்டெலி’ பாபு
வகுப்பறை அணிவித்த
தேன் தமிழ் பட்டங்கள்

வாரமிருமுறை
பாடசாலைக்கு முழுக்கு
கண்மாய்க்கரை ‘மஞ்சனத்தி மரம்’
‘பைகட்டுகளின்’ சேமிப்பு கிடங்கு
புத்தகமும் பரீட்சையும் புளிக்கும்
மதிப்பெண் அட்டை கிடைக்கப்பெறும்
முந்தைய நாட்களில்
‘ஊமத்தம் பூ’ பலன் சொல்லும்
சத்தம் எழுப்பி பூ உடையின்
தமிழ் தேர்வில் பாஸ்

ஊர் மேய்ந்த பொழுதுகள்
வீண் வம்பிழுத்த வாதங்கள்
கணக்கிலில்லை
குண்டு சோடா கோலியாட்டம்
குதூகல கொண்டாட்டம்
‘ஏத்தி பித்தி ‘
‘வை ராஜா வை ‘
‘ தட்டு தாம்பூலம் ‘
‘கள்ளம் போலீஸ்’
‘ பிலிம் கட்டு சேர்க்கை’
வீரமேரிய விளையாட்டுகள்
தினந்தோறும்
தோற்ற நினைவு தான்

காது இழுத்து பிடுங்கும்
பிச்சையம்மாள் டீச்சர்
மேசைமேல் முட்டியிட வைக்கும்
மார்த்தாண்டம் வாத்தியார்

சின்ன வயசு கூத்து
செயல் பிழைகள்
சிங்காரப்பருவம்
மீண்டு வருவதற்கில்லை
முண்டியடித்து புகுந்து
முரண்டு செய்து
தட்டில் நிரப்பிக்கொள்ளும்
மதிய சத்துணவு
‘கம்மங்கதிரு மிட்டாய்’ விற்கும்
கிழவியுடன் பகிர்ந்துன்பேன்
அவள் பிசையும் உருளைகள்
மிட்டாயை மிஞ்சி இனிக்கும்

அதன் பின்
கிழவியை யாரும்
பள்ளிக்கூடம் பக்கம்
பார்த்ததே இல்லையாம் …

Kelango_rahul@yahoo.com

Series Navigation