தேவைகளின் பார்வைகள்

This entry is part of 35 in the series 20080904_Issue

கோகுலன்


தேவைகளின் பார்வைகள்

அந்த முன்னிரவில்
நானும் அவளும் விடுத்து
அங்கே தெரியுமொரு கடைவாசலில்
எச்சிலிலை கிளறும் நாயும்தவிர்த்து
சொல்லும்படியாய் அரவமேதுமில்லை

மத்திமவயதிருக்கும்..
பொருத்தமில்லாத அலங்காரத்துடன்
சற்றும் ஒவ்வாத வண்ண உடையுடன்
ஏழ்மையும் உடுத்தியிருந்தாள்

பேருந்து வராது
நொந்திருந்த வேளையில்
கடைக்கண் பார்வையுருட்டி
அழைக்கவும் ஆரம்பித்திருந்தாள்

அடுத்த சற்றுநேரத்தில் எல்லாம்
தயக்கமின்றி அருகில் வந்தவள்
வாய்விட்டு விலையும் முனக
முற்றும் புதிய சூழலொன்றில்
மனது மெதுவாய் அடித்துக்கொண்டது

அந்த விலைப்பணத்தின்
அத்தியாவசியம் யோசித்தவனாய்
பணப்பை பிரித்து அவளிடம் கொடுத்தபின்
மௌனமாய் நடக்க ஆரம்பித்தேன்
அடுத்த நிறுத்தம்நோக்கி

ஓரிரு நிமிடங்கள்
நான் போவதையே வெறித்தபின்
சமீபித்த சைக்கிள்நோக்கி மீண்டும் குவிந்தன
அவள் பார்வைகளும் தேவைகளும்


gokulankannan@gmail.com

Series Navigation