உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

டீன்கபூர் – இலங்கை


குண்டுமணிகளோடு சேர்ந்து எரிகிறது
மண்.
உன் கூந்தல்; இழைகள் பொசுங்கி மணக்கின்றன.
நீயும் உன் காதலும்
எனக்குள் எரிவதைப்போல.
உன் ஆத்மாவுக்கு யார்தான் கபனிட்டது..
உனக்காகவே எனக்குள்
பொழுது வணங்கியை வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்.
உன் கவிதைகளுக்குள்
நீ பற்றிய கால்களும்
நீ பற்றிய கைகளும்
மிகவும் சுவரஸ்யமாக எழுதப்படுகின்றன.
மண்
எனது பாதங்களையும் மணக்கச் செய்யும்

நான் சொறிந்து காயப்பட்ட நீயும் நானும்

வகுப்பறையில் உன்னை நான் சொறிந்துவிட்டேன்.
நீ அழுது கொண்டிருந்தாய்
உன் விழி வழியே ஒரு கங்கையை ஓடவிட்டிருந்தாய்
உன் உடையில் படிந்திருந்த
அழுக்குப் பற்றிப் பேசினேன்
அவை வாழைக் கசறு
தலையில் தடவும் எண்ணெய்
எனவும் கண்டேன்
அதைப் பற்றிப் பேசினேன்
அறிவுரைத்தேன்.
உன் நகத்தில் தேங்கிய ஊத்தை பற்றியும்
உன் பாடப்புத்தகங்களின் கிளிசல்களையும்
வினவியபோதே
உனக்கு நான் பயங்கரமாகத் தெரிந்தேன்.
நீ அழுதுகொண்டிருந்தாய்.
என்னிடம் நெருங்கிப்பேச தவறி நின்றாய்.
வாப்பாவின் மறு திருமணமும்
உம்மாவின் தனித்த அலைவும்
உன் கண்ணீருக்குள் அழிந்தபோதே
நானும் உன்போல் காயப்பட்டுவிட்டேன்.

எனது விலா எலும்பின் நீ

நீ எனது வளைந்த விலா எலும்பிலிருந்து
படைக்கப்பட்டிருக்கின்றாய்
அல்லாஹ் அதை ஆதாரப்படுத்துகின்றான்.
அந்த உண்மையே
எனது மன வானமெல்லாம்
நீ வானவில்லாக வளைந்து கிடக்கின்றாய்
எனப் பூரிக்கின்றேன்.
வானவில்லின் வளைவுக்குள்
சூரியனைப் பார்.
மிக மகிழ்வாகத் தெரிகிறது.
மிக அழகாகத் தெரிகிறது.

– டீன்கபூர் – இலங்கை

deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை