ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

‘ரிஷி’



பனி கனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச் சாலையில்
அவர்களிருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்…
இரண்டு ஆண்கள் அல்லது ஓர் ஆண் ஒரு பெண்….

மொட்டைமரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறைபனி
ஆயிரங்காத தூரத்திற்கப்பால்
இங்கு விறைத்துப்போகச் செய்கிறது கைகால்களை.
வழக்கம்போல் எதிர்வினையாற்றும் மனம்
நுரைத்துப்பொங்குகிறது.

உலகம் உருண்டை என்பது பொய்;
அது ஒரு நீள்பாதை.
எதிரும்புதிருமாய் நாம் வந்துபோய்க் கொண்டிருக்கிறோம்
ஒரேமுறையான சந்திப்பில்.
இன்று நீ படுகொலை செய்யப்படுவதை நான்
பார்க்கநேராதிருந்ததற்காகவும்
நாளை ஒரு கடுஞ்சொல்லில் என் தலை கொய்யப்படப்போவதை
நீ அறியாமலிருப்பதற்காகவும்
நம் நன்றிகள் உரித்தாகட்டும்
நமக்கும் பிறர்க்கும்.

நாம் எட்டவிரும்பும் இலக்கு
இறந்துவிட்டவர்களின் உறைவிடங்களைக் கண்டறிவதும்
அவர்களை மீண்டும் இளமையாக்குவதும் தவிர்த்து
வேறு என்னவாக இருக்கவியலும்?

நிலவில் நீரிருக்கிறதா என்று பார்ப்பதை விட அவசியம்
அதற்கு வேறுவிதமான காலப்ரமாணம் உள்ளதா என்பதைக் கண்டறிவதும்,
அதை செப்பு, தங்க நாணயங்களும் , கரன்சியும், காசோலைகளும்
கட்டுப்படுத்தவியலாதவண்ணம் கட்டமைப்பதும்,
பல்லுயிர்களும் முழுவிழிப்போடு மரணத்திற்குள் மூழ்கி மீள
வழிசெய்வதும்,
வனவிலங்குகளும் மனிதர்களும் அருகருகாய்
இருந்துவருவதும்….

இன்னமும்
பனிகனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச்சாலையில்
அவர்கள் அடுத்த அடி எடுத்துவைக்கவில்லை.

ramakrishnanlatha@yahoo.com
*

Series Navigation

ரிஷி

ரிஷி