மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

பொலிகையூர் சு.க சிந்துதாசன்


அலை தழுவிப் போன கரைகளெங்கும்
நிரையாய் நண்டுகள்
நடக்கத் தொடங்கியதால்
கீறல்களால் கரை நிரம்பிற்று

கீறல்களை அழிக்க
அலைக்கரங்கள் முயலவில்லை
கரைகள் பற்றிய
கவலையெதுவுமின்றி
கடலேனோ கடுமமைதி கொண்டிற்று

அலைகளின் ஸ்பரிசங்களை
ஏற்றுப் பழக்கப்பட்ட கரைக்கு
நண்டுகளின் கீறல்கள்
வலியை
ஏற்படுத்தியிருக்கக் கூடும்
வலிகளில் இருந்து
மீள்வதற்கான தவமொன்றைத்
தொடங்கிய கரை
அலைகளைச் சபிக்கவும்
தவறவில்லை

காற்றும் ஏனோ
விசும்பல்களுடனும் முனகல்களுடனும்
அடங்கிற்று.

மீட்பாரற்ற கரை
மீளமீள வலி சுமக்கையில்
நடந்த நண்டுகள்
நர்த்தனமாடவும் தொடங்கினால்….?

Series Navigation

பொலிகையூர் சு.க சிந்துதாசன்

பொலிகையூர் சு.க சிந்துதாசன்