கடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


1
சாத்திக் கிடக்கும் வீடு
தாழ்வாரம் தாண்டும் மழை
பிரிக்கப் படாத கடிதம்
2
வயிற்றின் உருமல்
முள்ளுக்காட்டில் ஒதுங்க
பன்றி உருமல்
3
நல்ல காலம் பொறக்குது
குடுகுடுப்பை வர
கலைந்தது சேவல் உறக்கம்
4
குடிகாரன் மனைவி
பிரசவத்தில் பெற்றாள்
ரெட்டைக் குழந்தை
5
சுற்றிப் பார்க்க வந்த ஊர்
பஸ் பிரேக் டவுண்
அலுப்புடன் பயணிகள்
6
பாலாபிஷேகம் முடிந்தும்
வெள்ளையாகவில்லை
விக்கிரகம்
7
கண்ணுக்குத் தெரியவில்லை
என்றாலும்
நட்சத்திரங்கள் இருக்கவே செய்கின்றன
8
நல்ல காற்று
பூச்செடி அசைகிறது
கல்லறை மேல்
9
பாலை மணல் வெளி
ஒரு ஜோடி காலடிகள்
ஒன்றுக்கொன்று துணை
10
இட்லிக்குத் தொட்டுக்க
சர்க்கரையா
வான இலைப் பரிமாறல்
11
சாக்கடை நாற்றம்
பன்றிக்குட்டிகள் பால்குடிக்கின்றன
கண்மூடி ரசித்தபடி
12
காலிசெய்த வீடு
பத்திரமாய் வைத்திருந்தது
அம்மாவின் அழுகையை
13
மனிதன் பிறந்த பின்
கடவுள் பிறந்தார்
அறிவில்
14
காட்டில் சிதை எரிய
உலை வைப்பாள்
வெட்டியானின் பத்தினி
15
ஆர்வமாய் வந்த மழை
குடைகள் உயர
அடங்கித் திரும்பும்
16
கமலை ஏற்றப்பாட்டு
சலசலக்கும் நீரோடை
தலையசைக்கும் நாற்றுக்கள்
17
அறுவடை முடிந்து
தனியே
சோளக்கொல்லை பொம்மை
18
அழுக்காய் மேகம்
தந்தது
சுத்தமான மழை
19
வெளிச்சம் உள்நுழைய
திறக்கிறது
ஆலயப் பெருங்கதவு
20
மரணப்படுக்கை
கிழவனைச் சுற்றிலும்
ஈக்கள்
21
ஷ் சத்தம் வேணாம்
குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது
திருடனே
22
பொம்மைக்கடை
தாண்டும் மலடி
அம்மா என்றது பொம்மை
23
பிடி நழுவிப் பல்லி விழ
பாய்ந்தோடித் தேடினர்
பஞ்சாங்கம்
24
பஸ்சில் ஓர சீட்காரி
எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்
அவளை
25
கால்மட்டும் சேற்றில்
என்ன வெள்ளை
கொக்கு
26
கொய்த பின்னும் வாசனை
துரோகம் அறியாதவை
மலர்கள்
27
காணவில்லை என் மகன்
தேடி வர வேண்டாம்
கடன் தந்தவர்
28
வர வேணாம் மீன்கள்
தூண்டிலில் துடிக்கிறது
புழு
29
சட்டுவத்து தோசை
யார் எறிந்தார்
வானத்தில்
30
மனைவியை கண்கலங்காமல்
பார்த்துக் கொண்டான்
வெங்காய வியாபாரி
31
சிரிக்கும்போது
கன்னத்தில் குழி
பாட்டி
32
விடியல் வர
இருட்டின் மிச்சம்
கட்டெறும்புகள்
33
கல்லறை முன்னே
கண்கலங்கும் முதியோர்
நாய் அணைத்து சிறுவன்
34
யாமிருக்க பயமேன்
முருகன் சந்நிதி
கரன்ட் கட்
35
மூங்கில் புதர்
பறவைக்கொஞ்சல்
பின்னணி இசை
36
பள்ளிக்குச் செல்லும் குழந்தை
சகிக்கவில்லை
பொம்மையின் தனிமை
37
குப்பை கொட்டி
மேடான கிணறு
வெளியேறும் தவளை
38
குரைக்கிறது நாய்க்குட்டி
கடையில்
நாய் பொம்மை
39
மரத்தைவெட்டி மேஜை
மேஜைமேல்
பூத்தொட்டி
40
நடந்து போகும்
கிழவன்
மேலே உதிரும் சருகுகள்

storysankar@gmail.com>Add sender to Contacts

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்