காக்கைப் பாடினியின் பேச்சு/ எனது கடவுளின் மரணம் நிகழ்ந்திருக்கிறது

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

ஹெச்.ஜி.ரசூல்



நான் காக்கைக் குரல்களை சேகரித்து

ஒரு குயில் செய்தேன்.

காக்கையின் வடிவத்தில் குயிலின் குரலும்

குயிலின் வடிவத்தில் காக்கையின் குரலும்

இரண்டும்கெட்டானாய் இருந்தது.

இறுதியாக நான் எழுதிய கவிதையிலிருந்தும்

ஒரு காக்கை பறந்து சென்றது.

காக்கைக் குரல் பிடித்துப் போக

பெருவெளியில் சுற்றியலைந்து

கானகத்தில் உறைந்தேன்.

எங்கிருந்தோவந்த காக்கைப்பாடினி

என் உடலை இறுகக் கட்டியணைத்து

ஒரு முத்தம் தந்தாள்.

பல காலமாய் அலைந்து திரிந்து

வீடு திரும்பி

அறைக்கதவைத் தட்டுகையில்

என்னோடுவந்த கருங்குருவியை

அணைத்துக் கொள்கிறேன்.

இப்போதெல்லாம்

சன்னல் விளிம்போரம் விழித்தபடி

பறவையின் குரல்களை ஒட்டவைத்து

விதவிதமாய் பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஹெச்.ஜி.ரசூல்

நான் கொடுத்த புகார்மனுக்கள்

எதையும் வாசிக்காமலேயே

எனது கடவுளின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

என் கடவுளுக்கு

எப்படி மரணம் நிகழுமென்றேன்..

தற்கொலை செய்ததின் விளைவாய்

அது நிகழ்ந்திருக்கலாம் என்றாய்…

எனக்கு நம்பிக்கையில்லை

நம்பிக்கையை எல்லோருக்கும் வாரி வாரி வழங்கி

ஒரு நம்பிக்கையாகவே வாழ்ந்த என் கடவுள்

தற்கொலை செய்ய சாத்தியமில்லை

கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களை

நிறைவேற்றுவதாய் வாக்குறுதி தந்த கடவுள்

துன்பப் பெருக்கிலிருந்து

மக்களை விடுதலை செய்து

பலருக்கு உருவத் தோற்றத்துடனும்

சிலருக்கு உருவமற்றும்

வணங்குதலுக்குரியவராய் இருந்திருக்கிறார்

ஆதிமனிதனுடன் உருவாகி

தொன்மையின் சுவடுகளைக் கடந்து

உயிர்வாழ்ந்த

எனது கடவுளின் மரணத்தை அறிவித்தது

ஒரு பொய்யுரையாகக் கூட இருக்கலாம் என்றேன்.

எனது கடவுளை எதிரிகள் எவரேனும்

தாக்கியிருக்கக் கூடுமோ என்றேன்.

அன்புமயமான கடவுளுக்கு

எதிரிகள் எவருமில்லையே என்றாய்.

கொஞ்ச நாட்களாகவே கவலையிலிருந்தார்

கடவுள்

பச்சிளம் பிஞ்சுகளையும்

மரங்கள் செடிகள் கட்டிடங்களையும்

உருவற்று எரித்தழிக்கும்

பாஸ்பரஸ்குண்டுகள் வீசும் கொலைக்கரங்களுக்கு

ஆதரவும் ஆசிர்வாதமும் அளித்தது

எனது இமாலயத் தவறென்று

தன்னைத்தானே நொந்தும் கொண்டிருந்தார்

கடவுளின்

கடைசி டயரிக் குறிப்புகளைச் சொல்லி

அதிகாரத்திற்கும்

ஆணாதிக்கத்திற்கும்

ஆதரவாயிருந்த கடவுளுக்கு

எதிரிகள் இல்லாமல் இல்லை என்றேன்.

கடவுளின் மரணம்

உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றென்று

மீண்டும் உறுதியாகச் சொன்னாய்.

இந்த மரணம் எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்

கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தாய்.

உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை

இருள் செறிந்த ஒரு நள்ளிரவில்

யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்

என் வணக்கத்துக்குரிய கடவுளை

நான்தான் கொலை செய்திருந்தேன்.

நன்றி
வார்த்தை மாத இதழ் மார்ச்2009

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்