எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற தலை

This entry is part of 31 in the series 20091211_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இந்த ஆட்டத்தை எதிரிகள்

தந்திரமாகவும் வஞ்சனையோடும் ஆடினார்கள்.

சூழ நின்று மாறி மாறி தாக்கினார்கள்.

தாகித்தபோதும் மூச்சிறைக்க களைத்தபோதும்

ஓய்வெதுவும் தராமல் ஆட்டம் தொடர்ந்தது.

நடுவர்களாய் நின்றவர்கள்

எதிரிகளோடு கால் கோர்த்துக் கொண்டு

எனக் கெதிரான வன்முறையை பிரயோகித்தார்கள்.

என்னை மிதிமிதியென மிதித்தார்கள்.

விரல்நரம்புகளிலும் முட்டுக்காலிலும் ரத்தம் வழிந்தது.

ஆட்டத்தைப் பார்க்க கூடிநின்றவர்களுக்கு

எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை.

தாங்களே மிதிப்பதாகவும்

ஜெயிப்பதாகவும் உருவகித்துக் கொண்டார்கள்.

ஆட்டம் முடிவடையும் தருணத்தில்

என் உடலின் பலத்தையெல்லாம்

சேர்த்துக் கட்டிக் கொண்டு உதைத்து தள்ளிய பந்து

தீராத வெறியோடும் மூர்க்கத்தோடும்

எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்கிறது.

என் எதிரிகளின் தலைகளில்

ஒன்றுஅதில் நொறுங்கிக் கிடந்தது.

நன்றி

வார்த்தைமாத இதழ் டிசம்பர்2009

Series Navigation