தழும்பு வலிக்கிறது

This entry is part of 26 in the series 20090416_Issue

சக்தி சக்திதாசன்
மனமெனும் ஆழியினுள்
பார்வையெனும் தூண்டிலிட்டு
இதயத்தைக் கொள்ளையிட்ட
இனியவளே உன்னைத்தான் …..

வாலிபத்தின் எல்லையிலே
வலது காலை வைத்தபோது
நீ விரித்த வலையினிலே
நான் விழுந்த வேளையிலே

காதலென்னும் பாடலுக்கு
கனவுகளை இசையாக்கி
நினைவென்னும் ஓடத்திலே
படகொன்றில் மிதக்க விட்டேன்

உணர்ச்சிகளை வேடிக்கையாக்கி
நீ தைத்த முட்களினால்
காகிதப் படகதுவும்
கவிழ்ந்தங்கு மறைந்ததம்மா

இதயமென்னும் வீணையிலே
உணர்வுகளைக் கூட்டி
முதன் முதலாய் அவனிசைத்த
முகாரி ராகம் அது

காலம் என்னும் களிம்பு தடவி
காயம் தன்னை மாற்றினாலும்
கடந்து விட்ட நினைவுகளால்
தடவு போது ஏனோ
தழும்பு கொஞ்சம் வலிக்குதடி


http://www.thamilpoonga.com

Series Navigation