பட்டுப்பூவே !

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

ருத்ரா (இ.பரமசிவன்)


பட்டுப் பூவே..உன்னை
தொட்டுப்பார்த்த எங்கள்
விரல்கள் எல்லாம்
பிருந்தாவனம்.

நீ சிந்திய
மழலைகளால்
எங்கள் கூடம் எல்லாம்
நவரத்தினக் கூடம்.

உன்
முகம் காட்டும்
காட்சியில்
ஆயிரம் பௌர்ணமி.

நீ
சப்பாணி கொட்டி கொட்டி
கவிழ்த்த இந்த
நட்சத்திரக்கூட்டங்களையெல்லாம்
எந்த ராசியில் சேர்ப்பது ?
விழி பிதுங்கிய
பஞ்சாங்க புத்தகம்
பதுங்கிக்கொண்டது.

ஒரு விரல் நீட்டி
செங்கோல் காட்டினாய்.
உன் புன்னைகையின்
ஆட்சி இது.

ரோஜாவனங்களே
கூஜா தூக்கிக்கொண்டு
உன் பின்னால் ஓடிவரும்
கொள்ளை அழகு அல்லவா
உன் அழகு!

உன்னால் இந்த ஆடைகளும்
தன்னை
அலங்கரித்துக்கொள்ளட்டுமே
என்று
துணிக்கடைகளுக்கு சென்றோம்.
அன்று ஒரு நாள் முழுவதும்
அலைந்தது தான் மிச்சம்.
அமெரிக்கதேசத்து
“மால்”கள் எனும்
இராட்சத கட்டிடங்கள்
தூசி படிந்து அல்லவா கிடந்தது.
எங்கள் தங்க நிலவுக்கு
தரமான ஆடை
அங்கே இல்லையாம்.

உன் அம்மாவையும் அப்பாவையும்
அண்ணனையும்
கூடவே
உன் ஆச்சியையும் தாத்தாவையும்
அன்பின் குழைவோடு
நீ போர்த்துக்கொண்ட போது தானே
தெரிந்தது
அதுவே உன் பொருத்தமான
ஆடை என்று.!

பிஞ்சு ஓவியமே
உன் பிஞ்சு விரல்களை
உயர்த்திக்காட்டி
உயர்த்திக்காட்டி
எழுந்து நிற்பாயே
அந்த விரல்கள் எல்லாம்
மின்னல் ஒளிந்து விளையாடும்
தூரிகைக்காடுகள்.

புரிந்து கொள்ளக்கூடாது
என்றே
கள்ளப்புன்னகை உதிர்ப்பாயே
அந்த
மாய ஓவியத்தைக்கண்டு
புரிந்து கொள்ளக்கூடாது
என்றே வரையும்
பிக்காஸோக்கள் கூட…கைகளை
பிசைந்து நிற்பார்கள்
புரியவில்லையே என்று.

உன் சிறு சிறு நடையின்
சிலிர்ப்பு ஓவியங்களை என்ன சொல்ல ?
உன் “சிற்றன்ன நடையே”
ஒரு சித்தன்ன வாசல்.
அஜந்தா எல்லோரா
எல்லோரையும் வியக்கவைக்கும்.
நீ அசைந்தால்…அந்த
அஜந்தா எல்லோராக்களும்
வியந்து போகும்.
ஒரு சின்ன வள்ளுவர் கோட்டம்
வீட்டுக்குள் வந்தது போல
ஆடி அசைந்து வரும்
அற்புத தேர் அல்லவா நீ !

உலகத்தின் ஏழு அதிசயங்களையும்
திரட்டி ஒன்றாகத் தந்த
எட்டாவது அதிசயம் ஒன்று உண்டு.
அதுவே எங்கள்
சங்கத்தமிழ் இலக்கியம்.
அந்த எட்டுத்தொகைக்குள்ளும்
எட்டாத தொகை ஒன்று உண்டு.
அந்த பத்து பாட்டுக்கும்
பத்தாத பாட்டு ஒன்று உண்டு.
அது என்ன?
அது
எங்கள் “கீர்த்திக் குட்டிதான்”!

கீர்த்திக்கண்ணே! கண்மணியே!
நீடூழி நீடூழி நீ வாழ்க!!
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு நீ வாழ்க!!

(தன் பேத்தியின்
முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு
வாழ்த்தி எழுதிய கவிதை இது.)



ருத்ரா (இ.பரமசிவன்)

Series Navigation

ருத்ரா

ருத்ரா