இளையர்கள் இன்று

This entry is part of 33 in the series 20070913_Issue

ரஜித்


தெரியாது என்பதே தெரியாத
இளையர் உலகில்
இன்று இப்படியும் சிலர்

வணங்கா முடிகள்
வண்ண வண்ண முடிகள்
மெழுகு இதழில்
கொழுந்து நாக்கில்
கொக்கிகள் குண்டுகள்
தோல்களில் கோலங்கள்
சல்லடை உடைகள்

யார் இவர்கள்
இளையர்¢ உலகத்தில்
இவர்கள் விரயமா கழிவா

இரண்டுமே சரிதான்
ஒருவனின் விரயம்
இன்னொருவன் ஆதாயம்
விரயம் தவறல்ல
எரிகழிவு இறங்காமல்
ஏவுகணை எகிறாது
கழிவுகளும் இழிவல்ல

அப்படியானால்
கழிக்க முடியாதா இவர்களை

முடியாது
எப்படிப் பெருக்கினாலும்
எல்லாத் தூசும் அகலாது
விட்டுவிடுவோம் இயற்கையிடம்

இயற்கையின் இலக்கணம்
சுழற்சி சுழற்சி சுழற்சி
கோள்களின் சுழற்சி
வாழ்க்கையின் சுழற்சி
என்றோ இறந்த விலங்குகள்
இன்று எண்ணெய்கள்
இன்றைய கழிவுகள்
நாளைய உணவுகள்

யார் கண்டது
தலை முடிக்கு வண்ணம் தீட்டுவோர்
மங்கிவரும் நாளைய
தலைமுறைக்கே வண்ணம் தீட்டலாம்
காத்திருப்போம்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation