பாரதிக்கு அஞ்சலி!

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

ஆதிராஜ்


செஞ்சொற்கவிபாடி சேவிக்கும் வேளையிலே
நெஞ்சில் ஏதோ நெருடுவதும் தெரிகிறது!

பாரதியார் அஞ்சலிக்குக்குப் பாரெங்கும் கூடுகிறோம்
நேரெதிரே கேட்கின்றேன்! நில்லுங்கள்! சொல்லுங்கள்!

பாரதத்தின் விடுதலைக்குப் பாடியவர் பாரதியார்!
பாரதத்தில் பிரிவினைகள் பேசுவதும் அஞ்சலியா?

மழலைமொழிப் பறவைகளும் மலைகளும் நம் கூட்டமென்றார்!
மொழிக்கு மொழி வேற்றுமைகள் மொழிவதுதான் அஞ்சலியா?

இளமையில் கல் என்றே எடுத்துரைத்தார் பாரதியார்!
இளைஞரெல்லாம் கல்லெறிதல் எந்த வகை அஞ்சலியோ?

பெண்ணுரிமை வேண்டுமென்று பேசியவர் பாரதியார்!
பெண்பித்துக் கொண்டிளைஞர் பிதற்றுவதும் அஞ்சலியா?

காதலினால் மாந்தர்க்குக் கவிதைவரும் என்றிட்டார்;
‘காதலிகள்’ தேடுகிறேன் கவியெழுத என்பதுவோ?

கலைகள் நிறைந்த கன்னித்தமிழ் நாடென்றார்
சிலைகள் ஒவ்வொன்றாய்ச் சென்று மறைகிறதே!

தீண்டாமை கொடியதெனத் தீட்டிவைத்தார் பாரதியார்
‘ஏண்டா விலகிப் போ’ எனுங்குரல் கேட்கிறதே!

ஊருக்குழைப்பதே யோகமெனச் சொல்லிவைத்தார்
ஊரைச் சுரண்டுவதே உபதொழிலாய்க் கொள்ளுவதா?

சாதிகள் இல்லையெனச் சாற்றினார் பாரதியார்
சாதிகளே இல்லையா? சத்தியமாய்க் கூறுங்கள்.

தனி ஒருவர்க்குணவின்றேல் ஜகத்தையழிப்போ மென்றார்!
மனிதரிலே பட்டினியாய் மாள்வதை நாம் காணலியா?

தாழ்வில்லை! உயர்வில்லை! தாம் ஒன்றே என்றிடிட்டார்
ஏழைக்கும் செல்வர்க்கும் ஏணிவைத்தும் எட்டலியே!

மேதாவியாவதற்கு மேல்நாடும் போ என்றார்1
மேதாவியானார்கள்! தாய்நாட்டை மறந்தார்கள்!

ஒப்பற்ற விஞ்ஞான உயர்கல்வி வேண்டுமென்றார்1
செப்புங்கள்! ஏழைகளால் செலவழிக்க முடிகிறதா?

வயலுக்கு நீர்பாய்ச்சி வளங்காண வேண்டுமென்றார்
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணுக்கே உழைக்கின்றோம்!

அஞ்சலி அஞ்சலி என ஆர்ப்பாட்டம் செய்யாதீர்!
கொஞ்சம் அவர் கனவு கூடிவரப் பண்ணுங்கள்!


Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்