என் தந்தை ஜெயந்தன்

This entry is part of 32 in the series 20100220_Issue

கி. சீராளன்.எல்லோரையும் போல்
காணாமல் போனாய்
எந்தையே
எல்லோரைப் போலவும்
உனக்கும் மரணம்
உனக்கும் கொள்ளி வைத்து
கருமாதி செய்து
எல்லோரைப் போலவும் … … …

எல்லோரைப் போலவும்
வாழ்ந்ததில்லையே நீ!
எந்த நிமிடமும் ஓய்ந்ததில்லையே
உன் ஞானத்திற்குத்தான்
எத்தனை காற் சக்கரங்கள்!
உமது சிந்தனை ஓட்டம்
தொடாத எல்லைகள் இல்லை
உன்னை சுற்றி சூடு பரப்பும்
அறிவுச் சுடரில்
குளிர் காய்ந்தோர் ஆயிரம்
கிழடு தொடங்கி
குழந்தை வரை
அனைவருக்கும் நண்பனாய்
ஆசிரியனாய்
தோழனாய்
தந்தையாய்
மகிழ்ச்சி சூழ
வாழ்ந்திருந்தாய்.
உன் ஞானக் கடலின்
எல்லைகள் தாண்டி
காலன் வந்ததெங்ஙனம்?
எல்லோரைப் போலவும்
சாம்பலாய் பறந்து
காவிரியில் கரைந்தாய்.
ஆனால் உனது சுடர்,
அது தீ பற்றிக் கொள்ளும்
ஆள் மாற்றி ஆள்
இடம் மாற்றி இடம்
காலம் மாற்றி காலம்
அது பரவும்
அது உன் பேர் சொல்லும் …. …
என்று எனைநான்
தேற்றிக் கொள்வேன்.

கி. சீராளன்.

Series Navigation