வேத வனம் விருட்சம் 3 கவிதை

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

எஸ்ஸார்சி


ஆசான் சீடன்
நம்மிருவரையும்
இறையருள் காக்கட்டும்
அறிவின் ஆற்றல்
ஆற்றலின் அர்ப்பணிப்பு
அர்ப்பணிப்பின் அறுவடை
நம்மிருவருக்கும் உரியதாகட்டும்
எதற்காகவும் நமக்குள்
வெறுப்பு அரும்பாதிருக்கட்டும். (நராயண உபநிசத் சாந்தி மந்திரம் )

பகலின் கடவுள்
இரவின் இறை
கதிரவனின் பிரியன்
வல்லமைக்குப்பொறுப்பாளி
புத்தியின் மூலம்
எங்கும் நிறைந்த கடவுள்
படைத்தலுக்குப்பொறுப்பு
என எல்லாரும் வருக
நன்மை தருக.
வளியே
கண்கண்ட தெய்வம் நீ
தோன்றும் உண்மையும்
தோன்றா உண்மையும்
நீயென வணங்குகிறோம்
என்னை எனதாசானை
பேரருள் காக்கட்டும்
என்னை எனதாசானை
காக்கட்டும் அப்பேரருள். ( தைத்ரிய உபநிசத் சாந்தி மந்திரம்)


விண்ணகத்தேவர்களே
எங்கள் காதுகள்
நல்லது கேட்கட்டும்
வணக்கத்திர்குரியவர்களே
எங்கள் கண்கள்
நல்லது காணட்டும்
உடல் உறுதி தாரும்
உம்மை வணங்கி எழுந்திடவே
இந்திரன் இனிமை தருக
அனைத்துமறிந்தஅதவன்
மங்கலம் தருக
தீமை விரட்டும்
பறைவைக்கருடன்
நல்லதே தருக
வியாழக்கடவுன் நமக்கு
விழுமியம் அருள்க. (மாண்டூக்ய உபநிசத் சாந்தி மந்திரம்)


வேதத்தின் சிகரமாய்
அதுவே எல்லாமாய்
நிறைந்த ஔங்காரம்
அறிவொளியொடு சேர்க்கட்டும் என்னை
ஆரோக்கியம் பெறுக
என் உடல்
என் நா
இன்சொல் நவிலுக
என் செவிகள்
செவ்வியது கேட்க
அறிவுத்திரையிட்டு
அப்பாலிருப்பவனே
நான் செவியுற்ற
செம்பொருள்
நீங்காதிருக்கட்டும்
என்னை விட்டு. “

வளம் தரு
வள்ளல் வாழ்க
அறம் ஔங்கு
அண்ணல் வாழ்க
மானுடர் எல்லாரும்
நன்மையே பெருக
செடிகொடிகள்
செழித்தோங்கட்டும்
புவி மீது.
இரண்டு கால்கள்
உற்றவை
நான்கு கால்கள்
பெற்றவை
மானுடர் எல்லாரும்
பெறுக மங்கலம். “

நல்லது செய்யவே
விழையும் நமக்கு
காற்று இனிமை தருக
ஒடும் நதிகள்
இன்சுவை நீர்கொணர்க
செடி கொடிகள்
ஔங்குக செழித்து
இரவும் பகலும்
நன்மை தருவிக்கும்
வானகத்தந்தை
இனியன அருள்க
பூமித் தாவரங்கலின்
பொறுப்பான நிலா
இன்பம் பொழிக
பசுக்களின் பால்வளம்
செழிக்கட்டும் பெறுகியே “


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி