ப்ரியா விடை

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

அப்துல் கையூம்


(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு ஓர் இரங்கல் கவிதை)

சுஜாதா .. ..

திருவரங்கம்
திறந்து வைத்த
தமிழ்க் கருவூலம்

மந்திர விரலுக்கு
சொந்தக்காரன்

வாசகனை
வசீகரிக்கத் தெரிந்த
வசீய வஸ்தாது

அந்த
ஆறாவது விரல் .. .. ..
அறிதுயில் கொள்ளச் செய்யும்
நவீனங்களின் ஆதாரம்
நம் இலக்கிய
அகோரப் பசிக்கு ஆகாரம்

புவிவிசையைக் காட்டிலும்
இவன் படைப்புக்கு
ஈர்ப்புகள் அதிகம்

இவன்
எழுத்துக்களுக்கு
எடை குறைவு என்பதாலோ?

சுருக்கெழுத்து
சூட்சமத்தை
சுவீகாரம் செய்த
தட்டச்சுக்காரன் இவன்

வார்த்தைகளை
வீணடிப்பது
இவனுக்கு
பிடிக்காத ஒன்று

எனவேதான்
ஹைக்கூ வசம்
காதலுற்றான் போலும்

கண் + அவன் பெயரை
தன்னோடு இணைக்கும்
பெண்ணினம் உயர்வென்பார்

தன் மனைவியின் பெயரை
தனதாக்கி
பெண்ணினத்திற்கே
பெருமைச் சேர்த்த
பெருந்தகை இவனென்றால்
மிகையன்று ! மிகையன்று !

இவனது
கலையம்சக்
கருத்துக்களை
தலைமுறை
பல பேசும்

அருந்தமிழ் முகத்திற்கு
அறிவியல்
அரிதாரம்
அழகுற பூசியவன்

சாத்தியங்களை
அசாத்தியமாய்த்
தொட்டவன்

விஞ்ஞானப் பார்வையையும்
அஞ்ஞானப் பார்வையையும்
ஒருங்கே பெற்ற ஞானியிவன்

இவன்
எழுத்தும், வாழ்க்கையும்
இரண்டுமே சுவாராஸ்யம்

எளிய நடை ..
இன்பத் தமிழுக்கு
இவன் அளித்த நன்கொடை

அவன் குறு நாவல்கள் ..
நாவல்களுக்கெல்லாம் குரு

ஆங்கிலத்திற்கு
ஷெர்லாக் ஹோம்ஸ்
வாட்சன் என்றால் .. ..
பாங்குடனே தமிழுக்கு
இவன் அளித்த
பாத்திரங்கள் .. ..
கணேஷ் x வஸந்த்

கத்தரிப்பு தேவையில்லா
சித்தரிப்பு – இவன்
கதை சித்தரிப்பு.
முத்தமிழில்
முத்திரை பதிக்கும்
முத்தாய்ப்பு

சிவாஜி இதழில் தொடங்கி
சிவாஜி படத்தில் முடிந்தது
இந்த எழுத்துத் திலகத்தின்
எழுச்சி உலகம்

இலக்கியத்தில்
ஆழ உழுதவன்
இவனில்லை என்றாலும்

மேலோட்டமாய்
இவன் விதைத்த
விதைகளுக்கு
வீரிய சூரணம்
ஏராளம் ஏராளம்

பதவிக்காக
அலைந்தவனல்ல இவன்

வாய்மையே சில சமயம்
வெல்லும் என்ற
யதார்த்தத்தை உணர்த்தியவன்

எதையும் ஒருமுறை அல்ல
பலமுறை யோசிப்பவன்

இவன்
தலைமை செயலகத்தைக் கண்டு
நான் வியந்தது உண்டு

இத்தனை சிறிய மூளைக்குள்
எத்தனை
விபரீதக் கோட்பாடுகள் என்று

கணையாழியின்
கடைசி பக்கங்கள்
கன்னித் தமிழுக்கு
கன்னலெனும் ஆக்கங்கள்

இவன் தமிழ்
அன்றும் இன்றும்
என்றும் பேசப்படும்

அடுத்த நூற்றாண்டும்
இவன் புகழ் பாடும்

“தீண்டும் இன்பம்” தரும்
அவன் .. ..
நாவலைத் தீண்டினால்
ஆவலைத் தூண்டும்

என்ன ஆச்சரியம் ?
கற்பனைக்கும் அப்பால்
கடந்தது சென்றது
இவன் கற்பனைத் திறன்

அவன்
கனவுத் தொழிற்சாலைக்கும்
கணிசமாய்த் தந்தான்
சிந்தனைக்கு உணவு

இவன் தொடாத
துறையில்லை
எனவேதான்
இவன்
கரையெல்லாம் செண்பகப்பூ

வானம் வசப்படும்
வார்த்தைகள்
இவன் வார்த்தைகள்

அம்பலத்தில்
அம்பலமானது
இவன் அசுர பலம்

மேகத்தை துரத்தியவன்
இன்று
தேகத்தைத் துறந்து
எந்த மேகத்தை
துரத்தப் போனானோ
தெரியவில்லை.

மிஸ் தமிழ்த் தாயே
நமஸ்காரம் என்றவனை
தமிழ்த்தாய் மிஸ் பண்ணுவாள்
என்பது மட்டும் திண்ணம்

ஜீனோமைக் காணோம் என
ஜீவராசிகளும் இனி
குரல் எழுப்பும்

நீர்க்குமிழிகள் அல்ல
இவன் வாழ்க்கை.
நீங்காத தாக்கத்தை
விட்டுச் செல்லும்
இவனது ஆக்கங்கள்

ப்ரியா தந்தவன்
ப்ரியா விடை
பெற்று விட்டான்

உரையாடலுக்கு
உயிர் கொடுத்தவன்
உயிர் நீத்து விட்டான்

மூன்றெழுத்தில் இவன்
மூச்சிருக்கும் – அது
முடிந்த பின்னாலும்
பேச்சிருக்கும்

vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்