This entry is in the series 20110117_Issue

கொ.மா.கோ.இளங்கோ



•
தலையணை
நிரம்பிய உறக்கம்
நித்திரையின் உள்ளீட்டில்
உற்புகுந்து
வேரற்று விருட்சமென
கற்பனை பரப்பி
நிமிடங்களின் நீளம் வளர்த்து
கருகி மடியும்
கனவுகள்
•
இதயம் எத்தனித்த அம்புகள்
அங்கிங்கெலாம் அலைந்து
ஆரண்யம் அடங்கும்
அரக்கன் அலங்கரிப்பான்
மகிழம்பூ மார்சேரும்
கோலமிடுபவள்
கைக்குட்டை காதல் வரைவாள்
விமான பணிப்பெண்
விகடம் கேட்ப்பாள்
மான்கள் பசுவாகும்
மாவடு சுவையில்
பலாச்சுளை வாசனை யனைத்தும்
கனவு கொண்ட காண்டங்கள்
என்னுள் … இல்லை இவைகள்
இதய சாகுபடி
தமிழ் கனவு!
கவிதை பித்தம்!
•
ஆறாம் வகுப்பு…
புத்தகப்பையில் தமிழ் பாட நூல்
தலைகீழாய் தூங்கும்
வெள்ளை காகிதத்தில்
வினாக்கள் மட்டுமே எழுதிய நாட்கள்
சோனையாண்டி வாத்தி கைகளில்
காயமானது கன்னம்
தத்தளித்திருந்த தமிழ்
தடுமாறி கரை சேரும்
எழுபதுகளின் பிள்ளைத்தமிழ்
அசை கற்று மரபின் பல்லக்கேறும்
•
இந்நாள்…
கவிதை எழுதாது
கனவில்லை
தலையணை நிரம்பி தமிழ்
ஈரடி சீரில் மூச்சு
இதய அசைவு எதுகை
மூளை தூண்டும் மோனை
விரல் சுண்டிய விருத்தம்
இருளுக்கு பயந்து
என் படுக்கையறை பதுங்கும்
எழுத்துக்கள்
இவை யாதும் இன்றி
எமக்கில்லை கனவு
•
கனவுகளின் பங்களிப்பில்
கவிதை முளைவிடின்
இன்னும் எழா .. எழுதா …
கவிதைகள்
காற்று வெளி
திரை சீலை
புங்கை மரம்
பால் வீதி
பேனா முனை யெங்கும்
வியாபித்திருக்கும்
கருவெட்டா
அணுக்களாய்…

Kelango_rahul@yahoo.com

Series Navigation