இன்னுமொருமுறை எழுதுவேன்

This entry is part of 34 in the series 20100206_Issue

நடராஜா முரளிதரன்


நான் சிறு பையனாக
இருந்தவேளை
எனது அம்மம்மா சொல்வாள்
தான் பிறந்த வாழ்ந்த
ஓடு வேய்ந்த
சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி

ஊடுருவி உறைந்து
காலக்கண்ணாடியில் படிந்து
சடத்துவமாய் காட்சி தந்து
மூலக்கூற்றுக் கவர்ச்சி விசையிலிருந்து
பிரிந்து அவை
எங்கே செல்ல முடியும்

அந்தவேளையில்
அது அழிக்கப்பட்டு
அதன்மீது குந்தியிருந்தது
இன்னுமோர் சீமெந்துக் கட்டிட வீடு

என்னுள் அடங்கிய
ஆர்ப்பரிப்புச் சுழல்களின்
மூல இருப்பை
சுருங்கிய ஆதாரத்தின்
மைய மோகிப்பை
உந்தித்தள்ளிய விசையின்
திமிறலை
என்னால் எடுத்துரைக்க முடியாது

சூழ இருந்தது தோட்டம்
மா பலா வாழை மாதுளை
எலுமிச்சை வேம்பு பனை தென்னை புளியென
எல்லாமே அங்கு பூத்துக் கிடந்தது
கல் விளைந்த அப்பூமியில்
என் முன்னோர் பயிர் விளைக்க
முனைந்த கதை
கழிவிரக்கத்தால்
இங்கு பாடுபொருள் ஆகியது

எனது அப்பு பென்சனில் வந்து
அந்த மண்ணுக்குள்ளே
புதைந்து கொண்டு
வெளியே வர மறுத்தார்
தனது ஊனினை உருக்கி
ஓர் தவம் புரிந்தார்
பச்சைத் தாவரங்களின்
தழுவல்களுக்கிடையில்

சேர்ந்து சுகித்த
காலங்களின் வதையை
மோதி உராய்ந்து
சுக்கிலத்தைச் சிதறியும்
கலத்தில் ஏற்றியும்
ஏறியும் புரண்டும்
உச்சத்தில் ததும்பியும்
மது வேண்டியும்
திளைத்து நின்ற
இழந்த அந்த மண்ணின்
வரலாற்றை
நான் எப்படியும்
இன்னுமொருமுறை எழுதுவேன்

Series Navigation