‘புகை’ச்சல்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

ராமலக்ஷ்மி


பெங்களூர்
விரலிடுக்கில்
அது
உங்கள் விருப்பம்.
அறவே
அதை
நீங்கள் விட்டிடத்தான்
அரசு வைக்கிறதோ
மறைமுகமாய்
ஒரு விண்ணப்பம்?
‘பொது இடத்தில்
புகைக்கத் தடை’
அது
கிளப்பிய புகைச்சலுக்கு
இருக்கிறதா பாருங்கள்
இங்கே விடை:
“சட்டம் கொடுக்கிறது
சில நிமிடக்
கட்டாய ஓய்வு.
அதனால்
தடை படுவதோ
உங்கள்
ஆயுளின் தேய்வு.”
தனிமனித உரிமை
தவிடு பொடி ஆவதாய்
படபடக்கும் முன்னே-
வருமா
ஒரு சிந்தனை?
உடனிருக்கும் மாந்தருக்கும்
உண்டன்றோ உரிமை-
சுத்தமான காற்றை
சுவாசிக்க?
வீட்டினிலும் கூடத்தான்-
நேசிப்பவரின் சுவாசிப்பில்
மாசினைக் கலந்திடல்
நியாயமா என
யோசித்திட்டால் அருமை!
***
விரல் இடுக்கில்
அது என்றும்
உங்கள் விருப்பம்.
அதை விடுவதா
எனும் சிந்தனையே
பெரும் கலக்கம்.
ஊதும் புகையோடு
உள்ளிருக்கும்
மன இறுக்கம்
வெளியேறி விண்ணோடு
மறைவதாய்
மனம் மயங்கும்.
ஆனால்
உண்மைகள் யாவும்
அறிவுக்குத் தெரியும்.
***
விரல் இடுக்கில்
அது என்றென்றும்
உங்கள் விருப்பம்.
ஆயினும்
அறிவீர் நீரே:
இதயநோயின் உதயத்துக்கு
வாய்ப்பென்றும்-
புற்றுநோய்க்குப் பூத்தூவி
வரவேற்பென்றும்-
பக்கவாதத்தைப் பக்கமே
வரவிடக் கூடுமென்றும்-
சிறுநீரகப் பாதிப்பெனும்
சிக்கலிலே சீக்கிரமே
சிக்க வைத்திடலாமென்றும்.
இத்தனையும்
அறிந்த பின்னும்
எத்தனை நாள்
தொடர்வதென்பதும்
சத்தியமாய்
உங்கள் விருப்பமே.
ஆயினும்
சிந்திக்க நேரமின்றி
கவலைப்பட கணங்களின்றி
ஓடிக் கொண்டிருக்கும்
உங்களைத்
தேடி வந்திங்கு
நினைவூட்டவே
இந்தச் சட்டமென
நினைத்துப் பார்த்தால்
புகைச்சலோடு வந்த
எரிச்சலும் எரிந்திடும்.
***
வாழ்விலே
வேறென்னென்ன
உங்கள் விருப்பம்?
மாறாத புன்னகையை
உறவுகளுக்குத் தருவது?
மனதில்
உறுதி கொண்டால்
மறந்திட
இயலாதா புகையை?
இயலும்
உங்கள் நலத்தோடு
பின்னியது
உங்கள் நலம் நாடுவோர்
நலமும் என்பதை
இதயத்தில்
இருத்திக் கொண்டால்!
*** *** ***

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி