தன்மை

This entry is part of 44 in the series 20090813_Issue

‘ரிஷி’


என் கழுத்தைச் சுற்றி
நாய்ப்பட்டையிட்டு
இழுத்துக்கொண்டு போகும் எத்தனம்
எந்நாளும் உங்களிடம்…
இயல்பான சுதந்திரவுணர்வோடு
திமிறி நழுவிச் சென்றால்
அன்று தந்த இரண்டு பிஸ்கோத்துகளை
சொல்லிக் காட்டி
“நன்றி கெட்டது”
என்று நாவால் கல் வீசுகிறீர்கள்.

கோழிக்கோ, காக்கைக்கோ, புறாவுக்கோ
ஏதோ ஒரு சமயம்
பிடி தானியம் இறைக்கிறீர்கள்.
நாய்க்கு சில நேரங்களில்
சில ரொட்டித்துண்டுகள்.
மிருகக் காட்சி சாலைக்குச் செல்லும்போது மட்டும்
குரங்குகளின் கூண்டுகளுக்குள்
கடலை பட்டாணிகள் சில…
என்னை நோக்கி மட்டும் ஏன்
எப்போதுமே வார்த்தைகளை
வீசியெறிந்தவாறிருக்கிறீர்கள்?

சம எடையற்ற அளவுகோல்களைக் கொண்டு
சந்தையில் கடைபரப்பும்
சக வியாபாரிகள் நாம்.
காய் அளப்பதில் சிலர்
கூடக்குறைய.
வேறு சிலர்
வாயளப்பதில்.
நாய்ப்பிழைப்பு நம் பிழைப்பு
என்பதாய்
ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டால் அது
ஆதங்கத்தில் விளைந்த வேதனைப் பகிரல் .
“நானே புனிதன்; நீ புறம்போக்கு”
என்றால் அது
அநியாயப் புளுகல்.

“உன்னை வழிநடத்த நானே தகுதிவாய்ந்தவர்”
என்ற தன்னிலை விளக்கத்தோடு
கிளம்பி வருகிறீர்கள்
சேணமும் கடிவாளமுமாக.
அடிக்கச் சாட்டையுமுண்டு.
ராஜபாட்டையில் கூட்டிச் செல்வதாய்
என்னை வண்டியில் பூட்டப் பார்க்கிறீர்கள்.
அப்பால் விரையும்
என் கண்முன்னே கிளைபிரிந்து கிடக்கின்றன
ஆயிரம் பாதைகள்!
முளைக்கின்றன புதிதுபுதிதாய்!
காலம் ஓர் ஆரவாரமற்ற ஆசானாய்
கற்றுத் தருகிறது ஏராளம்.
உம் போன்றவர்களிடமிருந்தும் படித்துக்
கொண்டிருக்கிறேன்_
என் சுயாண்மையை.

ஓடும் பரவசத்திற்காய் ஓடிக் கொண்டிருக்கிறேன்!
ஓடும்போது கால்களில் கண்கள் திறக்கின்றன!
கூடுதல் இதயமொன்று துடிக்க ஆரம்பிக்கிறது!
கண்ணிமைப்போது அண்ணாந்து பார்க்க
என் ஆனந்தம் நீலவானில்
பிரதிபலிப்பதைக் காண முடிகிறது!
கால்களின் ரீங்காரம் வெளியெங்கும் பரவுகிறது!
ஓட்டம் பறத்தலாகி மிதத்தலாகும்
உற்சவப் பொழுதில்
பெருகும் இதம்
விருதுகளுக்கப்பால்!

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation