மெய்யுறு நிலை

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

சாமிசுஸே


இது ஊடலின் நேரம்
இருப்பினும்
உனைக் காணாத் திசைகளில்
நெருடல் முளைக்கிறது
தூரத்துத் தெரிகையில் வருடல்களால் விரிகிறது மனம்

விருப்புக்களின் மீதான விம்பங்களை
எப்படி வகைப்படுத்துவது
இருப்பினும்
சில சமயங்களில்
உணர்வுகளின் வேகங்களை மதியுகம் விழுங்குகிறது

கூடலின் சாம்பலைத் தட்டிவிட்டு
விழிபிதுங்குகிறது காற்று
இக்கணத்தில்
பறக்கத் துடிக்கும் பறவையின் இறகில்
ஓர் புள்ளியாய் தொங்குகிது மனம்

நீயும் நானும் ஒரு துளி பொறிக்குள்
கரைந்துகொண்டிருக்கிறோம்

தனிமை என்ற இருளுக்குள்
என் அகந்தை சிதறித் துடிக்கிறது

எல்லா விருப்பு வெறுப்புகளும் தீர்மானத்தின்படியே
தொலைந்துபோகும் என்பது
வாழ்வைச் சுறண்டி நுகரமுடிகிறது

என் மேனியில் ஊறுகின்ற
எல்லா விம்பங்களும் நீயாய் கரைய
உனை என்னில் எங்கிருந்து தோண்டியெடுப்பது

உன் ஆளுமைச் பதிவை சிலையாய்
நுகர்கிறேன்
கைகளைக்கொடு
வா கடற்கரையோரம் காலாற நடப்போம்

Series Navigation

சாமிசுஸே

சாமிசுஸே