பாத்திரத் தேர்வு

This entry is part of 41 in the series 20091009_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


வீதி முனையில்
புதிதாய் முளைத்திருந்தான்
பாதி காலினை
விபத்தொன்றில்
பறி கொடுத்த
வாலிபன் ஒருவன்.

அனுதினம் காலையில்
பேருந்துக்குக் காத்திருக்கையில்-
முடங்கிவிட்டவனைச் சுற்றிக்
காணக் கிடைத்த
காட்சிகள் யாவும்
கடவுளின் கருணையை
எண்ணி எண்ணி
வியக்கவும் மெச்சவும்
வைத்தன மற்றொருவனை.

போவோர் வருவோர்
கொடுத்துப் போனார்
அணிவதற்கு ஆடைகள்
குளிருக்குப் போர்வைகள்
உண்பதற்குப் பொட்டலமாய்
அவரவர் வீட்டிலிருந்து
விதவிதமாய் உணவுகள்.

‘என்வயதொத்த இவனுக்கு
எந்தவித சிரமுமில்லாமல்
இருந்த இடத்தில்
எல்லாம் கிடைக்க
அருள்பாலிக்கும் இறைவன்-
என் தேவைகளையும்
இப்படி நிறைவேற்றி
வைத்திட்டால்…’
நினைப்பே இனித்தது
நெஞ்சம் ஏங்கியது.

வாழ்க்கை எனும்
நிசமான மேடையில்
விதிக்கப்பட்ட ஆயுள்
எனும்
கால அவகாசத்தில்
நமக்கான பாத்திரங்களை
எப்போதும்
ஆண்டவனே
தீர்மானிப்பதில்லை.
வேறு எவரோதான்
தேர்வு
செய்வதுமில்லை.
உதவுபவராய்
இருக்க விருப்பமா?
உதவி பெறுபவராய்
ஆகிட ஆசையா?
நம் கையில்!
நம் மனதில்!
*** ***

ராமலக்ஷ்மி, பெங்களூர்.

நன்றி: ஜூலை 2009, ‘வடக்குவாசல்’ மாத இதழ்.

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation