பரிட்டவணை

This entry is part of 33 in the series 20070913_Issue

மதியழகன் சுப்பையா


‘கொஞ்சம் வெளியிலிருமா…’
அம்மாவின் வலி வாசகம்
மனம் பிசைக்கும்

கைவிரித்து விமானம் ஓட்டி
வாசல் நுழைகையில்
‘இங்கே வ…ரா…தே…’ என்ற
அக்காவின் கெஞ்சுதலில்
உயிர் துடிக்கும்

‘யம்ம்ம்மா.. ரொம்ப வலிக்கே!’
படுக்கையில் சுருளும்
தங்கை கண்டு
உடல் நடுங்கும்

‘ஒன்னுமில்லடா, நீ போ..’
ஈரக் கண்களுடன்
புன்னகைக்கும் தோழி கண்டு
இரக்கம் சுரக்கும்

‘இன்னைக்கு முடியலங்க’
ரசச்சாப்பாடு தரும்
மனைவி கண்டு
இதயம் துடியாய் துடிக்கும்

இப்பொழுதெல்லாம் நானும்
உடலெங்கும் பல்லறுவா வெட்ட
முட்டுக்கு மேலும் கீழும்
குத்தல் வலியுடன்
அடிவயிற்றைப் பிடித்து
அழுது கொள்கிறேன்.


madhiyalagan@rediffmail.com

Series Navigation