குட்டி செல்வன் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

குட்டி செல்வன்


மழைக் குறிப்புகள்

கேட்பார‌ற்று
எங்கோ கசியும் பாணனின் இசை
அலையாய் வ‌ருடிச் செல்கின்றது மனதை

நேற்று வ‌ந்த ப‌ட்டாம்பூச்சியை
எதிர்பார்த்திருக்கின்றேன்
குழ‌ந்தைக‌ளின் ந‌ம்பிக்கையோடு

இங்கு நிகழ்ப‌வை எல்லாம்
ஏதோ ஒரு தேவையை
மையப்படுத்தியே நிகழ்கின்றன
என்பதைப் புரிந்துகொள்வ‌த‌ற்குள்
என்னை விட்டு வெகுதூரத்தில் நீ

என் த‌னிமையின் பக்கங்களில்
இம்மழைப் பயணங்கள் எழுதுகின்ற
பாவனைகள் நன்றாகதான் இருக்கின்றன
உடலை குளிர்த்துச் சிலிர்ப்பூட்டி
ம‌ன‌தை சற்று இல‌குவாக்கி
ஒருவித வரையறையற்ற மென்மையாக ‌

சிறுவ‌ய‌தில் இருந்த‌தைவிட‌
ம‌ழை இன்று ந‌ல்ல சினேகித‌மாகியிருக்கின்ற‌து
உன்னையும்விட‌

உன் அலட்சியங்களால்
என்னுளேயே மெளன‌மான‌ உண‌ர்வுகளும்
இம்மழைப் போன்ற‌தே

இடையூறுக‌ளின்றி
தொட‌ர்ந்து பொழியும் மழையானது
என்றேனும் பெரும் வெள்ளமாய் உருவாகிச்
சிதைக்க‌க்கூடும் காண்பவை அனைத்தையும்
எவ்விதப் பாகுபாடுகளுமின்றி

மழைக் குறிப்புகள் – 2

ம‌ர‌ங்க‌ள் சூழ்ந்த‌
வ‌ன‌ம் இன்று செழித்துக் கிட‌க்கின்ற‌து
வழக்கத்தைக் காட்டிலும் அதிகப் ப‌சுமையாய்
அருவியின் குளிர்ந்த‌ நீர்துளிகள் கரும் பாறைகளிலிலும்
என் முகத்திலும் விழுந்து உடைகின்ற‌ன
எதையோ முணுமுணுத்த‌வாறு
மலையுச்சியிலிருந்து வ‌ழியும் ஓடை
சில்லென்று பாடிச் செல்கின்ற‌து
பிரிவின் இர‌க‌சியப் பாட‌லொன்றை
இலைக‌ள் சேக‌ரித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌
எண்ணில‌ட‌ங்கா மழைத்துளிக‌ளை
மிகவும் அமைதியாக‌
பொழிந்த‌து போதுமெனக் க‌லைந்தோட‌ முய‌லும்
கார்மேகங்களை இழுத்து உலுக்குகின்றேன்
கொட்டிவிட்டு போகின்ற‌ன
மீத‌மிருந்த நம் பிரிய‌ங்க‌ளை

நானும்
இவ்வ‌ன‌மும் இன்று செழித்திருக்கின்றோம்
இம்ம‌ழையால்

சாலைகளில்
சேறும் சகதியுடனும்
அழுகிய காய்கறிகளின் விரும்பத்தகாத‌ வாசனையுடனும்
போக்குவ‌ர‌த்து நெரிச்சலில் பொறுமையிழ‌ந்தவாறும்
கையில் கறுப்புக் குடையை பிடித்தபடியும்
பெரும் இடையூறாய்த் தொட‌ர‌க்கூடும்
ந‌க‌ரத்துவாசிக‌ள்

இதே மழைகால‌ப்பொழுதை

நான் தனிமை

இங்கு யவருமில்லை
என் யவ்வனத்தின் புனைவுகளைப் பேச
புரளிப் பாடித் திரிய
உறவுகளனைத்தையும் மறந்துவிட்டு
இருக்கின்றேன் இந்த பச்சைக் காட்டுக்குள்
அமைதியாய் ஆரவாரமற்று
மிக இயல்பாய்
இன்று நான்
தனித்தப் பறவை
கடைசி இலையும் உதிர்ந்துவிட்ட மரம்
எஞ்சிய மழைத்துளி
வ‌ற‌ண்ட ஏரியின் உடைந்த‌ப் பிள‌வு
மெளனத்தின் பிரதிபலிப்பு
கொஞ்சம் இயற்கை
ஓர் புதிய‌ வ‌ண்ண‌ம்
ஓர் அசையும் உயிரினம்
எப்போதும் கேட்டிராத‌ இசை
எரியும் ஒற்றைச் சூரிய‌ன்
நான் தனிமை

நிதர்சனங்கள்

ஒரு நீண்ட‌ துக்க‌ இர‌விற்குப் பிற‌கு
சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்த விழைகின்றது
சாம்பல் நிற முகில்கள் போர்த்தியவாறு
உறங்கும் குழ‌ந்தையை போல
அமைதியான அழகான
இம்மழைக்காலைப் பொழுது

தூரலாய் விழுந்து ஓடையாய் வளைந்து
அருவியாய் வீழ்ந்து நதியாய் நகர்ந்து
கடலெனத் திரள முயலும் மழைத்துளிகள் சில
என் முன் உடைந்துத் தெறிக்கின்றன

கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌த்தோடு
க‌ண்ணாடியில் பார்கின்றேன்
நேற்றையப் புல‌ம்ப‌ல்க‌ள் அனைத்தும் ம‌றைந்திருந்தும்
அறையெங்கும் சிதறிக்கிடக்கின்றது என் காதல்
எழுதி அனுப்பாத மடல் குவியலாய்

கையசைவுகளுடன் மென்மையாய் கதைக் கூறும்
என் மகளிடம் போலிப் புன்னகைகளை
பகிர்ந்துகொள்கின்றேன்

சுழன்றுகொண்டேயிருக்கும் மின்விசிறிக்கு
ஓய்வளித்து என் இறுக்கங்களைத்
த‌ளர்த்திக் கொள்கின்றேன்

இக்காலங்களில்
பிழைகளையும் ர‌சிக்க‌ க‌ற்றுக்கொண்டதாய்
என்னையே சமாளித்தாலும்

ப‌த்து கேட்டு
ஒன்றும் கிடைக்க‌வில்லை எனும்போது
ஏமாற்ற‌மில்லையென‌
சொல்வ‌த‌ற்கில்லை

நீல‌ நில‌வு நீல‌ ஒளியுட‌ன்

மழை நின்ற இம்மாலைக் காலங்களில்
என்னைவிட உயரம் வளர்ந்திருக்கும்
கோரைப் புற்கள் காற்றில் சல சலக்கின்றன

மழை நீரில் கரைந்த சம்பங்கி மலர்களின் வாசம்
அறையில் நுழைந்து பரவ
வண்ணங்கள் இறைந்து கிடக்கும்
நவீன ஓவியங்களை நோட்டமிடுகின்றேன்
உனக்கு புரியாத என் உணர்வுகளை ஒத்தவை

நேற்று இருந்ததை போலவே இன்றும்
சலனமற்று நீள்கின்றன‌ இப்பொழுதுகள்

கித்தாரை மெல்ல‌ எடுத்து
அதன் நீண்ட கம்பிகளை மீட்டுகின்றேன்
உயிர் நாளங்களில் ந‌ழுவி வழியும் இசை
வாஞ்சையுடன் அழைக்கின்றது என் இரவை

சுடர்விட்டு ஒளிரும்
அக‌ல்விள‌க்குக‌ளின் வெளிச்சத்தை அணைக்க
தேங்கிய உன் பிரியங்க‌ள் ம‌ட்டும்
போதுமான‌தாக‌ இல்லை என‌க்கு

முற்றத்து வாச‌லில் த‌னியே நிற்கின்றேன் நான்
வ‌ர‌க்கூடும் நீல‌ நில‌வு நீல‌ ஒளியுட‌ன்

மழையின் பாட‌ல்

மழைச் சாலைக‌ளில் ஒழுங்கின்றி க‌லைந்து ஒதுங்கும்
பல‌ வ‌ண்ணங்கள் தோய்த்த‌ ம‌னித‌ர்க‌ளை
அமைதிட‌ன் நோக்குகின்றேன்
தேனீர் கோப்பையுட‌ன்

நினைக்கும்போதெல்லாம் வருவதில்லை
இந்த மழையின் பாட‌ல்
சில நேரங்களில் கேட்க விருப்பமில்லையெனினும்
செவிக‌ளில் விழுந்துகொண்டுதானிருக்கின்ற‌து
குளிர்ந்தக் குரலுடன்
என் வெளிகளில் பரவும‌தை
காற்று நுரைகுமிழியாய் ஊதி உடைக்கின்றேன்
தெறித்துச் சிதறி மறைகின்றன அதன் மெல்லிய‌ வரிகள்
பின் இரத்தம் படிந்த வார்த்தைகளைத் திரட்டி
மீண்டும் பெருகுகின்றது எதிரே க‌டலை போல
மந்திரமாய் கைகளில் அள்ளி எடுத்து
தெளித்து உலர்த்துகின்றேன்
வராண்டாவில் அமர்ந்தவாறு

கடைசி இரு துளிகளில்
உன் இயலாமையை வரைய‌ முய‌ன்ற‌து
உனக்கு ஆச்சரியமளித்திருக்கலாம்

மழை நின்ற ஒரு பிந்தய‌ கணத்தில்
வீதியில் தேங்கிய மீத‌ வரிகளை மிதித்தும்
யாரிடமோ கூவிக்கொண்டும் ஓடுகின்றாய்
பாடல் என்னுடையதென

ச‌மாதான‌ங்க‌ள்

உன் முகத்தை புன்னகையைப் பார்த்து
வெகுநாட்களாகியிற்று

தினங்க‌ள் எப்போதும்போலவே இருக்கின்றன
நேரம் கரைத்து பொழுதுகளை மாற்றி
பசலை நிறம் பூசி
சமயங்களில் மகிழ்ச்சியாக சலிப்பாக அல்லது விகாரமாக

விரைவில் முடிந்துவிடுமென யூகித்து பின்
அருகே நெருங்க நெருங்க இன்னும்
நீண்ட‌வாறே விரியும் சாலைகளில் அலைந்து
த‌ளும்பி திரும்பும் என் ஸ்ப‌ரிச‌ங்க‌ளை
முழுவதும் திற‌க்க‌வில்லை

கன்னத்தை தரையில் அழுத்தி படுத்தவாறு
எரியும் மெழுகுவர்த்தி சுடரை விர‌லால் புர‌ட்டி
நிச‌ப்த‌த்தை அறையில் நிறைக்கின்றேன்

ஒரு சிறு பாதிப்புமில்லாம‌ல்
புகைவ‌ண்டியாய் அருகே க‌ட‌ந்து
வேகமாய் மறைந்து தொலைந்தே போகின்றாய் நீ

க‌வ‌லைக‌ளில்லை வில‌கிச் செல்
உன் ப‌ழைய சில புன்ன‌கைகள் போதும்
என் வெற்றிட‌த்தில் ஏதேனும் எழுதுவ‌த‌ற்கு

சுய‌ம்பு

முற்றிலும் இருள் கரைத்துவிட்ட‌
இர‌வொன்றை சிறு வெளிச்ச‌ம்கொண்டு
க‌லைக்க‌ முயலும் ஒற்றை மின்மினிப்பூச்சியை
கையில் பிடிக்க
ஒளிருகின்றது என் உள்ளங்கை

சகிக்கவில்லையெனினும்
இன்றும் தொட‌ர்கின்ற‌து நிழல்

மூங்கிலாய் வளைந்து கொடுக்கவோ
உன் ப‌ய‌ன்பாடுக‌ளில் ஒத்துழைக்கவோ
எனக்கென ஒரு வரையறையை கட்டமைத்து
அதன் உட்புகுத்தவோ முயலும் உனை
ஒருபோதும் எதிர்ப்பதில்லை நான்

கூட‌ல் காலங்களில்
ஒவ்வொன்றாய் பார்த்து பின்னிய
என் நம்பிக்கையின் நூலிழைகள் அறுந்துவிழும்
உறக்கமற்ற ஒரு பின்னிசிப் பொழுதுகளில்
முகமூடியை கழற்றிவிடுகின்றன
என் சுயங்களின் யானை முகங்கள்

உன் குரல்வளையை இரு கையால் நெரித்த‌வாறு

பூக்களின் சிறுமி

இப்போது எங்கு எப்ப‌டி இருக்கிறாளென்று
தெரிய‌வில்லை

நன்கு உற‌ங்கியவாறு
விழித்திருக்கும் ஒரு காலையில்
மெதுவாக முகிலை வில‌‌க்குவாள்
தனியே ஓவிய‌ம் தீட்டிக் கொண்டிருக்கையில்
துணை வந்து வ‌ண்ண‌ங்க‌ளை தெரிவு செய்வாள்
எப்போதும் சிரித்த‌வாறு
வாய் ஓயாம‌ல் பேசிகொண்டிருப்பாள்
என்னை நிறைய‌ பிடிக்குமென‌
இரு கை விரித்துக் கூறுவாள்
நான் சோக‌மாய் கிடக்கும்‌ த‌ருணங்களில்
அருகே இரு பூக்களை விட்டுச் செல்வாள்
அயராமல் அங்காடிக்கு
என் விரல் பிடித்து நடக்கையில்
அருந்தியத் தேனீரில் சர்க்கரை குறைவென்பாள்
சமய‌ங்களில் வெளிபடும் அவளின்
தெத்துப்பல் புன்னகை அலாதியானது
கண்சிமிட்டும் நேரத்தில்
மின்னலைத் தோற்கடித்துவிடும் அவளை
யாருக்குதான் பிடிக்காது

வார்த்தைகளற்று நிறையும் நீயற்ற இக்காலங்களில்
பிரியாமல் பூனைக்குட்டியாய் என் கால் சுற்றியவளை
என‌க்கும் பிடிக்கும் தான்

தெரிய‌வில்லை
இப்போது எங்கே எப்ப‌டி இருக்கிறாளென்று

நானும் ம‌ழையும்

இந்த மழைக் காலங்களில்
தூரத்தில் தெரிகின்ற‌து மழை

அருகில் வர‌லாம்
காற்றைப் பரப்பி காய்ந்தத் துணிகளை
பறக்கவிட்டு தயார்படுத்தலாம்
மண் வாசனையை அறைக்குள் நுழைக்கலாம்
கூரைகளிலிருந்து நிலத்தில் கொட்டலாம்
இலைகளில் வழிந்து சிதறலாம்
எல்லா திசைகளிலும் வீதியை நிரப்பலாம்
ஒரு குடைக்குள் அடையும்
இரு நண்பர்களின் தருணத்தை இனிதாக்கலாம்
காகித கப்பலுடன் காத்திருக்கும்
என் மகளின் கனவுகளை மகிழ்விக்கலாம்
எனை சிறிது நனைத்து
ஆறுதலளிக்கலாம்

உன் புதிய‌ செய்தியை சுமந்தவாறும்
வண்ணங்கள் தெளித்தவாறும்
வாசல் வரும் வண்ணத்துப்பூச்சியுடன் சேர்ந்து
என் மனமுடைக்கலாம்

ம்ம்… காத்திருக்கின்றேன்
மழைக்கும்
உன் மனமுடைக்கும் செய்திக்கும்

நீயும் அக‌ல‌ ம‌ஞ்ச‌ள் நிற‌ ம‌ல‌ர்க‌ளும்

பெரிய வட்டக் குவளை நிறைய நீரில்
மிதந்து கொண்டிருந்தன
அகல மஞ்சள் நிற‌ ம‌ல‌ர்க‌ள்

தேவைக‌ளேதுமின்றி
விர‌லால் நீரை அலம்பிக்கொண்டிருக்கையில்
தள்ளும் விசையின் திசையிலேயே
நகர்ந்த‌ன கேள்விகள் ஏதும் கேட்காமலே

எழும் சலசலப்புகள்
அறையின் அமைதியை உடைக்க
பின்னும் தொடரவில்லை என் செயலை.

உன் சிறு புன்ன‌கைக்காய் காத்திருக்கும்
என் குவிந்தப் பிரிய‌ங்களை
நீட்டும் ஒரு சாயங்கால வேளையில்
அலட்சியமாய் தட்டி விடுகின்றாய்
வெற்று காரணங்களுடன்

உன் அர‌வ‌ணைப்புக‌ள்
போதுமானதாகயில்லாதப்
பின்னும் தொட‌ர்கின்றேன் என் மீத‌ பொழுதுகளை

நீ நானாகும் பின்னிரவு நேரங்களில்
நான் அகல மஞ்சள் நிற‌ ம‌ல‌ர்களாகி
மிதக்கின்றேன் அதே குவளையில்.

பிரிக்கமுடியாதவை

முல்லை மலரென திடீரென
உன் கரிசனம் தளிர்த்து
நலம் வினவிய‌போது
சிறிது யோசனைக்குப் பின்
பதிலளிக்க விரும்பவில்லை

வெளியேற்றியும் போகாத ஒன்று
அறையில் அடைபட்டிருக்க‌
கத்தி கிழித்துப் பாயும் குருதியில்
வழியும் சில மெளனங்களை
வெறித்து நின்றேன்

உன் செயல்கள் கொஞ்சமும்
பிடிக்கவில்லையென
உதறி த‌ள்ளி போய்விட‌வோ
முக‌த்தில் அறைந்தால் போல் பேசிட‌வோ
சற்றும் ம‌ன‌மில்லை

எனை போலவே
ச‌ன்ன‌ல்வ‌ழி தெரியும் வெளிச்ச‌ங்க‌ளில்
உருமாறிக்கொண்டேதானிருக்கின்ற‌து காலம்

ஆயிர‌ம் முரண்களிருந்தும்
வ‌யிற்றில் குழ‌ந்தையை அம‌ர்த்தி
நீ கொஞ்சி விளையாடும் இத்தருணம்
அழகாய்தானிருக்கின்றது.

ஆறுத‌ல்

மீறி வழிந்த ஒரு சொட்டு
கண்ணீரைத் துடைத்து பின்
சிதறி வெளிறிக் கிடந்த என் நெஞ்சை
சேர்த்து ஒட்டிக் கொண்டேன்.

ப‌ல‌ மைல் தாண்டி வரும்
அழைபேசி ம‌ழ‌லையின்
குறும் பேச்சிலும்

பெயர்தெரியாத‌ சிறுமி
என் விர‌ல் பிடித்து ந‌ட‌க்கையிலும்

ம‌ற‌ந்து கிட‌ப்பேன் உன் முத்த‌ங்க‌ளை.

கவிதை துளிகள்

ச‌மாதான‌மில்லாம‌ல்
ப‌சித்துக் கொண்டிருக்கின்ற‌து வ‌யிறு
எங்கோ நிற‌மில்லாக் காட்டுக்குள்
ம‌ர‌மொன்று உதிர்த்திருக்க‌க்கூடும்
ப‌ழுத்தக் க‌னியொன்றை.

#

ஆட்சேபனைகள் இல்லாத ஒருநாளில்
சூரிய‌னை கைநீட்டிப் ப‌ரித்து
விழுங்கிவிட‌ப் போகின்றேன்
இனி நீங்க‌ள் பொழுதுகளைப் பிரித்து
காலம் ந‌க‌ர்த்துவ‌து க‌டின‌மே.

#

காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதரிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன்.

#

மென்மையாய் தடவி ரசிப்பதற்கும்
வ‌ன்மையாய் பற்றிப் பறிப்பதற்கும்
எவருமில்லையெனினும்
பூத்து உதிரத்தான் செய்கின்றன
காட்டுப் பூக்கள்.

#

நீ இப்படி இருக்கலாமென நானும்
நான் இப்படி இருக்கவேண்டாமென நீயும்
நினைப்பதில் தவறொன்றுமில்லை
எதிர்பார்ப்பதுதான்
மனித இயல்பு என்றானப்பின்

#

இதுவரை என்னைத் த‌விர
எவருமறியாரென நினைத்திருந்த எனக்கு
சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது
இக்க‌ண‌ம் படபடத்துப் ப‌ற‌க்கும்
வெளிர்நீலநிறப் ப‌றவையொன்று
மிக‌ அழ‌காகப் பாடிச் செல்கின்ற‌து
என் காதலை அதன் மொழியில்.

##

இப்பொழுதெல்லாம்
சிரித்து மகிழும் நிமிடங்களிலேயே
சிறுகத் துளிர்த்துவிடுகின்றன
எதிர்வரும் கவலைகளின் பச்சை இளம் நுனிகள்
எவரும் காணாதபடி

Series Navigation

குட்டி செல்வன்

குட்டி செல்வன்