This entry is in the series 20071213_Issue

துவாரகன்



துயர் கவிந்த பொழுதுகளோடு
அலைகிறேன்.
கூட்டத்திலிருந்து தவறிய
தனியன் ஆடுபோல்.

இருப்பது, புசிப்பது, படிப்பது
எப்படி முடியும்?
மனிதர்கள் தவிர்ந்த
நீண்ட பொழுதுகளில்,
நாய்களும், எலிகளும், குரங்குகளுமே
அதிகமும் சந்திக்கின்றன.

கூட இருந்த நண்பனும்
மாற்றலாகிச் சென்றுவிட
மழைக்குச் செழித்த பற்றைகளைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது
கூடவே என்னுடன் இருப்பதற்கு
ஒரு மோட்டார் சைக்கிள்,
ஒரு கைப்பை,
சில புத்தகங்கள் மட்டுமே!
இப்போ இவை என் நண்பர்கள் போலும்.
பேசுவது குறைந்து விட்டதால்
நான் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இருந்து விட்டு
என் நீண்ட மௌனத்தை உடைப்பதற்கு
என் வாய்
ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொள்கிறது.
சொற்களாவது மிஞ்சியிருக்கும் என்பதற்காக…


mskwaran@yahoo.com

Series Navigation