தூரதேசத்திருந்து

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

கவிதா (நோர்வே)


தூரதேசத்திருந்து
ஈழத்தமிழர்கள் பேசுகிறோம்


உங்களுக்காகவே
நாங்கள் உரத்தெழுகின்றோம்

கைவிடமாட்டோம்!

எங்கள் மனங்களில்
தமிழ்ஈழம் மலர்ந்தாயிற்று
பயந்துவிடாதீர்கள்
எங்கள் மண்ணைவிட்டு
நகர்ந்து விடாதீர்கள்

சீறிவரும் குண்டுகள்
நிறுத்தக்கோரி
எங்கள் பிஞ்சுகள்
போராளிகளாய்
இங்கேயும் வளர்ந்துவிட்டார்கள்

நாட்டில் எம் போராளிகள் யார்?
மக்கள் தானே
மக்களே நீங்களும்
போராளிகள் தானே
மனம் தளராது
எதிர்த்து நில்லுங்கள்
தோட்டாக்களை.

உங்களுக்காக
நாங்கள் இருக்கிறோம்

அங்கே எம் போராளிகள்
உங்களோடு இருப்பது
உங்களைக் காப்பதற்கே
அவர்கள் சொல்வதைக்
கவனத்துடன் கேளுங்கள்

இராணுவம் உங்களைப்
பிணக்குவியல் செய்யும்
பயந்துவிடாதீர்கள்
எஞ்சியவர்களே எப்படியேனும்
நிழல்படங்கள் அனுப்பிவையங்கள்
உலக நாடுகளுக்கு எடுத்துரைப்போம்
பிரச்சாரத்துக்குரிய காலமிது

உங்களால் அங்கு
பேசமுடியாதென்பதை
நாங்கள் நன்கறிவோம்
அதனால் உங்களுக்கும்
சேர்த்து நாங்களே பேசுகிறோம்
வாக்களிப்பும் நாமே செய்வோம்

எம் ோராளிகளின்
பயங்கரவாத முத்திரையை
அப்புறப்படுத்துவோம்
அதுவரை
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்

குண்டுகளுக்காய் பயந்துவிடாதீர்கள்
நகர்ந்து விடாதீர்கள்


இராணுவப் பேய்களிடமும்
ஒப்படைத்துவிடாதீர்கள் உங்களை
பெண்களை நிர்வானமாய்
பிரித்துன்னும் பிடாரிகள்
அவர்கள்
உருப்புகள் கொய்த்து
உயிர்பெற்று வாழ்பவர்கள்

தெரியாத பேய்களிடம் போய்
ஏன் மாட்டிக் கொள்வான்

இடவசதியோ
அடிப்படை வசதியோ
இல்லையங்கு

பாதுகாப்புவலையத்தில் இருந்து
பறந்து போனவர்களே
எந்த உதவியும் உங்களுக்கு இனி
நாங்கள் செய்தால்
அரசாங்கதை எப்படி குற்றவாளியாக்குவது
தமிழ்ஈழத்தை எப்படி வென்றெடுப்பது
அதனால்
கொஞ்சம் பொறுத்திருங்கள்

உங்கள் மனங்களை
நாங்கள் அறிவோம்
கடும் குளிரிலும்
மழையிரவிலும்
நாங்கள் போராடுவது
உங்களுக்காகவே

எங்கள் மனங்களில் இங்கே
என்றோ மலர்ந்துவிட்டது
தமிழ்ஈழம்!

இத்தனைநாள் தவம்
கலைத்துவிடாதீர்கள்.
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்

விருட்சம் பிடுங்கி
உங்கள் வீட்டு
முற்றத்தில் நாட்டுவோம்
நாங்கள்!

-கவிதா (நோர்வே)

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே