யாருக்கும் தெரியாது

This entry is part of 26 in the series 20100620_Issue

கு முனியசாமி


————————-

மகளுக்கு பெயர்
சூட்டும் விழா..

அம்மா சொன்னார்
மீனாட்சி என்று

அப்பா சொன்னார்
மாரியம்மாள் என்று

மனைவியின் ஆசை
மங்கயர்க் கரசி

மாமியாரின் ஆசை
மணிமேகலை

மாமனாரின் ஆசை
மகாலட்சுமி…

எல்லாரும் அவரவர்
அம்மா பெயர்களைச்
சொன்னார்கள்…

நமக்குள் ஒரு ஆசை
எப்படி சொல்வது
சுற்றி வளைத்து இறுதியில்
‘அ’ வில் தொடங்க வேண்டும்
அழகாய் சிரிதாய்
என்று பொதுவாய் சொன்னேன்..

அதுவே சரியென்று
அஞ்சலி,
அலமேலு,
ஆனந்தி,
ஆண்டாள் என்று
பலபெயர்கள் விவாதித்து
இறுதியில்
அமுதா என்று வைக்கப் பட்டது…

அமுதா என்பது
மனதுக்குள் நினைத்து
சொல்லாமலே
தொலைந்து போன
எட்டாம் வகுப்புத்
தோழியின் பெயர் என்பது
யாருக்கும் தெரியாது…
—————————-

gmunis@rediffmail.com

Series Navigation