புத்தாண்டு வாழ்த்துக்கள்

This entry is part of 24 in the series 20070412_Issue

சக்தி சக்திதாசன்


சித்திரைப் புத்தாண்டில்
சிந்தை குளிர வாழ்த்தி
சிங்காரத் தமிழர்க்கெல்லாம்
சிறியவன் தெளிக்கும்
கவிநீர் புஷ்பங்கள்

இத்தரை மீதினில் எம்மொழி
பத்தரை மாற்றுத் தங்கமாய்
புத்தொளி வீசி வலம் வரும்
புன்னகை புரிகின்றாள் தமிழ்மகள்

இணையம் என்னும் வானிலே
இணையிலா எழிலுடன் தமிழது
இதழ்களின் வழியாய்ப் பொழியுது
ஈடற்ற சுவையுறு இலக்கியமே

தன்னகரில்லா இளஞ் சிங்கங்கள்
தன்னம்பிக்கை தளரா நெஞ்சுடன்
தமிழின் வளர்ச்சிக்காய் தொண்டுகள்
தன்னலமின்றி ஆற்றுகின்றார்

எத்தளம் தன்னிலும் தமிழன்னை
நித்திலங் குமரியாய் அழகுற
முற்றிலும் தம்மை அர்ப்பணிக்கும்
முத்தமிழ் அறிஞர் வாழ்கவே

வியர்வை சிந்திடும் தோழர்கள்
இரத்தம் சிந்திடும் வீரர்கள்
கருணை சுரந்திடும் அன்பர்கள்
கல்வி தந்திடும் அறிஞர்கள்

பால்மணம் மாறாச் சிறுவர்கள்
பார்வையால் ஈர்த்திடும் கன்னியர்
பண்பை வளர்த்திடும் அன்னைதந்தையர்
பாரினை உயர்த்திடும் பல்வேந்தர்

இத்தனை வளங்களும் கொண்ட
இனிய தாயாம் எம் தமிழன்னை
இன்றவள் கண்டாள் புதுவருடம்
இதயம் கனிய இவன் வாழ்த்துக்கள்

பாலினைச் சுவையுறும் வெல்லம் போல்
பல்மதங்களின் சேர்க்கையும் தமிழினில்
பார்ப்பதில்லை அங்கே பிரிவினை – அன்னை
பொறுக்க மாட்டாள் பாசப் பிரிவினை

நாடுகள் என்றொரு எல்லை தமிழர்
நமக்கினி வேண்டாமே புவியிலே
நலஞ்செய விரும்பும் மனிதர் நாம்
நடப்போம் கைகளை இணைத்தே

தமிழெனும் மாலையில் கோர்த்த
திசையெங்கும் கமழும் மலர்கள் நாம்
தாயவள் புகழை பரப்பியே என்றும்
தரணியில் வாழ்வதெம் கடமையே

வாழ்க ! வாழ்க ! என்னுறவுகள் வாழ்க
வரட்டும் அமைதி என் சொந்தங்கள் வாழ்வில்
வந்த இந்த தமிழ்ப் புத்தாண்டில்
வரட்டும் இனி வசந்தங்களே நம் வாழ்வில்


sathnel.sakthithasan@bt.com

Series Navigation