யானைகளை விற்பவன்

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

ஹெச்.ஜி.ரசூல்


அவ்வப்போது மலைச்சாமி
யானைகளை விற்பதற்கு அத்தெருவழியே வருவான்.
ஆனால் யானையை அவன் காண்பித்ததே இல்லை.
யானை வேண்டுமோ யானையென
என்றோ ஒருநாள்
யானை விற்பவன் குரலைக் கேட்டபோது
ஒரு சாக்குப்பையில் யானையைக்கட்டி
விற்பதற்கு கொண்டுவருவதாக
கற்பனை செய்து கொண்டேன்.
வனாந்திர நடுவெளியில் பெருமழைவரும்போது
யானைவிற்பவன்
தான் கொண்டுவந்த யானையோடு
எங்குஒதுங்குவான்.
நண்பர்கள் எவரும் நம்பவில்லை
ஒரு உயிருள்ள யானையை
நான் பார்க்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார்கள்.
யானையின் மீது உட்கார்ந்து
அரசல குடை பிடித்து வலம்வரலாம்.
ஆனால் யானையைப்பிடித்து
தோளில்தூக்கிப்போட்டு விற்கவரமுடியாது
யானைவிற்கும் மலைச்சாமி கூறியிருக்கிறான்.
கீழத்தெருவில் எட்டாம்நம்பர்வீட்டுப் பெண்
ஒரு வெள்ளையானை வேண்டுமென்றாள்
கொண்டுத்தருவதாய் உறுதியளித்துச் சென்ற
யானைவிற்பவன்
ஒவ்வொருதடவையும் உறுதி கூறிவிட்டு செல்கிறான்.
மேலத்தெருவில் பதினேழாம் எண் வீட்டில்
ஒரு சிறுவன்
பறக்கும் யானை வேண்டுமென்றான்
இல்லையென்று சொல்வதே இல்லை.
விரைவில் பறக்கும் யானையை கொண்டுவந்து
உங்கள் வீட்டு முற்றத்தில் கட்டுகிறேன் என்றான்.
வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்த
நாகேஸ்வரிபாட்டி
தான் முன்பு ஐந்தாம்வகுப்பில் படித்த
புத்தகத்தின் கதையில்வந்த
குருடர்கள் பார்த்த
அந்த யானைதான் வேண்டுமென்றாள்
கதையில் படித்த யானையை
எப்படி நேரில் கொண்டுவருவதென
குழப்பமடைந்து நின்றிருந்தான் மலைச்சாமி.
தனக்குமுன்னே சுவரில்
எறும்பாக உருவெடுத்து
யானையொன்று ஊர்ந்து சென்றது
மலைச்சாமிக்கு தெரியவே இல்லை.

நன்றி

வார்த்தைமாத இதழ்

டிசம்பர்2009

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்