கடவுளின் காலடிச் சத்தம் – 7 கவிதை சந்நிதி

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



1
மீன்கவ்விய உற்சாகம்
ஜிவ்வென எழும்பி
காற்றில் நீச்சல்
2
கிழக்கே சிவப்பு
கிரணம் தொட்டு
பனியின் நாணம்
3
கிழக்கே உருண்ட இடி
மேற்கு நோக்கிப் புரள
நடுங்கும் யானைக் கூட்டம்
4
மழையின் உருமல்
பயந்து நின்றுவிட்டது
காரின் உருமல்
5
கடைசிமூட்டை நெல்லை
அரைக்க எடுத்துப் போக
பார்க்கும் உத்திரத்துக் குருவி
6
உலகம் உறங்க
உறையும் வெண்பனி
ஒற்றைக் கால்தடம்
7
மீனுக்காய்க்
காத்திருக்கும் கொக்கு
வேடிக்கை பார்க்கும் சூரியன்
8
இருட்டிக் கிடந்தது அறை
ஓவெனக்
கண் விழித்தாள்
9
சூரிய அஸ்தமனம்
மெல்ல எழும்
கோபுர விளக்கு
10
முதல் தவளை
பாம்பின் வாயில்
ஐயோ என்றது மற்றது
11
ஐயா இந்த விலாசம்
எங்கருக்கு
உங்கள் கையில்
12
தூங்கமுடியாமல் தவளைச்சத்தம்
திடீரென்று நிசப்தம்
போயே போச்சு தூக்கம்
13
குளத்தில் குளிக்க
தயங்கி நின்றான்
வந்தது மழை
14
எல்லாமே இருந்தன
வந்தது இருள்
எதுவுமே இல்லை
15
நீண்டு கிடக்கும் இருள்வெளி
எதைத் தேடுகிறது
காற்று
16
விரைந்தோடும பேருந்து
புழுதி படிந்து
சாலையோரப் பூக்கள்
17
கல்லறைக் கல்லை
நனைக்கும் மழை
இறந்தவர் நினைவுகள்
18
மழையே போ
கெஞ்சும் குஞ்சுகள்
அம்மா இன்னும் வரவில்லை
19
போதி மரம்
உதிர்க்கும் இலை
புத்தனுக்குத் தாடி
20
வானம் நிறம் மாறும்
அற்புதம் காணவில்லை
கூடு திரும்பும் அவசரம்
21
கோவில் வெளியே
நல்ல மழை
ஒவ்வொரு துளியிலும் கடவுள்
22
உரத்துப் பெய்யும் பெருமழை
கிளம்ப மறுக்கும் கார்
பளீரென்று மின்னல்
23
ம் என்றது
கயிற்றுக் கட்டில்
ஆ என்றான் கிழவன்
24
வைக்கோல் கன்றுக்குட்டி
வைக்கோலை உருவித் தின்னும்
நகரத்துப் பசு
25
மொட்டைமாடி நிலா
இறங்கி வந்தேன்
அங்கேயும் தெரிந்தது
26
மரத்திலிருந்து இறங்கியது
ஒரேயொரு பறவையொலி
மிண்டும் நிசப்தம்
27
எத்தனை மலர்கள்
எதில் அமர
திணறும் பட்டாம்பூச்சி
28
காட்டில் கோடாரிச் சத்தம்
காதில் விழவில்லை
மரங்களின் அழுகை
29
செடியுரசும்
எருமை தலையில்
அழகாய்ப் பூ ஒன்று
30
என்ன கூட்டம்
ஆற்றில் இறங்கும் அழகர்
தொலைக்காட்சிப் பெட்டி
31
போக்குவரத்து நெரிசல்
இடமும் வலமும்
பார்த்துக் கடக்கும் பூனை
32
நாய்கள் நிறைந்த தெரு
சத்தமே இல்லை
நாய்வண்டி வருகை
33
பறவைக் கீச்சொலிகள்
டுமீல்
பிறகு நிசப்தம்
34
சரக்கறை இருட்டு
பாலூட்டும் பூனை
கதவைத் திறக்கும் ஒலி
35
பிராய்லர் கோழியின் அலறல்
நடுங்கும்
கூண்டுக்கிளி
36
கோயிலில் திருட்டு
ஆழ்ந்த உறக்கத்தில்
விஷ்ணு
37
ஓயாத வேலை
மகிழ்ச்சியாக இல்லை
தயாராகும் சவப்பெட்டிகள்
38
அம்மைத்தழும்புகள் அழகு
நதிமேல்
பெய்யும் மழை
39
தோட்டப் புதரை
சீர் செய்ய வந்தவன்
மீசை தாடிக்காரன்
40
குரங்கின் கையில் பூமாலை
மேடையேறிச் சொன்னது
25வது வட்டத்தின் சார்பில்…


Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்