மழைகள்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

சேரல்


வெளியில் நனையும் மழை
——————-
மழை வந்துவிட்டது
போலிருக்கும் பொழுதின்
முந்தைய கணங்களில்
வீடு சேரும்
முனைப்பிலிருக்கிறேன்

மழை,
மழை கோட்,
ரோஜா வர்ணக்குடை,
மழைக்கதை பேசும் தோழி,
எப்போதோ மறந்துவிட்டு
நனைந்துபோன
கொடியுலர்த்திய ஆடைகள்,
என்பதாக வியாபிக்கிறது
மழை,
நினைவெங்கும்

முதல் துளி,
தலையோ,
தரையோ தொடுமுன்
பத்திரப்படுத்துகிறேன்
கூரைச்சுவற்றின் கீழ்
என்னை

வெளியில்
தன்னையே நனைத்துக்கொண்டிருக்கும்
மழை குறித்துச்
சிந்தனையில்லை

இனி நான்
நிம்மதியாகத்
தேநீர் அருந்தலாம்

———————————

ஞானம்
——
ஈரமேறிப்போன
மார்கழியிரவொன்றில்
வெதுவெதுப்புக்காகத்
தேர்ந்திருக்கலாம்
மாடிப்படிகளை

எதிர்பாராத
என் வருகையில்
வெடுக்கென்று பிடுங்கிய
தூக்கத்தின் மிச்சத்தைத்
தூக்கிச்செல்கிறதொரு நாய்
மருட்சியுடன்

இருளைத் துளைத்து
நிகழ்ந்திருக்க வேண்டாம்
இப்பின்னிரவிலென் வருகை

———————————-

இன்னொரு மழை
————
நனைவேனென்று
அடம்பிடிக்கும்
குழந்தையின்
முகம் நனைக்கவே
அவ்வப்போது பெய்துவிடுகிறது
செல்லமழை
மேகத்திடமிருந்தோ
தாயிடமிருந்தோ

Series Navigation

சேரல்

சேரல்