என்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்?

This entry is part of 32 in the series 20070531_Issue

சக்தி சக்திதாசன்


விளக்கு வைக்கும் பொழுது
விழி நிறைய நீரெந்தி
விடையொன்று கேட்கின்றாய்
வினா எனும் அழுகையினால்

நான் கேட்டுப் பிறக்கவில்லை
பொருள் கொண்டு உதிக்கவில்லை
பெற்றோரின் அவசரத்தில் அன்று
பேதையிவள் உதித்த துண்மை

மாளிகையும் தேடவில்லை
மணல்வீடும் கேட்கவில்லை
மனிதராகப் பிறந்ததன்றிப் பாவம்
அந்தப் பெற்றோர்கள் பாவமேதும்
புரியவில்லை

விழுந்து விட்ட இடத்தினிலே
முளைத்து விட்ட காரணத்தால்
வழுக்குகின்ற பாதையொன்றே அவர்
வழியாககக் கிடைத்ததன்று

என்னைப் பார்த்து என் மகனே !
என்ன நீயும் கேட்கின்றாய் ?
என்னுலகில் இருளேதான் நம்
குடத்தில் நிறைவதெல்லாம்
குழந்தையே நம் கண்ணீர்தான்

அன்னை தந்தை தனை அந்தப்
பசி என்னும் அரக்கன்
புசித்து விட்டுப் போன பின்பு
அநாதை என்னும் பெயர் சூடி
அடுத்த வேளைச் சோற்றுக்காக
நடைபாதையோரத்தில் இளமங்கையாக
நானிருந்த கோலத்தில் …….

தன் வெறியைத் தணித்து ஒருவன், உன்
தந்தையெனப் பெயரெடுத்தான்
பசியென்னும் வேதனையைத் தனியாகச்
சுமக்காமல் என் மகனே வயிற்றினிலே
சேர்த்துனையும் சுமந்தேனே….

சோற்றுக்கு அல்லாடும் உயிருக்கு
சொந்தமாய் உனைக் கொடுத்தவன்
சோற்றை வாரியிறைத்து விளையாடும்
சோம்பேறி தன்னினத்தில் சேர்ந்து
சொகுசான வாழ்வு கண்டான்

என்னைப் பார்த்து என் மகனே !
என்ன நீயும் கேட்கின்றாய் ?
நீ கேட்கும் கேள்விகளில் பதிலொன்று
புதைந்திருக்கு; உன் அழுகைச் சத்தத்தில்
என் துயரம் பதிந்திருக்கு

பல கட்சி மாறியாச்சு நாட்டில்
பல சட்டம் இயற்றியாச்சு
சுவாசிக்கும் காற்றின்றி மகனே
பொதுவாக எதுவுமில்லை

உழைத்து வாழும் மனமிருக்கு
எதிர்காலம் நீண்டிருக்கு ஆனாலும்
பணம் படைத்த மனிதர்களின்
மனமெல்லாம் இருண்டிருக்கு

பல படிகள் ஏறி நானும்
புதுப்பாதை தேடியாச்சு
நாளியொன்று தேவையென்றால்
மூலதனமாய் உடலதனைக் கேட்கின்ற
மிருகங்கள் சமுதாயம் நிறைந்ததுதான்
இந்த உலகமடா, அதற்காக அழுது விடு

மேடையில் ஏறியந்த அரசியல்வாதியவன்
முழங்கும் குரல் கேட்கின்றதா?
சுதந்திர பூமியாம் இங்கே எழைக்கு
வாழ்க்கையாம்…….?
காந்தியும், பாரதியும் நகைக்கின்றார்
புகைப்படத்தில் ……
அவர் கண்களில் காண்பதோ….
மகனே நாம் பிரந்த மண் என்னும்
கூசும் உணர்வதனே ……

என்னைப் பார்த்து ….
என்ன கேட்கிறாய் ?
விண்ணைப் பார்த்து நான்
விடுதலை கேட்கிறேன்

Series Navigation